இலங்கை தற்போது முகங்கொடுத்திருக்கும் சமூக, பொருளாதார மற்றும் நிர்வாக ரீதியான சவால்கள் இராணுவயமயமாக்கலின் மோசமான தாக்கத்தை வெளிக்காட்டுபவையாக அமைந்துள்ளன.

அதுமாத்திரமன்றி இலங்கையில் அடிப்படை உரிமைகள், சிவில் செயற்பாடுகளுக்கான இடைவெளி, ஜனநாயகக்கட்டமைப்புக்கள், நிலைபேறான அபிவிருத்தி ஆகிய விடயங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் வலுவிழந்துள்ளமையினையும் அவதானிக்கமுடிவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லேட் தெரிவித்துள்ளார்.

அதுமாத்திரமன்றி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா மற்றும் அஹ்னாப் ஜசீஸ் ஆகியோரின் தொடர்ச்சியான தடுத்துவைப்பு, வசந்த கரன்னகொடவிற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நீக்கப்பட்டமை தொடர்பில் கரிசனையை வெளிப்படுத்தியுள்ள ஆணையாளர் பச்லெட், துமிந்த சில்வாவின் விடுதலையானது சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறையின் செயற்பாடுகள் மீது காணப்படும் நம்பிக்கையைக் கேள்விக்குள்ளாக்கும் அச்சுறுத்தலைத் தோற்றுவித்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத்தொடர் இன்று திங்கட்கிழமை ஜெனீவாவில் ஆரம்பமானது.

இன்றைய தொடக்கநாள் அமர்வில் இலங்கை தொடர்பில் ஆணையாளர் மிச்சேல் பல்லெட்டினால் வெளியிடப்பட்ட வாய்மூல அறிக்கையிலேயே மேற்கண்ட விடயம் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

இதன்போது இலங்கை தொடர்பில் அவரால் மேலும் கூறப்பட்ட விடயங்கள் வருமாறு:

இலங்கையின் நிலைவரம் தொடர்பில் எனது கடந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருந்த விடயங்கள் தொடர்பான தற்போதைய அவதானிப்புக்களை இங்கு முன்வைக்கின்றேன்.

இதுகுறித்து இலங்கை அரசாங்கத்தினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளேன்.

அதேவேளை 'பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கு ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து செயற்படத்தயாராக இருக்கின்றோம்' என்றும் 'அதற்கேற்றவாறான கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படும்' என்றும் கடந்த ஜுன் மாதம் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட கூற்றையும் கருத்திலெடுத்துள்ளேன்.

அந்தவகையில் எமது அறிக்கைகளில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் உள்ளடங்கலாக உறுதியளிக்கப்பட்டவாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று எதிர்பார்ப்பதுடன் அதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு எமது அலுவலகம் தயாராக இருக்கின்றது.

அதுமாத்திரமன்றி மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கென கடந்த ஜனவரி மாதம் ஸ்தாபிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பணிகள் இவ்வருட இறுதியில் முடிவிற்குக்கொண்டுவரப்படும் என்று அறிகின்றேன். எனவே அதனைத்தொடர்ந்து அதன் பணிகளையும் பரிந்துரைகளையும் பார்வையிடக்கூடியதாக இருக்கும்.

தற்போது இலங்கை எதிர்கொண்டிருக்கும் சமூக, பொருளாதார மற்றும் நிர்வாக ரீதியான சவால்கள் இராணுவயமயமாக்கலின் மோசமான தாக்கத்தை வெளிக்காட்டுபவையாக அமைந்துள்ளன.

அதுமாத்திரமன்றி அடிப்படை உரிமைகள், பொதுமக்களுக்கான இடைவெளி, ஜனநாயகக்கட்டமைப்புக்கள், நிலைபேறான அபிவிருத்தி ஆகிய விடயங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் வலுவிழந்துள்ளமையினையும் அவதானிக்கமுடிகின்றது.

மேலும் உணவுப்பொருட்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் மற்றும் விலைகளைக் கட்டுப்படுத்தல் ஆகிய நோக்கங்களுக்காக இலங்கையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி அவசரகாலச்சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

இந்த அவசரகாலச்சட்டத்தின் விதிகள் மிகவும் பரந்தவை என்பதுடன் இவை சிவில் செயற்பாடுகளில் இராணுவத்தின் பங்களிப்பை மென்மேலும் ஊக்குவிக்கும் வகையில் அமையலாம். எனவே அவசரகாலச்சட்டத்தின் பிரயோகம் தொடர்பில் எமது அலுவலகம் உன்னிப்பான கண்காணிப்பை மேற்கொள்ளும்.

