A.K. SAFOONA SAHR - University of Kelaniya

சமுதாயமொன்றை வழிநடாத்தவும் கட்டியெழுப்பவும் உதயமாகி தன் தனித்துவமான நோக்கங்களாலும் செயற்திட்டங்களாலும் துரித வளர்ச்சியடைந்து அசைக்கமுடியா அமைப்பாய் திகழும் அனைத்துப்பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியமானது 25 இற்கும் மேற்பட்ட பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ்களையும் மாவட்ட மற்றும் பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 20 இற்கும் மேற்பட்ட இளங்கலை பட்டதாரி அமைப்புக்களையும் இணைக்கும் பாலமாக இருந்துவருகின்றமை நாம் அறிந்ததே.

படிப்படியான வளர்ச்சிகளின் வழியே தனக்கானதொரு நிலையான இடத்தை பிடித்துக்கொண்ட இவ்வமைப்பினுடைய வெற்றிக்கு அதன் நிருவாக குழுவினுடைய வழிகாட்டல்களும் தூண்டுதல்களும் இன்றியமையாதவையாகும். அதன்படி இவ் ஒன்றியத்தின் வரலாற்றிலேயே 2020 ஆம் ஆண்டில் பொறுப்பேற்ற நிருவாகமே அதனுடைய செயற்பாடுகளில் உச்சத்தை தொட்டிருக்கின்றது என்றால் அது மிகையாகாது. 

சமுதாயம் எதிர்நோக்குகின்ற குழப்பநிலைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பது மட்டுமன்றி அனைத்து பல்கலைக்கழகங்களிலும் உள்ள மாணவர்களுக்கும் பயனளிக்கக்கூடிய வகையிலமைந்த கல்விக்கு மேலதிகமான கலை, கலாசார மற்றும் தலைமைத்துவம் ஆகியவற்றை மேலோங்கச்செய்து பல்கலைக்கழக மாணவர்களை ஒரே குடையின் கீழ் இணைக்கும் மையமாகவும் இருக்கின்றது இந்த அனைத்துப்பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியம். இந்த குறிக்கோளை நிறைவேற்றும் முகமாக இதன் ஏனைய நிருவாக காலகட்டங்கள் எதிலும் இல்லாதவாறு இக்காலகட்டத்தில் தான் இவ் ஒன்றியமானது பல தேசிய அமைக்களுடன் கைகோர்த்தமை முக்கிய விடயமாகும். அந்த வகையில், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா (ACJU), தேசிய ஷூரா சபை (NSC), ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில் (MCSL), முஸ்லிம் இளைஞர்கள் சம்மேளனம் (YMMA), இலங்கை முஸ்லிம் ஊடக மன்றம் (SLMMF) போன்ற தேசிய அமைப்புக்களுடன் இணைந்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும் சமுதாயத்திற்கும் உபயோகமுள்ள  பல்வேறு செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது அனைத்து பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியம்.

2௦20 ஆம் ஆண்டு நிருவாகத்தில், இவ் ஒன்றியத்தினால் தேசிய ரீதியில்  வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் ஏராளம். அவற்றுள் “Spade to shade” என்னும் மரநடுகை செயற்திட்டமானது வழமை போலவே 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளிலும் நடைபெற்றது. “முஸாபஹதுல் புர்கான்” எனும் பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையிலான கிராஅத் போட்டி அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவுடன் இணைந்து நடாத்தப்பட்டது. அனைத்து பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ்களின் வரலாறுகளை தொகுத்து பேணும் முகமாக “ஹிஸ்டோரியா” என்னும் போட்டியொன்றை நடத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. “Bright Path” எனப்படும் திட்டத்தின் மூலம் பாடசாலை மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டல் நிகழ்வுகள் மற்றும் கருத்தரங்குகள் மேற்கொள்ளப்பட்டதோடு இவ்வாறான நிகழ்வுகளை காலத்திற்கு காலம் தேவையுள்ள பாடசாலைகளை இனங்கண்டு நடத்துமாறு அனைத்துப்பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியத்தினால் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ்களுக்கு வழிகாட்டப்பட்டது.

