மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலிக்கு எதிராக பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் அல்லது ஐசிசிபிஆர் எனும் சிவில் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்த எந்த சாட்சியங்களும் இல்லை என்பதே நீதிமன்றின் முடிவு என அறிவித்த கொழும்பு பிரதான நீதிவான் புத்திக ஸ்ரீ ராகல, அவரை விடுவிக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்தார்.

‘இந்த விடயத்தில் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப் பத்திரிகை ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவ்வாறான பின்னணியில், அந்தக் குற்றப் பத்திரிகையுடன் தொடர்புடைய பிரதிவாதியை, கீழ் நிலை நீதிமன்றமான நீதிவான் நீதிமன்றின் ஊடாக விடுவிக்க, இந்த நீதிமன்றத்துக்கு அதிகாரமும் இல்லை.’ என சுட்டிக்காட்டியே அவரை விடுவிக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கை நீதவான் நிராகரித்தார்.

எந்த சாட்சியங்களும் இல்லாததால் அசாத் சாலியை விடுதலை செய்ய வேண்டும் என, கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றின் முன்னிலையில், அசாத் சாலியின் சட்டத்தரணிகள் முன்வைத்த கோரிக்கையை நேற்றைய தினம் ஆராய்ந்தே பிரதான நீதிவான் புத்திக ஸ்ரீராகல மேற்படி உத்தரவைப் பிறப்பித்தார்.

நேற்றைய தினம் இது குறித்த வழக்கு பிரதான நீதிவான் புத்திக ஸ்ரீராகல முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, சிஐடி விசாரணை அதிகாரிகளுடன் அரசின் சிரேஷ்ட சட்டவாதி வசந்த பெரேரா ஆஜரானார். சந்தேக நபரான அசாத் சாலி சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணிகளான என்.எம்.சஹீட், ருஷ்தி ஹபீப் உள்ளிட்டோருடன் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன பிரசன்னமானார்.

இந்நிலையில் வழக்கு விசாரணைகளில் ஆரம்பத்தில் மேலதிக விசாரணை அறிக்கை ஒன்று சிஐடியினரால் நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட நிலையில் சிரேஷ்ட அரச சட்டவாதி வசந்த பெரேரா விடயங்களை முன்வைத்தார்.

‘ இந்த விவகாரத்தில் சந்தேக நபரான அசாத் சாலியை, குற்றவியல் சட்டத்தின் விதிமுறைகளின் கீழ் விடுவிக்க, அவர் சர்பில் முன் வைக்கப்பட்டுள்ள கோரிக்கை தொடர்பில் அரசின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தவே நான் இங்கு பிரசன்னமாகியுள்ளேன்.

தற்போதைய நிலையில், இந்த சந்தேக நபருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றின் 2 ஆம் இலக்க நீதிமன்றில் 2778/21 எனும் இலக்கத்தின் கீழ் சட்ட மா அதிபரால் பயங்கரவாத தடை சட்டம் மற்றும் ஐசிசிபிஆர் எனும் சிவில் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் கீழும் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


அத்துடன் சந்தேக நபரும் தனது கைதை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்துள்ளார். இவ்விரு மனுக்களும் நிலுவையில் உள்ளன.


இந்நிலையில் மேல் நீதிமன்ற வழக்கில் பிரதிவாதி ஒருவரை சாட்சிகள் இல்லை எனக் கூறி விடுவிக்க நீதிவான் நீதிமன்றுக்கு அதிகாரம் இல்லை. அதற்கான எந்த வழிமுறைகளும் குற்றவியல் சட்ட ஏற்பாடுகளில் கிடையாது. எனவே, இந்த சந்தேக நபரை விடுவிக்க இந்த நீதிமன்றுக்கு அதிகாரம் இல்லை.’ என வாதிட்டார்.இதனையடுத்து அசாத் சாலி சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன வாதங்களை முன் வைத்தார்.