அண்மையில் சில சிவில் சமூக அமைப்புக்களின் தலைவர்களுடனான ஜனாதிபதியின் சந்திப்புத் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளேன். அத்தோடு இலங்கையின் சிவில் சமூகப்பரப்பை விரிவாக்கும் கலந்துரையாடல்கள் மற்றும் நடவடிக்கைகள் என்பன முன்னெடுக்கப்படுவதை நான் பெரிதும் வரவேற்கின்றேன்.

ஆனால் வருந்தத்தக்க வகையில் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், காணாமல்போனோரின் குடும்பங்கள் ஆகியோர் மீதான கண்காணிப்புக்கள், அடக்குமுறைகள் என்பன தொடர்கின்றன.

ஆனால் அந்த அடக்குமுறைகள் தற்போது அரசாங்கத்தை விமர்சிக்கும் மாணவர்கள், தொழிற்துறை நிபுணர்கள், மருத்துவத்துறைசார் நிபுணர்கள், மதத்தலைவர்கள் என வியாபித்துள்ளன.

குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான அமைதிவழிப்போராட்டங்கள் மற்றும் நினைவுகூரல்கள் என்பன வலுவான பாதுகாப்புத்தரப்பினரைக்கொண்டு கட்டுப்படுத்தப்பட்டதுடன் கைது நடவடிக்கைகளும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன.

மேலும் சிவில் சமூக அமைப்புக்கள் தொடர்பான புதிய வழிகாட்டல்கள் தயாரிக்கப்பட்டதுடன் அவை அவர்களின் அடிப்படைச் சுதந்திரத்தை மேலும் இறுக்கமாக்கும் வகையில் அமையலாம் என்ற அச்சத்தைத் தோற்றுவித்தன.

எனவே அவ்வாறு தயாரிக்கப்பட்ட வழிகாட்டல்கள் உரியவாறான கலந்துரையாடல்களுக்கு உட்படுத்தப்படக்கூடிய வகையில் பகிரங்கப்படுத்தப்படவேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.

அதேவேளை மனித உரிமைகளுடன் தொடர்புடைய சில முக்கிய வழக்குகள் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளேன். 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் 11 இளைஞர்கள் வலிந்து காணாமலாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்டிருந்ததாகக் கூறப்படும் முன்னாள் கடற்படைத்தளபதிக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் சட்டமா அதிபரினால் நீக்கிக்கொள்ளப்பட்டமையும் அதில் உள்ளடங்குகின்றது.

அதேபோன்று பல்வேறு விசாரணைகளுக்கு மத்தியில் 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுதினப்பயங்கரவாதத்தாக்குதல்களின் சூத்திரதாரிகள் தொடர்பான உண்மையைக் கண்டறிந்து, நீதியை நிலைநாட்டுமாறு பாதிக்கப்பட்டவர்களும் மதத்தலைவர்களும் தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றனர்.

மேலும் கடந்த 2011 ஆம் ஆண்டில் அரசியல்வாதியொருவரைப் படுகொலை செய்த வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான துமிந்த சில்வாவிற்கு ஜனாதிபதியினால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டமையானது, சட்டத்தின் ஆட்சி மீதும் நீதித்துறையின் செயற்பாடுகள் மீதும் காணப்படும் நம்பிக்கையைக் கேள்விக்குள்ளாக்கக்கூடிய அச்சுறுத்தலைத் தோற்றுவித்தன.

அத்தோடு பொலிஸ் காவலின் கீழ் இடம்பெறும் மரணங்கள், போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகள் மீதான பொலிஸ் என்கௌன்டர்கள் மற்றும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவோரால் மேற்கொள்ளப்படும் சித்திவரைகள் மற்றும் முறையற்ற நடவடிக்கைகள் பற்றிய அறிக்கைகள் தொடர்பிலும் நான் தீவிரமாக அவதானம் செலுத்தியுள்ளேன்.

ஒருவரை வழக்கு விசாரணைகளின்றி இருவருடகாலம் வரையில் தடுத்துவைத்திருப்பதற்கு அதிகாரமளிக்கக்கூடியவகையிலான புனர்வாழ்வளித்தல் தொடர்பான வழிகாட்டலொன்று கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டது.

எனினும் அதனை சவாலுக்குட்படுத்தும் வகையில் அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டமையைத் தொடர்ந்து, குறித்த வழிகாட்டலை நடைமுறைப்படுத்துவதற்கு உயர்நீதிமன்றத்தினால் இடைக்காலத்தடையுத்தரவு விதிக்கப்பட்டிருப்பதாக அறிகின்றேன்.

