மங்கள சமரவீர : இலங்கை அரசியலின் அபூர்வமான ஓர் ஆளுமை! - மன்சூர் மொஹமட் 



மங்கள சமரவீரவின் அப்பா மகாநாம சமரவீர ஆரம்பத்தில் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தவர். 1952 இல் அக்கட்சியில் போட்டியிட்டு மாத்தறை தொகுதியில் வெற்றியீட்டிய அவர் 1956 இல்  பண்டாரநாயக்காவுடன் இணைந்து கொண்டார். 1965 ஆம் ஆண்டு வரையில் மாத்தறை தொகுதியை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்தார். மங்களவின் தாயாரும் ஒரு அரசியல்வாதி. மாத்தறை நகர சபையில் 1950 களில் உறுப்பினராக  இருந்து பொது வாழ்க்கையில் பங்கெடுத்தவர். 

மங்கள சமரவீரவின் குடும்பத்தைப் பற்றிய பலரும் அறியாத ஒரு சுவாரசியம் அவர்கள் வல்வெட்டித்துறையுடன் கொண்டிருக்கும் தொடர்பு. அதாவது, பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சாதனை படைத்த 'ஆழிக் குமரன்' ஆனந்தன் மங்களவுக்கு மாமா முறை. அவருடைய அத்தையின் கணவர்.

"எனது அம்மாவிடம் துளியும் இனவாதம் இருக்கவில்லை. சிங்கள - தமிழ் கலப்புத் திருமணங்களுக்கு கடுமையான எதிர்ப்பு நிலவி வந்த ஒரு கால கட்டத்தில் எனது தந்தையின் சகோதரி மானெல் வல்வட்டித்துறை தமிழரான வழக்கறிஞர் குமார் ஆனந்தனை மணம் புரிந்தார். அவர் உலகப் புகழ் பெற்ற நீச்சல் வீரர்... அந்தப் புதிய தம்பதிக்கு முதலில் எங்கள் குடும்பத்தில் இரு கரம் நீட்டி வரவேற்பளித்தவர் எனது அம்மா….. என்னுடைய பல நற்பண்புகளை அவரிடமிருந்தே பெற்றுக்கொண்டுள்ளேன்" என்கிறார் மங்கள.  

ஓர் அரசியல்வாதி என்ற முறையில் மங்கள சமரவீர இலங்கையின் ஏனைய சராசரி அரசியல்வாதிகளிலும் பார்க்க அப்படி ஒன்றும் வித்தியாசமானவராக இருந்து வரவில்லை என்றே சொல்ல வேண்டும். பலம் வாய்ந்த ஓர் அமைச்சராக செயற்பட்ட காலப் பிரிவில் அவரால் நிகழ்த்தப்பட்ட அதிகார துஷ்பிரயோகங்கள் மற்றும் அடாவடித்தனங்கள் நன்கு பிரசித்தம். இரகசியமான அரசியல் பேரங்களை நடத்தி, பலவீனமான தரப்புக்களை மிரட்டி, ஆசை காட்டி, வழிக்கு கொண்டு வருவதில் வல்லவர் அவர். 

ஊடகத் துறை அமைச்சராக இருந்த பொழுது தனது கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வந்த ஊடக நிறுவனங்களை நெறிமுறைகளை அப்பட்டமாக மீறும் விதத்தில் கையாண்டிருந்தார் என்றும் அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் உண்டு.

ஆனால், வேறு சில வழிகளில் அவர் இலங்கையின் மைய நீரோட்ட அரசியலில் செயற்பட்டு வரும் அரசியல்வாதிகளிலிருந்து வித்தியாசமானவராகவே இருந்து வருகிறார். 'அரசியல் சரி நிலைகளை' துல்லியமாக கணித்து, அதற்கேற்ப தனது கருத்துக்களை மாற்றிக் கொள்ளும் ஓர் அரசியல்வாதியாக ஒரு போதும் இருந்து வரவில்லை என்பது அவரை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் சிறப்பம்சம் 

பல சந்தர்ப்பங்களில் சராசரி அரசியல்வாதிகள் நிற்கத் தயங்கும் 'தப்பான இடத்தில்' நின்று, நிர்த்தாட்சண்யமாக தனது கருத்துக்களை சொல்லும் துணிச்சல் அவருக்கு உண்டு. அந்த விடயத்தில் அவருக்கு ஈடாக (தீவிர இடதுசாரி நிலைப்பாட்டில் நின்று செயற்பட்டு வரும் விக்கிரபாகு கருணாரத்ன போன்ற ஒரு சிலரைத் தவிர) எந்த ஒரு அரசியல்வாதியையும் உதாரணம் காட்ட முடியாது. 

