(மர்ஹூம் ஆதில் பாக்கிர் மாக்காரின் ஐந்தாவது நினைவு தினத்தை முன்னிட்டு எழுதப்பட்டது)

ஏ.ஜி.நளீர் அஹமட்

மர்ஹூம் ஆதில் பாக்கிர் மாக்கார் முன்னாள் வீடமைப்பு நிர்மாணத்துறை இராஜாங்க அமைச்சரும்,முன்னாள் ஊடகத்துறை அமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ இம்தியாஸ் பாக்கிர்  மாக்கார் மற்றும் பரீதா ஆகியோரின் நான்காவது புதல்வராவார்.1990 ஆம் ஆண்டு பிறந்து தனது 26 ஆவது வயதில் தனது உயர்கல்விக்காக சென்ற போது 2016 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி லண்டனில் காலமானார்.பன்முக ஆளுமை மிக்க திறமைசாலியான,தலைமைத்துவப் பண்புகள் நிறைந்த ஒருவர்.அனைவராலும் அரவனைக்கப்பட்ட அனைவரையும் அரவணைக்கும் நல்லதொரு எதிர்கால தலைவனை எமது நாடு இழந்து விட்டது.

இலங்கை சட்டக் கல்லூரியில் Atorney at Law வைப் பூர்த்தி செய்து விட்டு,பழம்பெரும் London School of Economics and Political Science இல் ஒப்பீட்டு அரசியல் துறையில் உயர் கல்வியைத் தொடர எதிர்கால உலக தலைவர்களை உருவாக்கும் நோக்கில் ஐக்கிய இராச்சியம் வழங்கும் Chevening புலமைப்பரிசிலில் தெரிவு செய்யப்பட்டு லண்டன் சென்றிருந்த வேளை இறைவன் தன் பக்கம் அழைத்துக் கொண்டான். புகழ் பெற்ற பாக்கிர் மாக்கார் குடும்பத்தின் புதிய தலைமுறை அரசியல் வாரிசாக பலராலும் கருதப்பட்டார்.அனைவருடனும் இன்முகத்தோடு பழகுபவர். பண்பானவர்,பணிவானவர்.

பாடசாலைக் கல்வியை பூர்த்தி செய்த பின்னர் சமூக சேவையிலும் தனது தந்தையின் அரசியல் பணிகளிலும் ஒத்துழைத்தார். உலமாக்கள், புத்திஜீவிகள், சர்வமத தலைவர்கள், அரசியல்வாதிகள், பொதுமக்களுடன் மிகவும் இனிமையாக பழகி அவர்கள் அனைவரினதும் நன்மதிப்பை சிறுவயது முதல் பெற்றுக் கொண்டார். “யார் கல்வியைத் தேடி ஒரு பாதையில் பயணிக்கிறாரோ அல்லாஹ் அவருக்கு சுவனம் செல்வதற்கான பாதையை இலகுபடுத்துவான்” என நபியவர்கள் கூறினார்கள்.

இளமைக்காலத்தில் நல்லவற்றின் பால் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட ஆதில் பாக்கிர் மாக்காருடைய மறுமை வாழ்வை ஒளியூட்ட இறைவன் போதுமானவன்.