அதுமாத்திரமன்றி தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையதாகக் குறிப்பிடப்பட்டு 300 இற்கும் அதிகமான தமிழ், முஸ்லிம் அமைப்புக்களும் தனிநபர்களும் அரசாங்கத்தினால் தடைசெய்யப்பட்டது.

அடுத்ததாக பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, தண்டனைக்காலம் நிறைவடைவதை நெருங்கிக்கொண்டிருந்த 16 கைதிகள் அண்மையில் விடுதலைசெய்யப்பட்டார்கள்.

அத்தோடு மேற்படி சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகள் தொடர்பில் மீளாய்வு செய்வதற்கான விசேட ஆலோசனைக்குழுவொன்று நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில், நீண்டகாலமாக இழுபறி நிலையிலிருக்கும் இந்த வழக்குகளுக்கு விரைந்து தீர்வொன்றை வழங்குமாறு வலியுறுத்துகின்றேன்.

பயங்கரவாதத்தடைச்சட்டத்தை மீளாய்வு செய்வதற்கான உறுதிமொழியை அரசாங்கம் வழங்கியிருக்கின்றது. இருப்பினும் இச்சட்டம் தொடர்ச்சியாகப் பயன்படுத்தப்படுவது குறித்தும் அச்சட்டத்தின்கீழ் நபர்கள் தடுத்துவைக்கப்படுவது குறித்தும் நான் கவலையடைகின்றேன்.

இச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, நீதிமன்றத்தில் உரியவாறான ஆதாரங்கள் எவையும் சமர்ப்பிக்கப்படாத நிலையிலும் சுமார் 16 மாதகாலமாகத் தடுத்துவைக்கப்பட்டிருக்கின்றார்.

அதேபோன்று ஆசிரியரும் கவிஞருமான அஹ்னாப் ஜசீம் கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதத்திலிருந்து எவ்வித குற்றச்சாட்டுக்களுமின்த் தடுத்துவைக்கப்பட்டிருக்கிறார்.

எனவே இச்சட்டத்தை உடனடியாக மீளாய்விற்கு உட்படுத்தும் அதேவேளை, அதற்கென உரியவாறான காலஅவகாசமொன்றைத் நிர்ணயிக்குமாறும் வலியுறுத்துகின்றேன்.

மேலும் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இழப்பீடு தொடர்பான தேசிய கொள்கைக்கு அங்கீகாரமளிக்கப்ப்டதுடன் இழப்பீடு வழங்கல் மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகள் தொடர்கின்றன.

அத்தோடு கிளிநொச்சியில் ஆறாவது கிளை அலுவலகத்துடன் காணாமல்போனோர் பற்றிய அலுவலகமும் அதன் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.

இருப்பினும் அது பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கையை வென்றெடுப்பது அவசியமாகும். அதுமாத்திரமன்றி அலுவலகத்தின் செயற்பாடுகளில் வெளிப்படைத்தன்மை பேணப்படவேண்டியதன் அவசியம் தொடர்பிலும் பாதிக்கப்பட்டவர்களை முன்நிறுத்திய மனிதாபிமான அணுகுமுறைகளின் அவசியம் தொடர்பிலும் மீளவலியுறுத்த விரும்புகின்றேன்.

மேலும் விரிவான உண்மை மற்றும் நீதிப்பொறிமுறையுடன் ஒன்றிணைந்ததாக இழப்பீடு வழங்கல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் 46ஃ1 தீர்மானத்திற்கு அமைவாக பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கு அவசியமான நடவடிக்கைகள் எமது அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எமது அலுவலகத்தினால் சுமார் 120,000 தனித்தனியான தகவல்கள் மற்றும் ஆதாரங்களை உள்ளடக்கிய தரவுத்தளம் தயாரிக்கப்பட்டிருப்பதுடன் இவ்வருடத்திற்குள் மேலும் தகவல்களையும் ஆதாரங்களையும் திரட்டுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

எனவே அதற்குரியவாறான நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதை உறுதிப்படுத்துமாறு உறுப்புநாடுகளைக் கேட்டுக்கொள்கின்றேன்.

அதுமாத்திரமன்றி இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் நிலைவரத்தை மேம்படுத்துவதற்கு அவசியமான அழுத்தத்தை வழங்குவதுடன் இலங்கையின் நிலைவரங்கள் தொடர்பில் உன்னிப்பாக அவதானம் செலுத்தவேண்டும் என்று உறுப்புநாடுகளுக்கு அழைப்புவிடுக்கின்றேன் என்று குறிப்பிட்டார்.

நா.தனுஜா, வீரகேசரி 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.