‘மேல், உயர் நீதிமன்றங்களில் வழக்குகள் இருப்பினும், இம்மன்றுக்கு உள்ள நீதிமன்ற அதிகாரத்தின் கீழ், சாட்சிகள் இல்லையெனில் குற்றவியல் சட்ட விதிமுறைகள் பிரகாரம் செயற்பட எந்தத் தடையும் இல்லை.சந்தேக நபரான அசாத் சாலி, சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய கடந்த மார்ச் 16 ஆம் திகதி, சிஐடியின் விசேட விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜயந்த பயாகல தலைமையிலான குழுவினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். கைதை அடுத்து அசாத் சாலிக்கு எதிராக முன் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் மிகப் பாரதூரமானவை.


தீவிரவாத பயங்கரவாத சந்தேக நபர்களுடன் தொடர்பு வைத்திருந்தமை, தீவிரவாத பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவியளித்தமை மற்றும் உடந்தையாகவிருந்தமை, வன்முறை அல்லது மத, இன அல்லது சமூக ரீதியான விரோதத்தை தூண்டும் வகையில் அல்லது வேறுபட்ட சமூகங்கள் அல்லது இனங்கள் மத குழுக்களுக்கிடையில் பகைமையை தூண்டும் விதத்தில் வார்த்தைகளை பயன்படுத்தியமைக்காகவும் மற்றும் 21.04.2019 அன்று நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய மாவனெல்லை புத்தர் சிலை உடைப்பு விவகார சந்தேக நபர்களுடன் உள்ள தொடர்பை உறுதிப்படுத்துவதற்காக விசாரிக்கப்படுவதாக கூறப்பட்டது.

எனினும் இது குறித்த விசாரணைகளின் பின்னர் சிஐடி நீதிமன்றில் அறிக்கை முன்வைத்துள்ளது.


கடந்த 2021 ஆகஸ்ட் 17 ஆம் திகதி விசாரணை நிறைவடைந்துள்ளதாக கூறி சிஐடி முன்வைத்துள்ள அறிக்கையில் மிகத் தெளிவாக விடயங்கள் கூறப்பட்டுள்ளன.எனினும் சிஐடி ஆகஸ்ட் 17 அன்று விசாரணை நிறைவடைந்ததாக கூறிய போதும், அதற்கு முன்பதாகவே, அதாவது ஜூன் 23 ஆம் திகதியே சட்ட மா அதிபர் மேல் நீதிமன்றில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளார். விசாரணை முடிய முன்னர் அவர் எப்படி குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய முடியும் என்பது வேறு பிரச்சினைக்குரிய விடயமாகும்.


எனினும் இங்கு சிஐ.டி முன்வைத்துள்ள விசாரணை அறிக்கையில், மாவனெல்லை புத்தர் சிலை தகர்ப்பு விவகாரத்தில், அசாத் சாலிக்கு எந்த தொடர்பும் இல்லை என தெளிவாக கூறப்பட்டுள்ளது. குறித்த விடயத்தில் தொலைபேசி வலையமைப்பு மற்றும் ஏனைய சட்சியாளர்களின் வாக்குமூலங்களை வைத்து விசாரித்தபோது அவருக்கு தொடர்பில்லை என தெரியவந்ததாக சிஐடி. கூறியுள்ளது.

அதே போல, ஐசிசிபிஆர் சிவில் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் கீழ் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் என்ன? அரசியலமைப்பு ஊடாகவும், ‘ ஜனகோஷா’ உள்ளிட்ட வழக்குத் தீர்ப்புகள் ஊடாகவும் உறுதி செய்யப்பட்ட கருத்து, கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை பறிக்க இன்று இந்த ஐசிசிபிஆர் சட்டம் பயன்படுத்தபப்டுகின்றமை கவலைக்குரியது. எனினும் உண்மை அதுவல்ல.

இங்கு பிரச்சினைக்குரியதாக காட்டப்படும் ஊடக சந்திப்பில் உண்மையில் அசாத் சாலி கூறியது என்ன? அவர் பிரிவினைவாத, வன்முறையை தூண்டும் எதனையும் பேசவில்லை.

