🖤

ஒரு வைத்தியசாலையில் சாதாரண பிரசவத்தின் மூலம் குழந்தையைப் பெற்றெடுத்த ஒரு தாயும், சிசேரியன் மூலம் குழந்தையைப் பெற்றெடுத்த ஒரு தாயும் சந்தித்துக் கொண்டனர்.

" சீ- செக்ஷன் மூலம் குழந்தையைப் பெற்றெடுப்பது அவ்வளவு சிரமமில்லை என்ன?" எனக் கேட்டதும் சிசேரியன் மூலம் குழந்தையைப் பெற்றெடுத்த அந்தத்தாய் இவ்வாறு பதில் சொன்னாள். 

வாசித்துப் பாருங்கள்.

மகளொருத்தி தாரமாகுகையில்
பல பொறுப்புகளை சுமந்து 
புது வீட்டில் அடியெடுத்து வைக்கையில் 
அவள் நெஞ்சமதில் - பல
ஆசைக் கனவுகள் நர்த்தனமிடுகின்றன.
இருவரின் காதலின் சின்னமாய்
இரத்தத் துளி உயிராய் உருவெடுக்க
அப்போதவள் நெஞ்சத்தில் ஊறுவது
அவ்வுயிரியின் மீதான நேசமே....

சகோதரி உனைக் காணும் போது
என் மனதில் உதித்த எண்ணங்களை
தொடுத்து வார்த்தையாக்க 
என்னால் இயலவில்லை.
நீ ஆறுதலாக இருக்கின்றாய்
வலியனுபவித்து ஒரு மகளைப் 
பெற்றெடுத்தாய்
அனுபவிக்கையில் அவ்வேதனை  தெளிவானதே - ஆனால்
உன்னைப் போலன்றி
உதரத்தை வெட்டி மகளைப் 
பிரசவித்துத் தாலாட்ட நேர்ந்ததெனக்கு.....

நேரஞ் செல்லச் செல்ல என் இரத்த
அழுத்தமும் அதிகரிக்க
படுக்கையிலிருந்து கீழிறங்கவியலாமல்
பதறிப் பதறியே மனங்கலங்கினேன்
என் பிஞ்சுக்குழந்தையைப் பற்றி...
இரவும் பகலுமாய்  மாறி மாறி வந்தாலும் 
என் கவலையெல்லாம் 
அவனைப் பற்றித் தான்
அதைச் சொல்லி முடிக்க என்னிடமிருக்கும்
வார்த்தைகள் போதாது

என்னுள்ளிருந்த பயத்தினால் இங்கு வரும் போது என்னுள்ளம் படபடத்தது
கை உயர்த்தி அடிக்கப்பட்ட ஊசிமருந்து தந்த வேதனையால்
என்னையறியாமலே என் கண்ணீர்
சுரப்பிகள் சுரந்தன.
வெள்ளையாடையை அணியும் போது
இதயத்தினடியில் கிள்ளப்பட்டதைப் போல் கடுமையாக வலித்தது.
சிறுநீர் வெளியேற குழாய் மாட்டும் போதோ - சகோதரி 
நான் பாதி இறந்திருந்தேன்

இவ்வேதனைகளோடே  நான் 
அறுவைச் சிகிச்சைக்கு உட்பட 
என் முதுகு கீழே அழுத்த - சகோதரி
மிக நீண்ட அந்த ஆயுதத்தினால்
என் வயிறு வெட்டுப்பட்டு
பிளந்து கொண்டு போகும் போது..
கூர்மையான கத்தியின் முனையில்
வெட்டுப்பட்ட வயிற்றை இன்னும் அதிகமாகப் பிளந்து கொண்டு
என் உயிர் வெளியே வந்தது 

என் கண்மணி வெளியே வந்த ஆனந்தத்தில் என் இமைகள் ஈரமாகுகையில் 
என் மார்பகங்களில் தாய்ப்பால் நிறைந்து கனக்கையில்
தாய்மையென்றால் என்னென்று உணர்ந்தேன்
அறுவை சிகிச்சையின் சில மணித்துளிகளின் கரைதலில்
வெட்டப்பட்ட இடத்தின் மரத்த தன்மை நீங்குகையில் ஏற்படும் வலியுணர்ந்தால்
நீ அழும் அழுகைக்கு உன் கண்களும் வெடித்துப் போகும் சகோதரி

பாலூட்டுவதற்காக திரும்புகையிலோ
பாதி உயிராயானேன்
சகிக்க மாட்டாமலிருந்த அந்த வேதனை
செத்து போய் விட மாட்டோமா என என்னை நினைக்க வைத்தது
பந்தயம் கட்டிப் படுக்கை விட்டெழுந்தது பாழும் வயிற்றின் பசியாற்றிடத்தான்  
ஆனாலும் இருகூராக்கப்பட்டது போல் வலியுணர்ந்தேன்

காணும் போதே எனக்கு ஆச்சரியமாயிருந்தது
நிம்மதியாய் நீயீருந்தாய்
அனுபவிக்கும் போது உச்சகட்ட வேதனையை அனுபவித்தாலும்
அது சீக்கிரமாகவே மாறிவிடுமுனக்கு
முள்ளந்தண்டு உடைந்து விடுவதைப் போல் வலிப்பதில்லை 
இது எனக்குத் தெரியும்
ஆனால் வயிற்றை வெட்டிய அம்மாக்களின் வலி சாகும் வரை அவர்களை விட்டுப் போவதேயில்லை

அறுவைச் சிகிச்சை 
அன்பை குறைத்து விடுவதாக
நிறையப் பேர் சொல்கின்றார்கள்
இந்தக் கதைகளால் அவர்களது
பாவ மூட்டைகள் கனத்துக் கொண்டே தானிருக்கப் போகின்றன.
இந்தக் கதைகள் நிகரற்ற பொய்களே
இருவேறு வழிகளில் குழந்தைகளைப் பெற்றெடுத்தாலும் 
அம்மாக்களது தாயன்பு மாறுவதில்லை
அந்த நேசம் நித்தியமானது

எனவே சகோதரி,

நீயும் ஒரு தாய் தான்
நானும் ஒரு தாய் தான்
எப்படிப் பெற்றுக் கொண்டாலும் வலிக்கத்தான் செய்யும் 

Writer Tharika Lakmali

தமிழாக்கம் - Shazna Nazim

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.