தான் ஒரு மாற்றுப் பாலீர்ப்பாளர் என்ற விடயத்தை எவ்வித மனத் தடைகளும் இல்லாமல் பகிரங்கமாக கூறிக் கொள்ளும் அவரது துணிச்சல் முன்னுதாரணங்கள் அற்றது. அரசியல் தற்கொலைக்கு ஒப்பான ஒரு காரியம்.

லிபரல்வாதத்தின் தீவிர ஆதரவாளரான அவர் இலங்கையின் நடுத்தட்டு மக்கள் மத்தியில் பரவலாக வேரூன்றி வரும்  வெறித்தனமான நுகர்வுக் கலாசாரத்தின் கடுமையான விமர்சகர். சைக்கிள் ஓட்டப் பிரியர் என்ற முறையில் வாகனங்களை கொள்வனவு செய்யும் விடயத்தில் இலங்கை மக்கள் காட்டி வரும் அதீத ஆர்வத்தை எள்ளி நகையாடுபவர்.

1994 – 2000 சந்திரிக்கா அரசாங்கத்தில் தொலைத்தொடர்பு அமைச்சராக பதவி வகித்த அவர் அந்த அரசாங்கத்தின் செல்நெறியை தீர்மானிப்பதில் திரை மறைவிலிருந்து ஒரு முக்கிய பாத்திரத்தை வகித்திருந்தார். 1997 ஆம் ஆண்டில்  நாட்டின் தொலைத்தொடர்புத் துறை தனியார்மயமாக்கப்பட்ட மாற்றமே அடுத்து வந்த வருடங்களில் இலங்கையில் தொடர்பாடல் துறையில் ஏற்பட்ட மாபெரும் புரட்சிக்கு வழிகோலியிருந்தது. அதில் மங்கள வகித்த முக்கியமான பாத்திரத்தை எவரும் குறைத்து மதிப்பிட முடியாது. 

1990 களில் மாத்தறை பிரதேசத்தின் முகத் தோற்றத்தையே மாற்றியமைக்கும் அளவுக்கு உள்கட்டமைப்பு வசதிகளை வழங்கி, அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தார் மங்கள. ஆனால், அந்த மாவட்டத்தில் ஒரு போதும் தேர்தல்களில் ஆகக்கூடிய விருப்பு வாக்குகளை அவரால் பெற முடியாதிருந்தது. அது விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் பெரும் துரதிர்ஷ்டம்.  அதாவது, மாவட்டமே ஒரு தேர்தல் தொகுதியாக மாறும் பொழுது, வேட்பாளர்களுக்கு அளிக்கும் விருப்பு வாக்குகளில் பிரதேசவாதம், சாதி போன்ற காரணிகள் முக்கியமாக செல்வாக்குச் செலுத்துவது இயல்பு. மாத்தறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் மட்டும் செறிந்து வாழ்ந்து வரும் (எண்ணிக்கையில் குறைந்த) ஒரு சாதியைச் சேர்ந்தவராக அவர் இருந்து வருவது அதற்கான காரணம். இது எவரும் அதிகம் வெளியில் பேசாத பகிரங்க இரகசியம். 

(தென்னிலங்கையில் வாக்களிப்பின் போது சாதி உணர்வுகள் தலைதூக்குவதற்கு வழிகோலியிருக்கும் விகிதாசார பிரதிநிதித்துவத்தின் விருப்பு வாக்குமுறை கிழக்கிலங்கை முஸ்லிம்களுக்கு மத்தியில் வேறு விதமான ஒரு தாக்கத்தை  எடுத்து வந்துள்ளது. பழைய தேர்தல் தொகுதி முறை அமுலில் இருந்த 1977 வரையிலான காலப் பிரிவில் அங்கு ஓரளவுக்கு நிலவி வந்த பிரதேசவாத உணர்வுகள், விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் அறிமுகத்தையடுத்து உச்ச கட்ட ஊர்ப் பகைமைகளாக வளர்ச்சியடைந்துள்ளன. முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சி பல பிரிவுகளாக பிளவடைவதற்கும் அதுவே முக்கியமாக பங்களிப்புச் செய்துள்ளது.)

