கிழக்கு மாகாண அரச ஊழியர்கள் வருகின்ற தேர்தலில் அரசாங்கத்திற்கு தக்க பாடம் புகட்டுவர் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் தெரிவித்ததாவது,

அரசாங்கம் கிழக்கு மாகாண அரச ஊழியர்களின் ஒரு நாள் சம்பளத்தைக் கேட்டு இம்மாத சம்பளத்தில் இருந்து அதனை அறவிட ஏற்பாடு செய்துள்ளதாக அரச ஊழியர்கள் மிகவும் கவலையோடு தெரிவிக்கின்றனர்.

சகல பொருட்களினதும் விலைகள் பாரியளவில் அதிகரிக்கப்பட்டுள்ள அதேவேளை அரச ஊழியர்களின் சம்பளத்தில் எந்தவித அதிகரிப்பும் ஏற்படுத்தப்படவில்லை. மாறாக விடுமுறைக் கொடுப்பனவு, மேலதிக நேரக்கொடுப்பனவு எல்லாம் நிறுத்தப்பட்டுள்ளன. 

இதனால் பெருங்கஸ்டத்துக்கு மத்தியில் அரச ஊழியர்கள் வாழ்ந்து வருகின்றனர்.  இந்த கால கட்டத்தில் அவர்களின் ஒரு நாள் சம்பளத்தை அறவிடுவதென்பது கிழக்கு மாகாண அரச ஊழியர்களின் வயிற்றில் அடிக்கின்ற நிலையாகும். 

குளிருட்டப்பட்ட அறைகளில் இருந்து கொண்டு குளிரூட்டப்பட்ட சொகுசு வாகனங்களில் பயணிப்போருக்கு அரச ஊழியர்கள் தமது வாழ்க்கையைக் கொண்டு நடத்த பெரும் கஸ்டங்களை அனுபவித்து வரும் உண்மை நிலை தெரியாது. தெரிந்திருந்தால் இப்படியொரு தீர்மானத்துக்கு அவர்கள் வந்திருக்க மாட்டார்கள்.

ஒரு நாள் சம்பளத்தை அறவிடும் தீர்மானம் தொடர்பில் தாம் அடுத்தவருக்கு இனங்காட்டப்பட்டு விடுவோம் என்ற பயத்தில் விருப்பமில்லாமலே சம்மதம் தெரிவித்ததாக அரச ஊழியர்கள் பலர் என்னிடம் வேதனையோடு முறையிட்டனர்.

வாழ்க்கைச் செலவு வானளாவ உயர்ந்திருக்கின்ற நிலையில் வேறு எந்த மாகாணங்களிலும் இல்லாத நிலையில் கிழக்கு மாகாணத்தில் மட்டும் அரச ஊழியர்களின் சம்பளத்தில் கை வைப்பது குறைந்த பட்சம் சிலரது ஒரு நாள் உணவை துண்டாடும் செயலாகும். இது மனிதாபிமானமுள்ளவர்களால் அனுமதிக்க முடியாத நிலையாகும்.

இந்த விடயத்தில் தொழிற்சங்கங்கள் எதிர்ப்புக்களை வெளியிட்ட போதும்  அவை எவற்றையும் காதில் கொள்ளாது சம்பளத்தை அறிவடுவதில் அரசு குறியாக இருப்பது எனக்கு மிகவும் கவலையைத் தருகின்றது. இதிலிருந்து அரச ஊழியர்கள் மீது அரசுக்கு அக்கறை இல்லை என்பதை விளங்கிக் கொள்ள முடியும்.

இந்த நிலையில் அரசில் இருக்கும் கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர்களும்,  அரசுக்கு கூஜா தூக்குவோரும் கூட இந்த நிலையைக் கண்டு கொள்ளாமல் இருப்பது அரச ஊழியர்களின் நலன்கள் மீது அவர்களுக்கு அக்கறை இல்லை என்பதை தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது. அப்படி அக்கறை இருந்திருந்தால் அவர்கள் இந்த விடயத்தில் கவனம் செலுத்தியிருப்பார்கள். 

நாம் எமது ஆட்சியில் அரச ஊழியர்களுக்கு பல வரப்பிரசாதங்களை வழங்கினோம். அவர்களது அடிப்படைச் சம்பளத்தை குறைந்த பட்சம் 100 வீதத்தால் அதிகரித்தோம். எதிர் காலத்தில் எமது ஆட்சி வருகின்றபோது அரச ஊழியர்களது நலன் பேணும் பல திட்டங்கள் எம்மிடம் உள்ளன.  இதனை நாம் தெளிவு படுத்தியுள்ளோம். 

எனவே, கிழக்கு மாகாண அரச ஊழியர்களின் வேதனையும், கண்ணீரும் வருகின்ற தேர்தலில் இந்த அரசுக்கு தக்க பாடம் புகட்டும் என்பதில் எவ்வித சந்தேகமில்லை.

இவ்வாறு தெரிவித்துள்ளார். 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.