எம்.றொசாந்த் 

குடும்பத்தையே கொலை செய்வோம் என பேஸ்புக் ஊடாக 17 வயது சிறுவன் ஒருவனுக்கு மிரட்டல் விடுத்து, நகைகள் மற்றும் பெரும் தொகை பணத்தினை கப்பமாக பெற்று வந்த நபர் ஒருவரை, நேற்று  (20), வட்டுக்கோட்டை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். 

வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த 17 வயதான சிறுவனுடன் ,  பேஸ்புக் போலி கணக்கு ஊடாக அறிமுகமான நபரொருவர், சிறுவனின் பெற்றோர் உள்ளிட்ட குடும்பத்தையே கொலை செய்ய போவதாக, பேஸ்புக் ஊடாக மிரட்டல் விடுத்து கப்பம் கோரியுள்ளார். 

மிரட்டலை அடுத்து, சிறுவன் கப்பம் செலுத்த தயாராகியுள்ளார். அதற்கு அந்நபர் பணத்தை வீட்டுக்கு சற்றுதொலைவில் உள்ள இடமொன்றை குறிப்பிட்டு, அங்கு பணத்தை வைத்து விட்டு செல்லுமாறு பணித்துள்ளார். அதற்கு சிறுவனும் சம்மதித்து, வீட்டில் இருந்த பணத்தை வீட்டாருக்கு தெரியாமல் எடுத்து சென்று அவ்விடத்தில் வைத்துவிட்டு வந்துள்ளார். 

அவ்வாறாக சில நாள்களாக குறித்த நபர் சிறுவனை மிரட்டி பணம் பெற்று வந்த வேளை, பணம் இல்லாத நேரங்களில் வீட்டிலிருந்து நகைகளையும் எடுத்து சென்று மாணவன் கொடுத்துள்ளார்.

இந்த சம்பவம் சில நாள்களாக நடைபெற்று வந்த நிலையில் , வீட்டில் இருந்து நகைகள் , பணம் என்பவை காணாமல் போவதை பெற்றோர் கண்டறிந்து, சிறுவனிடம் கேட்டுள்ளனர். அதன் போதே, மாணவன் சம்பவத்தை தனது பெற்றோருக்கு தெரிவித்துள்ளார். 

சம்பவம் தொடர்பில் பெற்றோரால் , வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், மிரட்டல் விட்டு கப்பம் பெற்று வந்த நபரை கைது செய்தனர், 

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சிறுவனிடம் இருந்து 3 மோதிரங்கள், 3 சங்கிலிகள், 3 காப்பு , ஒரு சோடி தோடு உள்ளிட்ட தங்க நகைகளுடன் , 2 இலட்சத்து 10ஆயிரம் ரூபாய் பணம் என்பவற்றை கப்பமாக பெற்று இருந்தமையை பொலிஸார் கண்டறிந்துள்ளனர். 

இந்நிலையில் குறித்த நபர், அந்தச் சிறுவனை தவிர வேறு நபர்களையும் அவ்வாறாக மிரட்டி கப்பம் பெற்று வருகின்றாரா, வேறு மோசடி சம்பவங்களிலும் தொடர்புகள் உண்டா எனும் கோணத்தில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.