கொவிட் தொற்றுப் பரவலைத் தோற்கடித்து, உலகின் முன்னால் காணப்படும் மிக முக்கியமான சவாலை வெற்றிகொள்ள, அனைவரும் அணிதிரள வேண்டுமென்று, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) அவர்கள், உலக நாடுகளின் அரச தலைவர்களிடம் கோரிக்கை விடுத்தார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76ஆவது கூட்டத் தொடரின் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, ஜோ பைடன் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கை நேரப்படி, நேற்று (21) மாலை 6.30 மணிக்கு, நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்தில், இந்தக் கூட்டத்தொடர் ஆரம்பமானது. இதில் கலந்துகொள்வதற்காக வருகை தந்திருந்த உலக நாடுகளின் அரச தலைவர்கள், ஐ.நா பொதுச் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரெஸ் (Antonio Guterres) அவர்களினால், மிகுந்த மரியாதையுடன் வரவேற்கப்பட்டனர்.

ஐ.நா பொதுச் செயலாளர் நாயகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேநீர் விருந்துபசாரத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் உள்ளிட்ட ஏனைய நாடுகளின் அரச தலைவர்கள் அனைவரும் கலந்துகொண்டதன் பின்னர், அரச தலைவர்கள் மாநாடு ஆரம்பமானது.   

“கொவிட் 19 வைரஸ் தொற்றுப்பரவலில் இருந்து மீள்வதற்கான நம்பிக்கையின் மூலம் நெகிழ்ச்சியை வளர்த்தல், நிலைத்தன்மையை மீளக் கட்டியெழுப்புதல், பூமியின் தேவைகளுக்கு பதிலளித்தல், மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மறுமலர்ச்சி” என்பதே, இம்முறை அரச தலைவர்கள் மாநாட்டின் தொனிப்பொருளாக அமைந்துள்ளது.

இதன்போது உரையாற்றிய அமெரிக்க ஜனாதிபதி, காலநிலைப் பிரச்சினைகள், சமாதானம் மற்றும் பாதுகாப்பு, மனித மாண்பு மற்றும் மனித உரிமைகள் போன்று தற்காலத்தில் காணப்படும் மிக முக்கியமான சவால்கள் அனைத்துக்கும் முகங்கொடுப்பதற்கான தலைமைத்துவத்தை வழங்கத் தயாரெனத் தெரிவித்தார்.

யுத்தங்களில் ஈடுபடுபதற்குப் பதிலாக, ஒற்றுமையான எதிர்காலத்துக்கான சவால்களை எதிர்கொள்வதற்கு, வளங்களை அர்ப்பணிப்பது தொடர்பிலும் அமெரிக்கா அவதானம் செலுத்தியுள்ளதென்று, ஜோ பைடன் அவர்கள் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.