அவர் பயங்கரவாதம், அடிப்படைவாதத்துக்கு எதிரானவர். அவர் அனைவரும் ஒன்றினைந்து, ஒரே தேசியமாக நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் எனும் கருத்தையே அந்த ஊடக சந்திப்பில் வெளியிட்டார். இது குற்றமா? எனவே அசாத் சாலிக்கு எதிராக எந்த சாட்சியங்களும் அவர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு இல்லை. அவர் 100 சத வீதம் நிரபராதி. எனவே அவரை குற்றவியல் சட்டத்தின் 120 ஆம் அத்தியாயம் பிரகாரம் விடுவிக்கவும்.’ என கோரினார்.

இதனையடுத்து அரசின் சிரேஷ்ட சட்டவாதி வசந்த பெரேரா மீள பதில் வாதங்களை முன்வைத்தார்.

‘மாவனெல்லை புத்தர் சிலை தகர்ப்பு விவகாரத்தில் சாட்சியம் இல்லை என சிஐடி அறிக்கையிட்டுள்ளமை எல்லாம் உண்மையே. அனால் அதற்காக மேல் நீதிமன்றில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. ஊடக சந்திப்பின் போது வன்முறை அல்லது மத, இன அல்லது சமூக ரீதியான விரோதத்தை தூண்டும் வகையில் அல்லது வேறுபட்ட சமூகங்கள் அல்லது இனங்கள் மத குழுக்களுக்கிடையில் பகைமையை தூண்டும் விதத்தில் வார்த்தைகளை பயன்படுத்தியமைக்காகவும் அவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் சட்ட மா அதிபர் தாக்கல் செய்த ஒரு குற்றப் பத்திரிகையை சவாலுக்கு உட்படுத்த, எழுத்தாணை அதிகாரமுள்ள ( ரிட்) நீதிமன்றில் மட்டுமே முடியும். எனவே குற்றப் பத்திரிகை தொடர்பில் பிரச்சினை இருப்பின் அந்தந்த நீதிமன்றங்களில் அதனை சவாலுக்கு உட்படுத்தலாம்.அவ்வாறான நிலையில், சந்தேக நபரை குற்றவியல் சட்டத்தின் 120 (3) ஆம் அத்தியாயத்துக்கு அமைய விடுவிக்க இந்த நீதிமன்றுக்கு அதிகாரமில்லை. ‘ என குறிப்பிட்டார்.


இதனையடுத்து கொழும்பு பிரதான நீதிவான் தனது தீர்மானத்தை அறிவித்தார்.இரு தரப்பு வாதங்கலையும் கேட்ட பின்னர் அவர் இதனை அறிவித்தார்.‘சந்தேக நபர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் 6(10 ஆம் அத்தியாயத்துக்கு அமைய கைது செய்யப்பட்டதாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் அப்பிரிவின் கீழ் கைது செய்யப்படும் ஒருவருக்கு பிணையளிக்க அச்சட்டத்தின் 7 (1) ஆம் அத்தியாயத்துக்கு அமைய சட்ட மா அதிபரின் ஆலோசனை அவசியமகும். இந்நிலையில் பிணை தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனை கோரப்பட்டுள்ள நிலையில், அது நிலுவையில் உள்ளது. இவ்வாறான பின்னணியில் சந்தேக நபரை குற்றவியல் சட்டத்தின் 120 ( 3) அத்தியாயத்தின் கீழ் விடுவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சிஐடி முன்வைத்துள்ள விசாரணை அரிக்கையை ஆராயும் போது, மாவனெல்லை புத்தர் சிலை உடைப்பு தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை என சிஐடியே அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

எனினும் ஊடக சந்திப்பை நடத்தி வெளியிட்ட கருத்து தொடர்பில் சிஐடி அறிக்கை முன்வைத்துள்ளது.

இந்நிலையில் அதனை இம்மன்று ஆராயும்போது, ஊடக சந்திப்பின் செம்மைப்படுத்தப்பட்ட பிரதியை மையப்படுத்தி இந்தக் கைது இடம்பெற்றுள்ளதாக இம்மன்று அவதானிக்கிறது.

