பொதுப்பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவின் செயற்பாடுகளினால் தமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஆளும் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார குற்றம் சுமத்தியுள்ளார்.

இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

அமைச்சர் சரத் வீரசேகர தமக்கு தேவையானவர்களை அரசியல் நோக்கில் பொலிஸ் நிலையங்களில் உயர் பதவியில் அமர்த்துகின்றார். அமைச்சர்களான காமினி லொக்குகே மற்றும் சரத் வீரசேகர ஆகியோர் மிகவும் இழிவான அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாதுக்க பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி இடம்மாற்றி, காமினி லொக்குகேவிற்கு நெருக்கமான ஒருவர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து பொலிஸ் திணைக்களத்திற்கு பொறுப்பான அமைச்சரான சரத் வீரசேகரவிடம் பல தடவைகள் முறையிட்டேன். இந்த இழிவான செயலை செய்ய வேண்டாம் என நான் அவரிடம் கூறினேன், பொலிஸ் நிலையத்தில் சுயாதீனமான ஒரு அதிகாரி கடமையில் இருக்க வேண்டும் என கூறினேன்.

அரசியல் ரீதியான நியமனங்கள் மேற்கொண்டால் எங்களது பாதுகாப்பிற்கு அந்த ஆண்டவனே துணை. அண்மையில் பெளத்த பிக்குகளை பொலிஸார் இழுத்துச் சென்ற விவகாரம் குறித்து நான் சரத் வீரசேகரவை விமர்சனம் செய்தேன், அதனை மனதில் வைத்துக் கொண்டு இப்பொழுது என்னை பழிவாங்குகின்றார்.

இந்த விடயங்கள் குறித்து நான் ஜனாதிபதிக்கு நீண்ட கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளேன். மேலும் பாதுக்க அபிவிருத்தி இணைப்புக்குழுவின் தலைமைப் பதவியிலிருந்து விலகிக் கொள்கின்றேன்.

இவ்வாறான இழிவான காரியங்கள் செய்யும் அமைச்சர்களினால் அரசாங்கத்திற்கு அவப்பெயர் ஏற்படுகின்றது என ஜகத் குமார குற்றம் சுமத்தியுள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.