எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற இன்றைய(29) ஊடக சந்திப்பு பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தெரிவித்த கருத்துக்களின் சாரம்சம்.

இலங்கையின் பொருளாதாரம் பாரியளவில் வீழ்ச்சி கண்டுகொண்டு வருவது குறித்து ஜப்பானிலிருந்து வெளிவரும் உலகின் முன்னணி வர்த்தக பத்திரிகை ஒன்று குறிப்பிட்டுக்காட்டுவதோடு, இலங்கையின் பொருளாதார நிலை குறித்தும் இலங்கையில் அடிக்கடி பணம் அச்சிடப்படுவது குறித்தும் அந்தப் பத்திரிகை செய்தி வெளியிட்டிருக்கின்றது. நாட்டின் பொருளாதார நிலைக்கு கொரோனா பரவலைக் காரணம் காட்ட முடியாது. தெற்காசியாவின் ஏனைய நாடுகள் இந்த நிலையை சுமுகமாக தீர்த்துக்கொண்டிருக்கின்ற போது எமது நாடு மட்டும் இதற்கு மாற்றமான முறையில் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது.தவறான வெளிநாட்டுக் கொள்கையினால் எம்மைக் கால்பந்து போன்று பாவித்துக்கொண்டிருக்கின்றார்கள். கல்வியில் காணப்படுகின்ற குளறுபடிகள்,  விவசாயத்தில் காணப்படுகின்ற குளறுபடிகள், சுற்றாடல் தொடர்பான பிரச்சினைகள் என பல்வேறு சிக்கல்கள் காணப்படுகின்றன.  சுபிட்சத்தின் பார்வை எனும் கொள்கை திட்டத்தில் 10 வருடங்களில் உரக் கொள்கையில் மாற்றம் ஏற்படுத்தப்படும் என்று கூறிவிட்டு 24 மணித்தியாலங்களில் மாற்றங்களை மேற்கொண்டார்கள். அரசாங்கம் எந்த அடிப்படையில் இவ்வாறான திட்டங்களை முன்னெடுக்கின்றார்கள் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். 

அனைத்து துறை விவசாயிகளும் இன்று பல்வேறு சிக்கல்களுக்கு உள்ளாகியிருக்கின்றார்கள்.வியத்மக என்ற கூறி நிபுணர்களுடனும் புத்தி ஜீவிகளுடனும் சிறந்த ஒரு பயணத்தை ஆரம்பிப்பதாக கூறி இந்த அரசாங்கம் பயணத்தை ஆரம்பித்தது. ஆனால் அந்த குழுவில் உள்ள புத்திஜீவிகள் பலர் இன்று அந்த அமைப்பிலிருந்து விலகியுள்ளார்கள். அரசாங்கத்தில் இருக்கின்ற புத்திஜீவிகளின் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ளாமையால் பதின்முன்றாயிரத்திற்கும் அதிகமான உயிர்களை பலி கொடுத்திருக்கின்றோம். 

இந்த அரசாங்கம் இருளை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றது.அரசியல் ரீதியில் பலரை பலியெடுக்க ஆரம்பித்திருக்கின்றார்கள்.அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றவர்களை கைது செய்கின்றார்கள். நீதிமன்றங்களில் பிணை மனுக்களை நிராகரிக்கின்றார்கள்.  

ஜனாதிபதித் தேர்தலை உற்று நோக்குகின்ற போது சஜித் பிரேமதாச அவர்கள் 42 வீத வாக்குகளையும் கோட்டாபெய ராஜபக்‌ஷ அவர்கள் 52 வீத வாக்குகளையும் பெற்றுக்கொண்டனர். வெற்றி பெருவதற்கு 50 வீதத்திற்கு அதிகமான வாக்குகளைப் பெற வேண்டும். எமது எமது கட்சி சார்பில் இன்னும் 8 வீத வாக்கையே அதிகரிக்க வேண்டியிருக்கின்றது.

