மூன்று வயது குழந்தையை கிணற்றில் தள்ளிய சிறுவர்கள் : தமிழ் நாட்டில் சோகம்!

Rihmy Hakeem
By -
0

 


சிவகாசியில் விளையாட்டால் ஏற்பட்ட சண்டையில் 3 வயது குழந்தையை பக்கத்து வீட்டு சிறுவர்கள் இருவர் கிணற்றில் தள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு சிறுவர்களையும் கைது செய்த போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசியை அடுத்த விஸ்வநத்தம் ஊராட்சி திருவள்ளுவர் காலனியைச் சேர்ந்தவர் பார்த்திபன். இவர் பட்டாசு ஆலையில் வேன் ஓட்டுநராக உள்ளார். இவரது மனைவி கவியரசி. இவர்களுக்கு பிரியதர்ஷன், தீனதயாளன் ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளன.

இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை பிற்பகல் பார்த்திபன் தனது மூன்று வயது மகன் தீனதயாளனை தனது அம்மா லட்சுமி வீட்டில் விட்டுவிட்டு வேலைக்குச் சென்றுள்ளார்.

லட்சுமி வசிக்கும் பகுதியில் உள்ள, 11 வயது மற்றும் 13 வயது சிறுவர்கள் இருவருடன் சேர்ந்து குழந்தை தீனதயாளன் விளையாடி உள்ளான். பிற்பகலுக்கு மேல் குழந்தையைக் காணவில்லை.


இது குறித்து தகவலறித்த பார்த்திபன் வீட்டுக்கு வந்து அந்த பகுதி முழுவதும் தேடினார் ஆனால், குழந்தை கிடைக்கவில்லை. உடனடியாக பார்த்திபன் திங்கள்கிழமை இரவு சிவகாசி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தினர். அப்போது குழந்தை தீனதயாளனுடன் விளையாடிக் கொண்டிருந்த பக்கத்து வீட்டு சிறுவர்கள் இருவரிடம் போலீசார் குழந்தை குறித்து விசாரிக்கையில் அவர்கள் அருகில் உள்ள கிணற்றுக்குள் குழந்தை தீனதயாளனை தள்ளி விட்டதாக தெரிவித்தனர்.

சுமார் 60 அடி ஆழமுள்ள அந்த கிணற்றில் பாதி அளவு தண்ணீர் இருந்ததால் போலீசார் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தயைடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இருந்த குழந்தையை சடலமாக செவ்வாய்க்கிழமை காலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுவர்கள் விளையாடிய போது இரு வீட்டாருக்கும் இடையே ஏற்பட்ட சண்டை காரணமாக சிறுவர்கள் இருவரும் சேர்ந்து குழந்தையை கிணற்றில் தள்ளி கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலிசார் சிறுவர்கள் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கு குறித்து விசாரணை நடத்தி வரும் காவல்துறை அதிகாரி ஒருவர் பிபிசி தமிழிடம் பேசுகையில்,"குழந்தையைக் காணவில்லை என காவல் நிலையத்தில் பார்த்திபன் புகார் அளித்தார். அங்கு சென்ற போலீசார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தியும் குழந்தை குறித்து எந்தவிதமான தகவலும் கிடைக்கவில்லை. பின்னர் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா ஒன்றில் பதிவாகி இருந்த வீடியோவை ஆய்வு செய்த போது வீடியோவில் தீனதயாளனை இந்த இரு சிறுவர்களும் அழைத்து செல்வதும். அரை மணி நேரத்திற்குப் பின் தீனதயாளன் இல்லாமல் சிறுவர்கள் மட்டும் தனியாக வருவதும் பதிவாகி இருந்தது, என்று தெரிவித்தார்.

மேலும் அதே தெருவை சேர்ந்த மூதாட்டி ஒருவர் சிறுவர்கள் இருவரும் தீனதயாளனை அழைத்து சென்றதை பார்த்துள்ளார். பின்னர் அந்த சிறுவர்களிடம் போலீசார் விசாரித்து போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.

பின்னர் அந்த 13 வயது சிறுவனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் குழந்தைகளுக்கு இடையே ஏற்படும் சண்டை மற்றும் பக்கத்து வீட்டுக்காரருடன் ஏற்படும் பிரச்னையை மனதில் வைத்துக்கொண்டு குழந்தையை விளையாட அழைத்து செல்வதாக கூறி கிணற்றுக்கு அருகே அழைத்து சென்று கிணற்றில் தள்ளி கொலை செய்ததாக ஒப்புக்கொண்டான், என்று அந்தக் காவல் அதிகாரி தெரிவித்தார்.

அந்த 13 வயது சிறுவன் திருப்பூரில் பெற்றோருடன் இருந்த போது பெற்றோர் இருவரும் வேலைக்கு சென்ற உடன் அந்த பகுதியில் உள்ள வீடுகள், கடைகளில் திருடி மாட்டி கொள்வான். அதனால் சிறுவனின் பெற்றோர் அந்த சிறுவனை சிவகாசி திருவள்ளுவர் காலனியில் உள்ள உறவினர் வீட்டில் தங்க வைத்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.

அந்த 13 வயது சிறுவனிடம் போலீசார் நடத்திய விசாரணையின் போது சிறுவன் மிகவும் தெளிவாக, பதற்றம் இல்லாமல் போலீசாருக்கு துளி கூட சந்தேகம் வராத அளவுக்கு அந்த கொலையை தான் செய்யவில்லை என தெரிவித்தான். ஒரு கட்டத்தில் குழந்தை உடலை கிணற்றிலிருந்து எடுத்தால் கூட அதை நான் செய்ததாக எப்படி உங்களால் உறுதி செய்ய முடியும் என சிறுவன் போலீசாரை பார்த்து கேட்டான். அதனால் விசாரித்த போலீசாரே சற்று அதிர்ச்சி அடைந்தனர் என்றார் அந்தக் காவல் அதிகாரி.

(பிபிசி தமிழ்)


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)