மறைந்த தலைவர் மர்ஹூம் அஷ்ரபின்  21 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு இதனைப் பதிவு செய்கின்றேன்.

முஸ்லிம் சமூக அரசியலில் முத்திரை பதித்து அதற்கு முகவரி தந்த அன்னாரின் மறைவு சமூகத்திற்கு பேரிழப்பாகவே இன்னும் இருக்கின்றது. அதுவும் இன்றைய காலகட்டத்தில் அவரின் தேவை பெரிதும் உணரப்படுகின்றது. 

மறைந்த தலைவர் அஷ்ரபின் அரசியல் வரலாற்றுப் பயணம் இடைநடுவில் தரிக்கப்பட்ட துயர சம்பவத்தால் முஸ்லிம் சமூகம் துவண்டு போய் நிலை குலைந்தது. முஸ்லிம் சமூகத்தின் அரசியல் தளம் தன்னை சுதாகரித்துக்கொண்டு எழுந்து நிற்க முடியாமல் இன்னும் தட்டுத்தடுமாறிக் கொண்டுதான் இருக்கின்றது. 

கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக முஸ்லிம் சமூக அரசியலில் ஒரு வெறுமை இருப்பதை நாம் உணர்கின்றோம். அவர் விட்டுச் சென்ற உரிமைப் போராட்டங்களை தொடர்ந்து நிறைவேற்றக் கூடிய சக்தியை இறைவன் நமக்கு வழங்க வேண்டும். 

மர்ஹூம் அஷ்ரப் வெறுமனே ஒரு சமூகத்தின் தலைவராக தன்னை அடையாளப்படுத்தாமல் ஓர் ஆன்மீகத் தலைவராகவும் சிறுபான்மை சமூகத்தின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் மிளிர்ந்தார். அவரது இறுதிக்காலத்தில் "தேசிய ஐக்கிய முன்னணி" என்ற பேரியக்கத்தை உருவாக்கி மூன்று சமூகங்களினதும் ஒற்றுமை இயக்கமாக அதனை வளர்த்தெடுக்க நடவடிக்கை மேற்கொண்டார்.  அதன் மூலம் நமது நாட்டில் மறுமலர்ச்சி அரசியல் ஒன்றை முன்னெடுக்க முடியுமென பெரிதும் நம்பினார். அதற்காகவும் உழைத்தார், பல்வேறு அர்ப்பணிப்புக்களை மேற்கொண்டார்.

அவரது குறுகிய கால அரசியல் வாழ்வில் பல்வேறு சாதனைகளை மேற்கொண்டார்.சவால்களையும் சாதனைகளாக்குவதற்கு அவரது பேரம்பேசும் அரசியல் வித்தை பெரிதும் உதவியது. தமக்கு கிடைத்த அரசியல் அமானிதத்தை பயன்படுத்த வேண்டிய இடங்களில் முறையாக பயன்படுத்தி சிறுபான்மை சமூகங்களின் வெற்றிக்காக பெரிதும் உழைத்த அரசியல் வித்தகர் அவர். சமூக இலட்சியங்களை வெற்றி கொள்வதில் சாதுரியத்தையும் துணிவையும் கடைப்பிடித்தவர். 

1980களில் ஆயுதமேந்திய பல்வேறு குழுக்கள் வடக்கு கிழக்கில் அட்டகாசம் புரிந்து கொண்டிருந்த அன்றைய பின்னணியில், சில முஸ்லிம் இளைஞர்களும் அந்த ஆயுத கவர்ச்சிக்குள் அள்ளுண்டு சென்று ஆபத்தான நிலையை தோற்றிவித்ததனால் சமூகத்தில் பதற்றமான சூழல் ஒன்று ஏற்பட்டது. அவ்வாறான ஒரு பயங்கரமான சூழலில்தான் மாதலைவர் அஷ்ரபின் ஆளுமைமிக்க தலைமைத்துவம் வெளிக்கிளம்பியது. அதன் பின்னர் அந்த இளைஞர்களுக்கு மத்தியில் மன மாற்றங்களை ஏற்படுத்தி அவர்களையும் பங்காளிகளாக்கி தனது அரசியல் பயணத்தை மேற்கொண்டார். செயல்திறன், பேச்சாற்றல், வாதத்திறமை, வலிமையான கொள்கைப் பற்றுகள் என்பன மர்ஹூம் அஷ்ரபிடம் ஜொலித்தன.

1986ம் ஆண்டு நவம்பர் 21 ம் திகதி தெமட்டக்கொட "பாஷாவில்லா" மண்டபத்தில் முஸ்லிம் காங்கிரஸ் எனும் கட்சியை பிரகடனப்படுத்தி விட்டு அவர் ஆற்றிய பேருரை பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியதொன்றாகும்.

மர்ஹூம் அஷ்ரபுடன் இணைந்து சமூக மற்றும் அரசியல் பணிகளில் மாத்திரமன்றி அவரது பெரும்பாலான செயற்பாடுகளில் இணைந்து பணியாற்றியவன் என்ற வகையில் அவர் தொடர்பில் பல்வேறு விடயங்களை பொது வெளியில் பதிய முடியுமென்ற போதும் விரிவஞ்சி அவற்றை தவிர்த்து, அவருக்கு ஜன்னதுல் பிர்தவ்ஸ் எனும் உயரிய சுவர்க்கம் கிடைக்க பிரார்த்திக்குமாறும் அவர் கண்ட கனவை நனவாக்க பாடுபட முன்வருமாறும் அழைப்பு விடுக்கின்றேன்.

எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.