தான் கற்றதிலிருந்து சமூகத்திற்கும் நாட்டிற்கும் சேவையாற்ற வேண்டும் என்ற உயரி நோக்கில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் சர்வதேச விவகாரங்களுக்குப் பொறுப்பான பணிப்பாளராக செயற்பட்ட ஒருவர்.தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் சர்வதேச குழுவை உருவாக்கி இந்நாட்டு இளைஞர் யுவதிகளுக்கு சர்வதேச பங்கேற்புக்கான வாயில்களை திறக்க முற்பட்டார்.இயல்பான ஆற்றலும் திறமையும் கொண்ட கிராமப்புற இளைஞர்கள் எத்தகைய அரசியல் தலையீடுகளும் இன்றி உயர் பதவிகளுக்கு வர வாய்ப்பளித்தவர்.சட்டத்தரணி சசிந்து துலான்ஞன இதற்கு ஓர் சிறந்த உதாரணமாகும்.தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் தான் உருவாக்கிய சர்வதேச குழு(International Pool) நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலிருந்தும் 78 இளைஞர்களை உள்ளடக்கி இருந்தது. ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் 3 இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.தேர்ந்தேடுப்புச் செயற்பாடுகளுக்கு ஆதில் பாக்கிர் மாக்கார் மட்டக்களப்பு,கிளிநொச்சி,முல்லைதீவு ஆகிய மாவட்டங்களுக்கு விஜயம் செய்தது நினைவிற்கு வருகிறது. இந்த இளைஞர்கள் பல்வேறு மாநாடுகள், உச்சி மாநாடுகள், இளைஞர் பரிமாற்ற நிகழ்ச்சிகள் மற்றும் பிற சர்வதேச மன்றங்களில் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தினர்.இந்திய-இலங்கை இளைஞர் நட்பறவு சங்கத்தை ஸ்தாபித்து 100 இலங்கை இளைஞர் யுவதிகளை பரிமாற்ற நிகழ்ச்சிக்காக இந்தியாவிற்கு அனுப்பி வைத்தார். இந்த எண்ணக்கருவின் முன்னோடி ஆதில் பாக்கிர் மாக்காராவார்.இத்தகைய எண்ணக்கரு உருவாக்கங்களுக்கு தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் தடையாக இருக்கவில்லை.இன்று தேசிய இளைஞர்  சேவைகள் மன்றம் இலங்கை இளைஞர்களை இணைத்துக் கொள்ள வேண்டும்.இலங்கையிலுள்ள பெருன்பான்மை இனத்துவ இளைஞர்களுக்குரிய ஒரு கட்டமைப்பல்ல.தமிழ்,முஸ்லிம் சகல இளைஞர்களுக்குமுரிய கட்டமைப்பு அது.இங்கு கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு விடயமுண்டு.இன்றைய இளைஞர்கள் தத்தமது சமூகத்திற்குள் மாத்திரமுள்ள  இளைஞர் அமைப்புகளில் இனைந்து செயற்படுவது என்ற வட்டத்திற்கு வெளியே இத்தகைய தேசிய கட்டமைப்புகளில் இனைந்து செல்வாக்கு செலுத்த முன்வர வேண்டும்.செல்வாக்கு ஆற்றல்களை இங்கு தான் பிரயோகிக்க வேண்டும்.இவை இந்நாட்டிலுள்ள ஜனநாயக பங்கேற்புகளுக்கான களமாகும்.

2015 இல் ஐ.நா இளைஞர்(UN Youth Delegate)பிரதிநிதிகள் தெரிவு முறையில் இலங்கையைப் பிரதிநித்துவப்படுத்தி அங்கத்துவம் பெற்று கருத்துரைத்தார்.தன்னுடைய அரசியல் நிலைப்பாடு வேறாக இருந்தாலும் அப்போதைய மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஐ.நா.வில் உரையாற்றும் போது நாட்டிற்காகவே  குரல் கொடுத்தார்.கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக்கட்டமைப்பையே அங்கு சுட்டிக்காட்டினார்.டீ.பி.ஜாயாவின் பாசறையில் அரசியல் கற்ற பாக்கிர் மாக்கார் குடும்பத்தின் இளம் தலைவரும் அதே அடிச்சுவடிகளே பின்பற்றினார்.தனது தந்தையின் நேரடி அரசியல் பயிற்றுவிப்பில் கட்சி அரசியலுக்குள் புகுந்த ஆதில் பாக்கிர் மாக்கார் ஐக்கிய தேசிய கட்சியின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்களிப்பினையும் பெற்றுக் கொள்ள பணி செய்தார்.தந்தையின் நேரடி அரசியல் பயிற்றுவிப்பு அவருடைய ஆளுமையை பிரயோக ரீதியாக புடம் போட்டது என்றால் அது மிகையாகாது. கட்சி அரசியலில் தன்னை ஈடுபடுத்திய அவர், ஆரம்ப முதலே ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கை சார்ந்த விடயங்களில் கவனம் செலுத்தி கட்சியின் யதார்த்தமான கொள்கையின் பிரகாரம் சமூக மக்கள் உணர்திறன் பால் நின்று கட்சிக் கட்டமைப்பை பலப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டார்.அப்போதைய கட்சித் தலைவரும் பிரதமருமான திரு.ரணில் விக்ரமசிங்கவுடன் சிறந்த நட்புறவைக் கொண்டிருந்த ஆதில் சர்வதேச உறவுகள்,விவகாரங்களில் கட்சி சார் செயற்பாடுகளை பலப்படுத்துவதில் பக்கமலமாக செயற்பட்டார்.ஐக்கிய தேசியக் கட்சி இந் நாட்டு இளைஞர்களுக்கு கட்டமைத்த வேலைத்திட்டங்களின் அடுத்த கட்ட பரிமானம் குறித்து தொடர்ச்சியாக பல்வேறு கட்ட கலந்துரையாடல்களை கட்சிக்குள்ளும் கட்சிக்கு வெளியேயும் மேற்கொண்டு புதிய செயற்திட்டத்திற்கான கொள்கை சார் உள்ளீடுகளை(Inputs for policy) வரைவதற்கான செயன்முறையில் பங்களித்தார்.

அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ உட்பட ஆளும் கட்சி, எதிர்க் கட்சி அரசியல்வாதிகளுடன் நல்ல தொடர்பு வைத்திருந்த இவர் எல்லா அரசியல்வாதிகளாலும் மதிக்கப்பட்டார்.எத்தகைய வேறுபாடுகளாலும் அவர் பின்தள்ளப்படவில்லை.இத்தகைய இளம் ஆளுமைகளின் அங்கீகரிப்பே இன்றைய இளம் சமூகம் இவரிடம் கற்றுக் கொள்ள வேண்டியதாகும்.எத்தகைய வித்தியாசமான வேறுபாடுகளாலும் புறம் ஒதுக்காத, சகலரினதும் ஏற்புடமையைப் பெறும் தேசிய மட்ட அங்கீகரிப்புகளைப் பெறும் இளம் ஆளுமைகளையே இன்று நாடு வேண்டி நிற்கிறது.தான் நம்பிக்கை கொண்ட மதத்தின் மீதான அதீத பற்று அதனோடினைந்த நடு நிலை சிந்தனை,சமூக நீதி,கொள்கை சார்ந்த பற்று,ஜனநாயகம்,ஐக்கியம்,பல் மொழியாற்றல்,சிறந்த அரசியல்,சமூக தொடர்பாடல் திறன்,சமகால விவகார உணர் திறன்,விழுமியம் பேனல்,சிறந்த ஊடக தொடர்பாடல்,சர்வதேச தொடர்புகள் மற்றும் 

மனிதநேயம் என்பனவற்றை தன்னகத்தே கொண்டு செயற்பட்டமையே ஆதில் பாக்கிர் மாக்காரை 26 வயதில் நாடும் உலகும் அறிந்து கொண்டது.இன்றைய இளைஞர்கள் இத்தகைய விடயங்களில் கவனம் செலுத்தி பரந்த மட்டங்களில் செயற்பட முன்வர வேண்டும்.ஆளுமைகளால் நாட்டையும் உலகை வெல்ல வேண்டும்.குறுகிய கால லன்டன் கற்றையில் அவருடைய ஆளுமையால் இன்றும் கூட London School of Economics and Political Science பல்கலைக்கழகம் இவரின் நினைவாக தனது இணையதள பக்கத்தில் நினைவுக்குறிப்பொன்றை தொடர்ச்சியாக போனி வருகிறது.இங்கு இனமே,நாடோ,மதமோ,அரசியலோ செல்வாக்குச் செலுத்தவில்லை.தனிப்பட்ட பன்முக ஆளுமையும் தன்னுடைய உள்ளார்ந்த ஈடுபாடுமே அங்கீகரிப்புகளைப் பொற்றுக் கொடுத்தது.இளைஞர்களின் நேரிய செல்வாக்கு இங்கு முக்கியம்.

