"சதோசவின் ராகம களஞ்சியசாலைக்கு வந்த, அந்த வெள்ளைப்பூண்டு கொள்கலன் அப்படியே நள்ளிரவில், “பில்” கூட போடாமல், ஒரு தனியார் நிறுவனத்துக்கு, கிலோ 145/= கணக்கில் கொடுக்கப்படுகிறது" என்று தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு:

 “நள்ளிரவு வெள்ளைப்பூண்டு கொள்ளை”

<நேற்றிரவு தேசிய தொலைகாட்சி ரூபவாஹிணியில் நான் சிங்கள மொழியில் சொன்னது>

“டொலர் பிரச்சினையால், துறைமுகத்தில் தேங்கி இருக்கும், இறக்குமதி செய்யப்பட்ட, உணவு பொருட்களை, அரசாங்கமே பொறுப்பெடுத்து, நாட்டுக்குள் கொண்டுவந்து, பொதுமக்களுக்கு, மலிவான விலையில் கொடுங்கள்” என, “சதோச” (CWE) என்ற அரச நிறுவனத்துக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச பணிப்புரை விடுத்தாராம்.

ஆகவே துறைமுகத்தில் இருந்த ஒரு வெள்ளைப்பூண்டு கொள்கலனை “சதோச”வின் களஞ்சியசாலைக்கு கொண்டு வந்தார்களாம்.

அப்புறம் நடந்ததுதான் சுவாரசியம்..!

“சதோச”வின் ராகம களஞ்சியசாலைக்கு வந்த, அந்த வெள்ளைப்பூண்டு கொள்கலன் அப்படியே நள்ளிரவில், “பில்” கூட போடாமல், ஒரு தனியார் நிறுவனத்துக்கு, கிலோ 145/= கணக்கில் கொடுக்கப்படுகிறது.

அதன் பின் நிகழ்ந்தது, அதைவிட மகா சுவாரஸ்யம்..!

இப்படி நள்ளிரவில் கொடுக்கபட்ட அதே வெள்ளைப்பூண்டு கொள்கலனை, அதே “சதோச” நிறுவனம், கிலோ 445/= கணக்கில் மீண்டும் வாங்குகிறது.

அதன் பின் அது கிலோ 500/= மேல் அப்பாவி வாடிக்கையாளர் பொது மக்களுக்கு நாடு முழுக்க உள்ள “சதோச” முகவர் நிலையங்கள் மூலம் விற்கப்படுகிறது.

இதுதான், “நள்ளிரவு வெள்ளைப்பூண்டு கொள்ளை” .

இப்படியே இதற்கு முன்னும் சீனி, பால்மா, மாவு, உளுந்து ஆகிய கொள்கலன்கள் விற்கப்பட்டதாக, இப்போது இந்த நடு ராத்திரி கொள்ளைக்கு துணை போக முடியாமல், மனம் நொந்து, இந்த நாட்டை காப்பாற்ற வந்த தேசிய வீரர்களின் நிர்வாகத்தில் இருந்து, பதவி விலகும், பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை நிர்வாக இயக்குனர் துசான் குணவர்தன கூறுகிறார்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.