பெரும்பாலான அரசியல்வாதிகள் தமது பிரதான ஆதரவுத் தளங்களைச் சேர்ந்தவர்கள் எவற்றை கேட்க விரும்புகின்றார்களோ அவற்றை மட்டுமே பேசுபவர்களாக இருந்து வருகிறார்கள்.  அரசியலில் அது ரொம்ப எளிதான காரியம். 'சனம்' எந்தப் பக்கத்தில் நிற்கிறதோ அந்தப் பக்கம் திரும்பி நின்று கொள்வது. அந்தப் பிழைப்புவாத அரசியலுக்கு நேர் எதிர் திசையில் நிற்பவர் மங்கள. 

இலங்கை அரசியல் சமூகத்தில் (Polity) புனிதப் பசுக்களாக (Sacred Cows)  கருதப்பட்டு வருபவர்களுக்கு – அதாவது, விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் எனக் கருதப்பட்டு வருபவர்களுக்கு – எதிராக அநாயாசமாக தனது கருத்துக்களை பதிவு செய்து வருபவர் அவர். அத்துரலியே ரத்ன தேரரின் புகழ்பெற்ற உண்ணாவிரதத்தின்  போது  கார்தினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அவரைப் போய் சந்தித்திருந்தார். அச்சந்திப்புக் குறித்து கருத்துத் தெரிவித்த பொழுது "இது ஒரு வேண்டாத வேலை…. நாட்டில் ஏற்கனவே எரிந்து கொண்டிருக்கும் இனவாத நெருப்புக்கு மேலும் தூபமிடும் காரியம்" என்று துணிந்து கூறினார் மங்கள. 

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களின் பின்னர் அஸ்கிரிய பீடத்தின் உயர் மட்ட தேரர் ஒருவர் 'முஸ்லிம்களின் வியாபார ஸ்தாபனங்களை பகிஷ்கரிக்க வேண்டும்' என்ற விதத்தில் பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்து, கடும் இனவாதத் தொனியில் கருத்துக்களை முன்வைத்த பொழுது,  அதற்கு எதிராக முதலாவது எழுந்த குரல் மங்களவுடையது. நாட்டில் நிலவி வந்த அதீத இஸ்லாமிய வெறுப்புச் சூழ்நிலையில் (மக்களில் பெரும்பாலானவர்களின் நிலைப்பாட்டிற்கு எதிர் திசையில் நின்று) அவ்வாறு குரல் எழுப்புவதற்கு ஒரு சிங்களத் தலைவருக்கு அசாதாரணமான  துணிச்சல் வேண்டும்.

எப்படி பார்த்தாலும் இலங்கையில் மேலோங்கியிருக்கும் மற்றவர்களை புறமொதுக்கும் பேரினவாத கதையாடல்களின் பின்னணியில், இன ஒற்றுமைக்காகவும், சமூக நல்லிணக்கத்திற்காகவும், மதங்களுக்கிடையிலான புரிந்துணர்வுக்காகவும் உரத்துக் குரலெழுப்பும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒரு தலைவரின் பிரசன்னம் அத்தியாவசியமானது. சிறுபான்மை சமூகங்களின் குரல்களுக்கு மேலும் நியாயத்தையும், வலுவையும் வழங்கக் கூடியது.

அனைவரையும் அரவணைக்கும் ஐக்கிய இலங்கை தேசமொன்று மலர வேண்டுமென்ற கனவைக் கொண்டிருக்கும் அனைவரும் மங்கள சமரவீர விரைவில் குணமடைந்து, மீண்டும் பொது வாழ்க்கையில் பிரவேசிக்க வேண்டுமென பிரார்த்திப்பார்கள் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.