இன்று நாடு குறுகிய தனிநபர்,குடும்ப,கட்சி,மத அரசியலிலுக்குள்ளும் சிக்குண்டு சுய நல அதிகார இருப்பிற்க்கான ஸ்திரங்களை ஏதேனும் வழிமுறைகளினூடாக தக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு இலங்கையின் தேச நலனை,தேசத்தைக் கட்டியெழுப்பும் பன்முக ஆற்றலை பிற்படுத்தி,தேசிய ஒற்றுமைக்கும் இனங்களின் ஐக்கியத்திற்கும் அரசியல் தேவைக்காக தொடர்ச்சியாக பரஸ்பர சந்தேகங்களை உருவாக்கி குளிர்காய நினைக்கும் சக்திகளைத் தோற்கடிக்கும் ஆற்றல் இளைஞர்களுக்கே உண்டு.இன்றைய இந் நாட்டு இளைஞர்கள் தமது துறைகளினூடாக இந்த விடயங்கள் பற்றி சிந்தித்து சமூகத்தின் இருப்பை பலப்படுத்த முன்வர வேண்டும்.தனது ஆற்றலை நாட்டிற்கு வழங்க வேண்டும்.இந்த வகையில் சமகாலத்தில் இருக்க வேண்டிய ஒரு இளம் தலைவரை இழந்து விட்டோம்.

தேசிய ஐக்கியத்திற்கான பாக்கீர் மாக்கார் நிலையம்,அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம், பலஸ்தீன ஒருமைப்பாட்டு இயக்கம் ஆகியவற்றில் தன்னை வொகுவாக ஈடுபடுத்தி முற்போக்கு ரீதியான கருத்துக்களை முன்வைத்து சிவில் இயக்க செயற்பாடுகளின் வினைதிறனான முன்னேற்றத்திற்கு பாரிய பங்களிப்பை செய்தார்.இலங்கையில் வதிவிட தூதரகங்களைக் கொண்டுள்ள முஸ்லிம் நாட்டு இராஜதந்திரிகளுடன் தொடர்புகளை கொண்டிருந்ததோடு தேசிய மட்ட சமூக நிகழ்வுகளில் அவர்களின் ஒத்துழைப்புகளை பெற்றுக் கொடுப்பதில் இணைப்புப் பாலமாக செயறப்பட்டார். 

பிரிவினைவாத உணர் திறனிலிருந்து இளைஞர்களை மீட்டு இந் நாட்டிலுள்ள சகல இன இளைஞர் யுவதிகளும் ஒன்றாக இனைந்து பனியாற்ற முடியுமான தேசிய பரப்பொன்றை உருவாக்குவதற்கான முன்னாயத்த செயற்பாடுகளில் ஈடுபட்டார்.இதில் முற்போக்கு சிந்தனை மற்றும் செயற்பாடுகள் உள்ள சகல துறை சார் இளைஞர்களை கட்சி அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் இனைத்துச் செயற்படும் ஆர்வத்தை வெளிப்படுத்தியமை அவரோடு இனைந்து பயனியற்றியவர்கள் நன்கு அறிவர்.பிரிவினைவாதங்களால் நாட்டிற்கு சாதகமான நிலைபோறுகளை அடைய முடியாது என்பதை அடிக்கடி நினைவூட்டினார்.அதிதியாக தந்தை கலந்து கொள்ள வேண்டிய பல்வேறு நிகழ்வுகளில் தந்தையின் வேலைப்பழு காரணமாக இவர்

கலந்து கொண்டு ஆற்றிய உரைகளில் எதிர்கால தலைவருக்குரிய சிந்தனை தூர நோக்கை வெளிப்படுத்தினார்.

பல்வேறு பல் கட்சி இளைஞர்கள் கலந்து கொள்ளும் கலந்துரையாடல்களில் பங்கேற்று ஆக்கபூர்வமான கருத்துக்களால் பலரின் நன்மதிப்பை பெற்றுக் கொண்டார்.இன்றைய தமிழ் முஸ்லிம் சமூகங்களின் அறிவார்ந்த இளைய சமூகம் தேசிய விவகார கலந்துரையாடல்களில் பங்கேற்று தமது இன மத கலாசார பெறுமானங்களை பேனிய வன்னம் கொள்கைசார் விடயப்பரப்புகளுக்கான உள்ளீடுகளை வழங்க வேண்டும்.