ஏனெனில் செம்மைப்படுத்தப்பட்ட, செம்மைப்படுத்தப்படாத இரு பிரதிகளையும் இந்த நீதிமன்று சிஐடி ஊடாக பெற்றுக்கொண்டுள்ளது.

அவற்றை ஒப்பீடு செய்து பார்க்கும்போது, இரண்டுக்கும் இடையே பாரிய வித்தியாசங்கள் உள்ளன.

செம்மைப்படுத்தப்பட்ட பிரதி இனங்களுக்கு இடையே வன்மத்தை தூண்டுவதாக உள்ளபோதும், செம்மைப்படுத்தப்படாத உண்மை பிரதியானது இனங்களின் ஒற்றுமை, தேசிய ஒற்றுமையை வலியுறுத்துவதாக உள்ளது.

அப்டியானால் குறித்த ஊடக சந்திப்பு பதிவுகளை செம்மைப்படுத்தி பிரசாரம் செய்தவர்கள் தொடர்பில் சிஐடியினரின் அவதானம் திரும்பும் என இந்த மன்றம் எதிர்ப்பார்க்கிறது.

சட்ட மா அதிபர் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய முன்னர் செம்மைப்படுத்தப்பட்ட, படுத்தப்படாத இரு பிரதிகளையும் பெற்றுக் கொண்டிருந்தாரா என இந்த நீதிமன்றுக்கு தெரியாது.

இந்த விவகாரத்தில், செம்மைப்படுத்தப்பட்ட ஊடக சந்திப்பு காணொளிகளைப் பார்வையிட்டவர்கள் தமது உணர்வுகள் தூண்டப்பட்டதாக சிஐடிக்கு வாக்கு மூலமளித்துள்ளனர். எனினும் அவர்கள் செம்மைப்படுத்தப்ப்டாத உண்மை ஊடக சந்திப்பை பார்வை இட்டிருந்தால் அந்த உணர்வு ஏற்பட்டிருக்காது.

வீரவங்ச எதிர் சட்ட மா அதிபர் வழக்குத் தீர்ப்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் பிரகாரம், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் ஒருவர் கைது செய்யப்பட்டால் விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படும்போது அவருக்கு எதிரான சாட்சியங்களை நீதிமன்றம் சீர்தூக்கி பார்க்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. சாட்சியங்கள் இல்லை எனில் அவரை விளக்கமறியலில் வைக்கக் கூடாது என அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்திலும் நீதிமன்றின் முன்னுள்ள அனைத்து விடயங்களையும் ஆராயும்போது, சந்தேக நபருக்கு எதிராக எந்த சாட்சியங்களும் இல்லை என்பதும் அவரை விடுவிப்பது உசிதம் என்பதும் இந்த மன்றின் நிலைப்பாடாகும்.

எனினும் மேல் நீதிமன்றில் இது விவகாரத்தில் ஒரு குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் பிரதிவாதியாக பெயரிடப்பட்டவரை, சாட்சியங்கள் இல்லை எனக் கூறி விடுவிக்க இந்த நீதிமன்றுக்கு அதிகாரம் இல்லை. எனவே சந்தேக நபரின் கோரிக்கையை இந்த மன்றம் நிராகரிக்கிறது.’ என பிரதான நீதிவான் புத்திக ஸ்ரீ ராகல அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து மன்றில் விடயங்களை தெளிவுபடுத்திய நீதிவான், உணர்வுகளை மையபப்படுத்தி நடவடிக்கை எடுக்கும்போது இதனைவிட மிக்க அவதானம் தேவை என்பதை சுட்டிக்காட்டினார். அத்துடன் இந்த விடயத்தில், ஊடக சந்திப்பை செம்மைப்படுத்தி, அந்த கருத்தை மாற்றி பிரசாரம் செய்த ஊடகங்களுக்கு எதிராகவே நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என நீதிவான் சுட்டிக்காட்டினார். இதனை அரசின் சிரேஷ்ட சட்டவாதி வசந்த பெரேராவும் ஆமோதித்தார்

எம்.எப்.எம்.பஸீர் - வீரகேசரி 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.