சாதரணமான சுமுக நிலைகள் தாண்டி COVID-19 அசாதாரண காலப்பகுதியில் தேசிய ரீதியில் அனைத்துப்பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியமானது பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர்களை அடிப்படையாக கொண்டு மிகப்பிரதானமான ஐந்து திட்டங்களை இயற்றி நடைமுறைப்படுதியமை வாகை சூடப்படக்கூடிய வெற்றியாகும். ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்,பெண் இளங்கலை பட்டதாரிகளை கொண்ட தன்னார்வலர் குழு உருவாக்கப்பட்டமை, E-study என்னும் இணையவழி கற்பித்தல் செயற்பாடு இளங்கலை பட்டதாரி மாணவர்களால் முன்னெடுத்து செல்லப்பட்டமை, உணவுப்பற்றாக்குறையை தீர்க்கும் முகமாக 1000 வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கை திட்டத்தினை தேசிய ஷூரா சபையுடன் இணைந்து மேற்கொண்டமை, பல்கலைக்கழக மாணவர்களது எழுத்தாற்றலை மேம்படுத்தும் முகமாக “வழித்தடம்” என்னும் மும்மொழியிலமைந்த ஆய்வுக் கட்டுரைகளை எழுதும் களத்தை ஏற்படுத்தி கொடுத்தமையும் அவற்றுள் மிகச்சிறந்த கட்டுரைகள் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்படுகின்றமையும் காரணமாக பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்நோக்கும் சவால்களை சமூக மட்டத்திற்கு கொண்டுசேர்க்க முடிவதால் அதற்கான தீர்வுகளை பெற்றுக்கொடுக்கவும் இது ஏதுவாய் இருக்கின்றமை, நடைமுறை பிரச்சினைகளுக்கு ஏற்ற தலைப்புக்களை உள்ளடக்கியதாக 10 இற்கும் மேற்பட்ட “இணையவழி செயலமர்வு தொடர்” மேற்கொள்ளப்பட்டமை. இச்செயலமர்வு தொடரில் பல உலமாக்களும் கல்விமான்களும் கலந்து கொண்டிருந்ததோடு பயனளிக்கும் வகையில் இருந்ததனால் பல்கலைக்கழக  மாணவர்களிடையே வரவேற்பையும் பெற்றன.

பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ்களை அடிப்படையாக வைத்து நாட்டில் ஏற்படுகின்ற தற்கால நடைமுறைப் பிரச்சினைகளை கருத்திற்கொண்டு ஒரு கொள்கை அறிக்கையானது (Policy Statement) அனைத்துப்பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியத்தினால் இக்காலப்பகுதியிலேயே வெளியிடப்பட்டது. இக்கொள்கை அறிக்கையானது 9 விடயங்களை உள்ளடக்கியதாகும். பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ்களும் சமூகத்தினரும் இந்த கொள்கைகளுக்கு பெரிதும் ஆதரவு வழங்கியிருந்தனர். மேலும் 2019 இல் பகிடிவதைக்கும் எதிராக வெளியிடப்பட்ட அறிக்கையானது இக்காலப்பகுதியிலும் மீளவெளியிடப்பட்டு பகிடிவதைக்கு கடுமையான எதிர்ப்பு காட்டப்பட்டது. இந்நிருவாக குழுவின் சிறப்புக்களில் ஒன்றாக 2020 ஆம் ஆண்டு முதன்முதலில் அனைத்துப்பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியதிற்கே உரிய பூரணமான ஒரு அரசியலமைப்பு பல எதிர்கால விடயங்களை கருத்திற்கொண்டு இயற்றப்பட்டது. அதுமட்டுமல்லாது நாட்டின் பலமிழந்த பிராந்தியங்களிலுள்ள பல்கலைக்கழகங்களை ஒன்றிணைத்து தலைமைத்துவ நிகழ்வுகள் நடாத்தப்பட்டன. கல்முனை பிரதேசத்தில் நடைபெற்ற நிர்வாக சபை மற்றும் ஆலோசனை சபை சந்திப்பினை இதற்கு உதாரணமாக குறிப்பிடலாம்.

2020 ஆம் ஆண்டு நிருவாக காலப்பகுதியில் அனைத்துப்பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியமானது ஊடகத்துறையில் பிரம்மாண்ட வளர்ச்சி கண்டிருந்தமை  இதன் வரலாற்றில் மிகப்பெரும் மைகல்லாகும். தொலைகாட்சி நேர்காணல்கள், வானொலி நேர்காணல்கள் மட்டுமல்லாது பத்திரிகைகள், சஞ்சிகைகள் ஊடாகவும் இவ்வமைப்பினுடைய செயற்திட்டங்கள் பகிரங்கப்பட்டதுடன் நாடு பூராகவும் பரவலடைந்து அனைத்துப்பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியம் என்னும் நாமம் எதிரொலிக்க செய்யப்பட்டது. 

