கதை ஒன்று;
எளிய உடைகளுடன் முல்லா நஸீருத்தீன் விருந்துக்குச் சென்றபோது விருந்து ஏற்பாட்டாளர்கள் உள்ளே நுழைய விடவில்லை. அதன்பின்னர் விலையுயர்ந்த ஆடைகளுடன் அதே விருந்துக்கு வந்தபோது பலமான வரவேற்பு அளித்ததுடன் முல்லாவை தனவந்தர்களுடன் பந்தியிலும் அமரவைத்தார்கள். முல்லா பந்தியில் அமர்ந்து தன் ஆடைகளுக்கு உணவு ஊட்டி விட்டுக் கொண்டிருந்தார். ஏன் இப்படிச் செய்கிறீர்கள் என்று குழப்பத்துடன் வினவியபோது "என்னை விட என் ஆடைகளே இந்த மரியாதைக்கும் விருந்துக்கும் உரியவை" என்று பதிலளித்தார்.

கதை இரண்டு;
முல்லா இருந்த மாடி அறையிலிருந்து யாரோ விழுந்ததுபோன்ற பெரும் சப்தம் கேட்டது. கீழ் அறையிலிருந்த மனைவி பதறியவாறே கேட்டார்,
"என்ன சப்தம்....என்னாச்சு ?"முல்லா பதிலளித்தார் 
"ஒன்றுமில்லை என் சட்டை கீழே விழுந்து விட்டது" மனைவி விடவில்லை
"சட்டை விழுந்ததற்கா அவ்வளவு பெரிய சப்தம் கேட்டது ??" 
"சட்டைக்குள்ளே நான் இருந்தேன்" என்றார் முல்லா அமைதியாக.

முதல் கதையை ஓரிரு நாட்கள் முன்னர் மகள் அஸ்ஃபியாவுக்குச் சொல்லியிருந்தேன். இரண்டாம் கதையை இன்று சொன்னேன்.
அஸ்ஃபியா பலத்த சிந்தனையுடன் கேட்டாள்,
"விருந்துக்குப் போய் சாப்பிட்ட அதே சட்டைதான் கீழே விழுந்ததா ?"
நான் சொன்னேன்
"தெரியவில்லை. ஆனால் இரண்டு சட்டைக்குள்ளும் இருந்தது ஒரே முல்லாதான்" என்று.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.