மர்ஹூம் ஹஸனின் இழப்பு மல்வானை பிரதேசத்தில் கட்சியின் வளர்ச்சிப் பாதையில் ஓர் இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது; மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் 

பியகம பிரதேச சபை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் மர்ஹூம் எஸ்.எம். எஸ்.ஹஸன் கம்பஹா மாவட்டத்தில் குறிப்பாக மல்வானைக்கும் அதனைச் சூழவுள்ள ஏனைய கிராமங்களுக்கும் அளப்பரிய பணிகளை ஆற்றியுள்ளதாகவும், அவரது இழப்பு அங்கு கட்சியின் வளர்ச்சிப் பாதையில் ஓர் இடைவெளியை ஏற்படுத்தியிருப்பதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் அன்னாரது மறைவையிட்டு வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

சிறந்த சமூக சேவையாளரான மர்ஹூம் எஸ்.எம்.எஸ்.ஹஸன் முன்னரும் பியகம பிரதேச சபையில் உறுப்பினராக இருந்து பலவிதமான அபிவிருத்தி நடவடிக்கைகளை  மேற்கொண்டிருந்தார். எமது கட்சியைப் பொறுத்தவரை பியகம தேர்தல் தொகுதியில் அதன் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை யாரும் இலகுவில் மறந்துவிட முடியாது.

மாணவர்களின் கல்வி மேம்பாட்டில் அதிக கரிசனை காட்டி வந்த அவர் மல்வானை அல் முபாரக் தேசிய பாடசாலையின் முன்னேற்றத்தில் அதிக அக்கறை கொண்டிருந்தார்.

நான் அமைச்சராக பதவி வகித்த காலத்தில் பிரஸ்தாப பாடசாலைக்கு ஏறத்தாழ ஒன்றறைக் கோடி ரூபாய் செலவில் அதன் மைதானத்தை மையப்படுத்தி வடிகாண் அமைப்பு செயற்றிட்டமொன்றையும் அவர் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

நீண்ட காலமாக  நோய்வாய்பட்டிருந்த நிலையில், அவருக்கு அறுவை சிகிச்சையொன்றும் மேற்கொள்ளப்பட்டு உடல் நலம் சற்றுத் தேறி வந்த நிலையில் அண்மையில் அவரது வீடும், வியாபார நிலையமும் தீக்கரையானதால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தார். அப்பொழுது அங்கு சென்று நிலைமையை நேரில் கண்டு ஆறுதல் கூறியிருந்தேன்.

எங்களது மறைந்த ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களுடனும் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்த மர்ஹூம் ஹஸன், பொது மக்களோடு மனம்விட்டு பழகுபவராகவும், அடிக்கடி அப் பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு அனர்த்தங்களில் போது களத்தில் இறங்கி உதவுபவராகவும் இருந்து வந்தார்.  

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாருக்கு ஜென்னத்துல் பிர்தௌஸ் சுவன பாக்கியத்தை வழங்குவானாக எனப் பிரார்த்திப்பதோடு, அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் தனிப்பட்ட முறையிலும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பிலும் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன். (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.