கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்திடம் தற்போதைய பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள சரியான உத்திகள் இல்லை என்று கூறியுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, பணத்தை அச்சிடுதல், கடன் பெறுதல் மற்றும் அரசு சொத்துக்களை விற்பனை செய்வது போன்ற தோல்வியுற்ற மற்றும் காலாவதியான உத்திகளை அரசாங்கம் பின்பற்றுகிறது என்று கூறியுள்ளார். 

இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே மேற்கண்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.

நாடு அபிவிருத்தியடையும் என்ற நம்பிக்கையுடன் இந்த அரசாங்கத்துக்கு வாக்களித்த மக்கள், ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு ஏமாற்றமும் விரக்தியுமடைந்து அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய நிர்பந்திக்கப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.

ராஜபக்ஷ ஆட்சியானது, குறுகிய காலத்துக்குள் மக்களின் அவமதிப்புக்கும் எதிர்ப்புக்கும் உள்ளாகியுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

"இது ஜனாதிபதியின் தனிப்பட்ட குறைபாடு காரணமாக மட்டும் அல்ல. இது நீண்ட காலமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பொருளாதார மற்றும் அரசியல் கொள்கையின் விளைவாகும். தற்போதைய ஆட்சியின் போது நிலைமை தீவிரமடைந்துள்ளது," என்றும் அவர் கூறினார்.

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு டிரில்லியன் ரூபாய் பணம் அச்சிடப்பட்டுள்ளதாகவும் கடந்த வாரம் ஒரே நாளில் 200 பில்லியன் ரூபாய் அச்சிடப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

" சீனா, இந்தியா மற்றும் பங்களாதேஷில் இருந்து கடன் பெற அவர்கள் முயல்கின்றனர். மூன்றாவது தீர்வு அரச சொத்துக்களை விற்பது" என்றும் அவர் குறிப்பிட்டார்.

சட்டத்தின் ஆட்சிச் சரிவு மற்றும் நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கை போன்ற சமூக பிரச்சனைகள் அதிக அளவில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழ் மிரர்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.