தேசிய ரீதியில் முஸ்லிம் மாணவர்களின் பல்கலைக்கழக நுழைவுகளை ஊக்குவிக்கும் முகமாக பல்கலைக்கழக இளங்கலை பட்டதாரிகள் பற்றிய தகவல்கள் திரட்டப்பட்டு, ஒழுங்குபடுத்தப்பட்டு மீள்கையாள்வதற்கும் மாணவர் பல்கலைக்கழக நுழைவு விகிதங்களை கண்காணிப்பதற்கும் “தரவு சேகரிப்பு” (Data Collection) என்னும் செயற்திட்டம் செயற்படுத்தப்பட்டது.

இலங்கையின் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் உயர்கல்வியை தொடர்ந்துகொண்டிருக்கும் பல்வேறு துறைகளையும் சார்ந்த 9000 இற்கும் மேற்பட்ட முஸ்லிம் மாணவர்களை அங்கத்தவர்களாக உள்ளடக்கி பரந்து விரிந்திருக்கும் இந்த அனைத்துப்பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியமானது 42 நிருவாக அங்கத்தவர்களை கொண்டு இயங்கிவருகின்றது. இவ்வமைப்பின் 2020 ஆம் ஆண்டுக்கான நிருவாக குழு தலைவராக களனிப் பல்கலைக்கழகத்தை சேர்ந்த சகோதரர் Mr. அஹ்மத் ஸாதிக் அவர்களும் செயலாளராக யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகத்தை சேர்ந்த சகோதரர் Mr. L.M. சாஜித் அவர்களும் பிரதி தலைவராக ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தை சேர்ந்த சகோதரர் Mr. முஹமட் நபீஸ் அவர்களும் உதவி செயலாளர்களாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தை சேர்ந்த சகோதரர் Mr. ஹம்மாத் ஸுஹைம் அவர்களும் களனிப் பல்கலைக்கழகத்தை சேர்ந்த சகோதரர் Mr. ராஷிட் ஹனான் அவர்களும் தெரிவு செய்யப்பட்டதோடு பெண்கள் பிரிவின் தலைவியாக கொழும்பு பல்கலைக்கழகத்தை சேர்ந்த சகோதரி M.M. முபஷ்ஷரா பேகம் அவர்களும் செயலாளராக இலங்கை சட்டக்கல்லூரியை சேர்ந்த சகோதரி மர்ஷதா மக்கீ அவர்களும் தெரிவுசெய்யப்பட்டார்கள். இவர்கள் இருவரும் முழு அமைப்பினதும் பிரதி தலைவர் மற்றும் உதவி செயலாளராக செயற்படுபவர்களாவர்.

2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பொறுப்பேற்ற இந்நிருவாகமானது ஒரு வருட நிர்வகித்தலின் பின் 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அடுத்த நிருவாக குழுவிற்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆயினும் தற்கால COVID19 அசாதாரண நிலைமை காரணமாக தற்பொழுது 2021 ஆம் ஆண்டு காலப்பகுதியிலும் அதே நிருவாக குழுவே அமைப்பை நிர்வகித்து வருகின்றது. 2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டு காலப்பகுதியானது அனைத்துப்பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியத்தின் வரலாற்றிலேயே செழிப்பான பொற்காலமாகும் என்பது மறுக்கப்படமுடியாத உண்மையாகும். 

அன்று விரல் விட்டு எண்ணக்கூடியளவு அங்கத்தவர்களை கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இவ்வமைப்பானது இன்று அசைத்தும் பார்க்கமுடியாத பிரம்மாண்ட சாம்ராஜ்யமாக விரிந்திருப்பது தலைசிறந்த  சாதனையாகும். இதற்காக உழைத்த அத்தனை அங்கத்தவர்களுக்கும் நன்றிகளும் நன்மைகளும் உரித்தாகட்டும். கடந்த காலங்கள் போன்று எதிர்காலத்திலும் இதன் சேவைகளும் செயற்திட்டங்களும் தொடரும். வளம் மிக்க சமுதாயமொன்றை கட்டியெழுப்புவதில் சமூகத்திற்கு பயன்படக்கூடிய பலம்மிக்க இளைஞர்களை உருவாக்குவதிலும் அனைத்துப்பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியமானது அளப்பரிய பங்காற்றும் என்பதில் எதுவித ஐயமுமில்லை.






கருத்துரையிடுக

Blogger இயக்குவது.