ஹாபிஸ் நசீர் அஹமட் எம்பியின் ஏற்பாட்டில் மட்டு. கல்வியியலாளர்கள் குழு பாக். தூதரக உயர் அதிகாரிகளுடன் சந்திப்பு

எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை முதன்முறையாக பாகிஸ்தானிய அல்லாமா இக்பால் புலமைப்பரிசில் பரீட்சை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் அவர்கள் மேற்கொண்டிருந்தார். 

இந்நிகழ்வில் பாகிஸ்தானின் இலங்கைக்கான தூதுவர் ஆலயத்தின் இரண்டாம் நிலை செயலாளர் (அரசியல் பிரிவு) ஆயிஷா அபூபக்கர் பஹட் கலந்து கொண்டிருந்தார். இதுவரை காலமும் கொழும்பில் இடம்பெற்று வந்த இந்தப்பரீட்சை  கொவிட் தொற்றுக் காரணமாக இம்முறை கண்டியிலும் , மட்டக்களப்பிலும் நடாத்தப்பட்டது. மட்டக்களப்பில் பரீட்சைகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை கவனிப்பதற்காக பாகிஸ்தானின் உயர் கல்வி ஆணைக்குழுவின் திட்டப்பணிப்பாளர் ஜெகன்செப் கான் மற்றும் அவரது குழுவினரும் வந்திருந்தனர். இந்த விஜயத்தில் கலந்து கொண்ட பாகிஸ்தானின் உயர் மட்டக் குழுவிற்கும் கல்வியியலாளர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பை பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நசீர் அஹமட் ஏற்பாடு செய்திருந்தார்.

இலங்கை மாணவர்களின் கல்வித்தர மேம்பாடு குறித்தும் பாகிஸ்தானிய நாடு இலங்கை மாணவர்களின்  கல்வி வளர்ச்சிக்கு உதவிகள் மேற்கொள்வது குறித்தும் இந்த சந்திப்பில் ஆராயப்பட்டது. கிழக்கு மாகாண பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்கள் , விரிவுரையாளர்கள் ,வருகை விரிவுரையாளர்கள், வைத்தியர்கள், இந்த சந்திப்பில் கலந்து கொண்டு கிழக்கு மாகாணத்தில் உயர் கல்வி கற்கும் மாணவர்களின் தேவைகள் மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் எடுத்துரைத்தனர்.பாகிஸ்தான் இலங்கை மாணவர்களின் கல்விக்கு கடந்த காலங்களில் வழங்கி வரும் உதவிகள் மற்றும் புலமைப்பரிசில்கள் ஆகியவற்றிற்கு நன்றி தெரிவித்ததுடன் மேலும்  இதனை விஷ்தரிப்பதற்கு ஆக்கபூர்வமான திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தனர். மேலும் இலங்கை மாணவர்களுக்கு பாகிஸ்தானிய மருத்துவ விரிவுரையாளர்கள் இணையவழியில் கற்பித்தல் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

அல்லாமா இக்பால் புலமைப்பரிசில் பரீட்சையை மட்டக்களப்பு மாவட்டத்தில் நடாத்துவதற்கு சம்மதம் தெரிவித்த  பாகிஸ்தானிய தூதுக்குழுவினருக்கு ஹாபிஸ் நசிர் அஹமட் எம்பி தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.கிழக்கு பல்கலைக்கழகம் மற்றும் தென் கிழக்கு பல்கலைக்கழகம் பாகிஸ்தான் பல்கலைக்கழகங்களோடு இணைந்து செயற்படுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடல் தொடர்பாகவும்  கலந்துரையாடப்பட்டது. மேலும் கிழக்கு மாகாணத்தில் கிரிக்கட் விளையாட்டுத்துறையை  அபிவிருத்தி செய்வதற்கான முன்னெடுப்புக்களையும் மேற்கொள்ள வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர்  ஹாபிஸ் நசிர் அஹமட் எம்பி கோரிக்கை விடுத்தார். 

(Siyane News)


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.