இன்று சர்வதேச மனநல தினம்

நாம் மனமகிழ்ச்சியுடன் இருக்க ஆசைப்படுகிறோம்

மனமகிழ்ச்சி என்றால் என்ன அதை எப்படி அடைவது என்று தெரிந்து கொள்வோம்.



மகிழ்ச்சி என்பது மன அமைதி, மனஆறுதல், திருப்தி, சந்தோசம் போன்ற உணர்வுகளுடன் தொடர்பான நல் வாழ்வுநிலை என குறிப்பிடலாம். பொருளால், புகழால், பணத்தால், பலத்தால், சமூக அந்தஸ்தால் மனமகிழ்ச்சியை அடையலாம் என்று நினைப்பவர்கள் நம்மில் இல்லாமல் இல்லை. இவை எவற்றாலும் மனமகிழ்ச்சியை அடைய முடியாது என்று நம்புகின்றவர்களும் எம்மில் இருக்கின்றனர். 

ஆம்…! நாம் எல்லோரும் மகிழ்ச்சியை தேடுகிறோம். மனஅமைதியை தேடுகிறோம். படித்தவர்கள், படிக்காதவர்கள், பணக்காரர்கள், ஏழைகள், ஆரோக்கியமானவர்கள், நோயாளர்கள் இப்படி எல்லோருமே மகிழ்ச்சியை தேடிக்கண்டுபிடிக்கவும் அதை அனுபவிக்கவும் ஆசைப்படுகின்றனர். ஆனால் நம்மில் எல்லோரும் மகிழ்ச்சியை தேடிக்கண்டுபிடித்து அதை அனுபவித்திருக்கிறோமா? என்று எம்மையே ஒரு கணம் கேட்டுக் கொள்வோம்..!

நாம் யாரும் துயரங்களையும் கவலைகளையும் எதிர்பார்ப்பதில்லை. மகிழ்ச்சியையே வேண்டி நிற்கிறோம். 

மகிழ்ச்சியை வழிநடத்தும் பாதையில் நாம் பயணிக்கத் தவறிவிட்டால் அவ்வாறே மகிழ்ச்சிக்கான பாதை எது என்பதை சரியாக கண்டுபிடிக்க தவறிவிட்டால் நாம் விரும்பியோ விரும்பாமலோ பரிதாபகரமாக மனச்சோர்வு அடைந்தவராக ஆகிவிடலாம். 

எமக்கு வெளியில் இருக்கின்ற, எம் கண்களுக்குத் தெரிகின்றவற்றால் மனமகிழ்ச்சியை உருவாக்க முடியும் என்று நாம் நினைக்கலாகாது. உண்மையான மனமகிழ்ச்சி எமக்குள் இருந்து உருவாகக்கூடியதாகவும் அது உண்மையாக உணரமுடியுமான ஒரு உணர்வாகவும் இருக்க வேண்டும். 

நாம் உண்மையாக அனுபவிக்கும் ஆறுதலும் அமைதியும் எம்மை வலிமைப்படுத்துவதை நாம் உணர்ந்தால் நாம் மகிழ்ச்சியை உணர்கிறோம் என்று பொருள் கொள்ளலாம். 

மகிழ்ச்சியை எப்படி உணர்வது?

நற்செயல்களால் எமது உள்ளம் அழகடையும் போது மனமகிழ்ச்சியை உணரலாம்

வணக்க வழிபாடுகளில் எமது இதயம் இனிமையை சுவைக்க ஆரம்பிப்பதை உணர்ந்தால் மனமகிழ்ச்சியை உணரலாம் 

இன்னொரு உள்ளம் எமது உள்ளத்தால் நொந்து போவதில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டால் மனமகிழ்ச்சியை உணரலாம்

உழைப்பிலும் உறவிலும் குடும்ப இணைப்பிலும் இனிமையை அனுபவிப்பதை இதயம் உணர்ந்தால் மனமகிழ்ச்சியை உணரலாம்

பூமியில் எப்பொழுதும் நல்லவையே நடக்க வேண்டும் என்று திறந்த மனதுடன் பணியாற்றுவதை உள்ளம் உணர்ந்தால் உண்மையான மனமகிழ்ச்சியை உணரலாம். 

இறைவனின் வழிகாட்டலை பின்தொடர்வதில் இதயம் இன்பத்தை நுகர்ந்தால் மனமகழ்ச்சியை உணரலாம்

இறைவன் எமக்குத் தந்திருப்பவை ஒவ்வொன்றின் மீதும் நாம் திருப்தியடைவதை எமது இதயம் உணர்ந்தால் நாம் பூமியில் மிகவும் மனமகிழ்ச்சியான நபராக மாறலாம். 

மகிழ்ச்சிக்கான ஆசை ஒரு இயல்பான ஆசையாகும். அது இறைவனின் அருளால் எமது இதயத்தில் ஊற்றெடுத்துப் பாயும் ஓர் உன்னத உணர்வாகும். அந்த உணர்வினை உணர உயிரோட்டமான உள்ளம் தேவை. எமது உள்ளத்தை உயிரோட்டமானதாக ஆக்கவேண்டிய பொறுப்பு எம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. 


அஸ்ஹர் அன்ஸார் 

மனோதத்துவ ஆலோசனை நிபுணர்

மனோதத்துவ எழுத்தாளர்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.