கே.சுந்தரலிங்கம்,ஆ.ரமேஸ் 

200 இற்கும் குறைந்த மாணவர்கள் உள்ள பாடசாலைகள் இன்று (21) திகதி திறக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும்  பல பாடசாலைகள் பூட்டப்பட்டிருந்தமையே காணக்கூடியதாக இருந்தன.

ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட 200 குறைந்த மாணவர்களை கொண்ட தமிழ் மொழிமூலம் 53 பாடசாலைகளும் சிங்கள மொழி மூலம் 21 பாடசாலைகளுமாக மொத்தம். 74 பாடசாலைகள் இன்று திறக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஒரு சில பாடசாலைகளில் அதிபரும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர்களும் மாத்திரம் சமூகம் தந்திருந்ததுடன், இன்னும் சில பாடசாலைகளில் அதிபர் ஓரிரு ஆசிரியர்களும் மாணவர்களும் வருகைத் தந்திருந்தனர்.

எனினும் ஒரு சில பாடசாலைகளில் அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் வருகைத் தரவில்லை. பல பாடசாலைகளில் பொலிஸார் மாத்திரம் பாதுகாப்பு பணிகளில் ஈடுப்பட்டிருந்தனையும் காணக்கூடியதாக இருந்தது.

பெரும்பாலான பாடசாலைகளில் மாணவர்கள் நீண்ட இடைவெளிக்கு பின் சுகாதார வழி முறைகளுக்கு அமைய மிகவும் விருப்பத்துடன் பாடசாலைக்கு வருகை தருவதனை காணக்கூடியதாக இருந்தன. எனினும் ஆசிரியர்கள் வருகை தராததனால் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் இடம்பெறவில்லை.

ஒரு சில பாடசாலைகளில் மாணவர்களின் நலன் கருதி அதிபர்கள் வருகை தந்திருந்த போதிலும் அவர்கள் கையொப்பமிடும் புத்தகத்தில் கையொப்பமிடாது இருப்பதாகவும் தெரிவித்தனர்.

இன்று பாடசாலைகள் ஆரம்பிப்பதற்காக ஹட்டன் கல்வி வலயத்தில் பொது சுகாதார பிரிவினர் மற்றும் பெற்றோர்கள் பழைய மாணவர்கள் அரசியல் பிரநிதிகள் பிரதேச செயலாகம் உட்பட பலர் இணைந்து நேற்று (20)  துப்புறவு பணிகளில் ஈடுப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் ஒரு சில தோட்டப் பாடசாலைகளுக்கு மகிழ்ச்சியுடன் சென்ற குறைந்தபட்ச மாணவர்கள் அங்கு அதிபர், ஆசிரியர்களின் வரவுக்காக காத்திருந்து காலை 09 மணியளவில் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

மேலும்  கடந்த காலங்களில் கல்வி நடவடிக்கை முடக்கப்பட்டு பாடசாலைகள் மூடியிருந்த நிலையில், தோட்டப்புற பாடசாலைகளின் வளாகங்கள் காடுகளாகியுள்ளதுடன் பெற்றோர்களின் உதவியை பெற்று, அங்கு துப்பரவு செய்வதற்கான நடவடிக்கைகளை கூட அதிபர்கள்,ஆசிரியர்கள் மேற்கொள்ளவில்லை என கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மிரர்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.