இனங்களுக்கிடையிலான சந்தேகங்களை தப்பபிப்பிராயங்களை ஆரோக்கியமான தொடர்பாடல் மூலம் நிவர்த்திக்க முன் வர வேண்டும்.

இன்று இலங்கையில் கட்சி அரசியல் பரந்த கட்டமைப்பில் முன்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் தருனத்தில் ஆதில் மாக்கிர் மாக்காரின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.கட்சிகளின் அரசியல் இருப்பிற்கான இனத்துவ கோஷங்களால் தேர்தல் காலங்களில் மேலோங்கும் போலியான தேசப்பற்றை தோற்றக்கடிக்கும் அறிவுபூர்வமான ஆற்றல் இளைஞர் சமூகத்திற்கே உண்டு.

இலங்கை இளைஞர்களுக்கு அபார ஆற்றல் உள்ளது என்றும் சவால்களை எதிர்கொள்ளவும், பொதுவான குறிக்கோள்களை அடைய முன்னேறவும் எங்களுக்கு உறுதியும் திறனும் உள்ளது என்பதை ஆதில் பாக்கிர் மாக்கார் அடிக்கடி சுட்டிக்காட்டுவார்.

அவருடைய மறுமை நலனிற்காக அவருடைய குடும்பத்தினர்,நண்பர்கள் இணைந்து ஆதில் பாக்கிர் மாக்கார்(Adhil Bakeer Markar Foundation) அறக்கடளை என்ற பொதுவான ஒரு கட்டமைப்பை உருவாக்கி பல்வேறு தேசிய மட்ட முயற்சிகளை ஆரம்பித்துள்ளனர். எதிர்காலத்திற்கு நம் நாட்டிற்காக “ஆதில் பார்த்த எதிர்காலத்திற்கான தூர நோக்கு முகவர்களாக இருப்பதற்கான வாய்ப்பை இளம் இலங்கையர்களுக்கு வழங்குவதை இலக்காக் கொண்டு துருக்கியின் முன்னாள் பிரதமர் மேதகு பேராசிரியர் அஹ்மத் தாவுத் ஒக்லோவுடனான "பன்முக கலாச்சார சமூகங்களை வடிவமைப்பதில் இளைஞர்களின் பங்கு" என்ற தலைப்பில் சகல இன இளைஞர் உரையாடல் நிகழ்வென்றை 2017 ஆம் ஆண்டு நடத்தினர்.

தொடர்ந்து “இளைஞர்களை உள்ளூர்மயமாக்குதல் -ஐ.நா இளைஞர் வியூகம் 2030” எனும் தலைப்பில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரின் இளைஞர் விவகார தூதுவர் திருமதி ஜயத்மா விக்கிரமநாயக்க அவர்களின் பங்குபற்றலுடன் கலந்துரையாடல் நிகழ்வொன்றை 2019 இல் நடத்தினர்.தொடர்ந்து உள்ளூர் மட்ட இளைஞர் மேம்பாட்டுத் திட்டங்களை வடிவமைத்து செயற்படுகின்றனர்.

ஆதில் பாக்கிர் மாக்கார் போன்ற ஆளுமைகளிலிருந்து சமகால இளைஞர் யுவதிகள் கற்றுக் கொள்வதோடு முற்போக்கு ரீதியாக தமது துறைகளில் செயற்பட்டு தேசத்தின் தேவைகளை பூர்த்தி செய்யும் இளைஞர்களாக தற்துனிவுடன் நிலைபோறான அடைவுகளில் ஆற்றலை குவித்து குடும்பத்திற்கும்,சமூகத்திற்கும்,நாட்டிற்கும் பயனுள்ள மனிதர்களாக வாழ உறுதிபூனுவோம்.

தேச நலனிற்கும் தேசிய ஐக்கியத்திற்குமான இனைப்பு பாலமாக உணர்வு ரீதியானவன்றி அறிவார்ந்த பங்களிப்பை வழங்குவதோடு பங்கேற்புக்கான திறந்த வெளிகளை ஐக்கியமாக அடையாளப்படுத்துவோம் அல்லது உருவாக்க உறுதிபூனுவோம்.

(Siyane News)கருத்துரையிடுக

Blogger இயக்குவது.