எமது வேட்பாளருக்கு இறுதி நேரம் வரை வேட்பு மனுவுக்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது அவர் எதிர்நோக்கிய பிரச்சிணைகள் ஏராளம். ஆவர் இருந்த முகாமுக்குள் இருந்தே பிரச்சினைகள் ஏற்படுத்தப்பட்டன. அதன் பின்னர் பாராளுமன்றத் தேர்தல் இடம்பெற்றது. அதன் போது எமது கட்சி பல தீர்மானங்களை நிறைவேற்றிக் கொண்டது. கட்சியின் தலைமைத்துவம் சஜித் பிரேமதாச அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர். தேர்தலைத் தொடர்ந்து எமது நாட்டின் பிரதான எதிர்க்கட்சி ஐக்கிய மக்கள் சக்தி தான் என மக்கள்  தீர்மானித்தார்கள். தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற நிலை,வாக்களித்த மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளமை என்பவற்றை அவதானிக்கின்ற போது மீதமுள்ள எட்டு வீத வாக்குகளைப் பெற்றுக்கொள்வது என்பது எமக்கு சிரமமான ஒரு விடயமல்ல என நான் கருதுகின்றேன். இன்று மக்கள் இந்த அரசாங்கம் குறித்து கவலையடைந்திருக்கின்றார்கள். அத்தோடு அரசாங்கம் மீது வெறுப்புக் கொண்டுள்ளார்கள். அடுத்தது எந்த தேர்தல் நடந்தாலும் எமக்கு வெற்றி கிடைக்கும். ஐக்கிய மக்கள் சக்திக்கும் அதன் தலைவருக்கும் சேறு பூசப்பட்டுக்கொண்டிருக்கின்றது. 

அரசாங்கத்தின் கொள்கையின் அடிப்படையில் அதனைச் சார்ந்தவர்கள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார்கள். 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது இதே போன்றதொரு நிலையே காணப்பட்டது. அனைத்து ஊடகங்களும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் தான் இருந்தது, பத்திரிகைகள் அனைத்தும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தன. வாய் வார்த்தைகளைக் கொண்டு தான் நாம் பிரச்சாரப் பணிகளை மேற்கொண்டோம். 

சமூக வலைத்தளங்களைத் தவிர வேறு ஊடகங்கள் இல்லாவிட்டாலும் இந்த நாட்டுக்கும் இந்த நாட்டு மக்களுக்கும் தீர்வினை வழங்கக்கூடிய முகாம் இது தான் என்பதை மக்கள் தற்போது தெளிவாக விளங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.அன்று பாரிய வெற்றியொன்றை ஜே.ஆர் ஜயவர்தன அவர்கள் பெற்றுக்கொண்டது போல எச்சரிக்கை, முட்டுக்கட்டைகள் என்பவற்றை கடந்து எமது கட்சி வெற்றி பெறும். அடுத்ததாக மக்கள் சிறந்த தீர்மானமொன்றை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்கிருக்கின்றது. 

இரண்டு வருடங்களின் பின்னர் ஒரே நாடு ஒரே சட்டம் என்பதற்கு ஜனாதிபதி செயலணியை உருவாக்கியிருக்கின்றார்கள். அமைச்சரவை ஒன்று இருக்கின்றது. துறைக்குப் பொறுப்பான அமைச்சர் ஒருவர் இருக்கின்றார். இவர்களை துச்சமாக மதித்து தான் இந்த செயலணியை உருவாக்கியிருக்கின்றார்கள்.தேரர் ஒருவரை அவமதிக்க நான் விரும்பவில்லை. நான் பௌத்த பாடசாலையில் கல்வி கற்றவன் என்ற அடிப்படையில் காவி உடையை மதிக்க வேண்டும் என்று எனக்கு கற்றுத் தந்திருக்கின்றார்கள். ஆனால் அதற்கு மக்கள் என்ன பதிலை தெரிவித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை சமூக வலைத்தளங்களின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும். ஜனாதிபதியை எவ்வாறு மதித்திருக்கின்றார்கள் என்பதை அவதானிக்க முடியும். இந்த நாட்டில் மாத்திரமல்ல சர்வதேச ஊடகங்கள் இதற்கு எவ்வாறு கருத்துத் தெரிவித்துக்கொண்டிருக்கின்றது என்பதை அவதானித்துப் பாருங்கள். உலகின் ஏனைய நாடுகள் உலக நாடுகளின் அரச தலைவர்கள், ஜனநாயகம் குறித்தும் மனித உரிமைகள் குறித்தும் அவதானம் செலுத்துகின்ற அமைப்புக்கள் எவ்வாறு கருத்து தெரிவிக்கின்றார்கள் என்பதை அவதானித்துப் பாருங்கள். இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். எமது நாட்டின் நிலையை பாருங்கள். எமது நாட்டின் கடவுச் சீட்டை கணக்கில் எடுப்பதில்லை. கல்வி கற்ற இளைஞர் யுவதிகள் நாட்டை விட்டு வெளியேறுவதற்காக கடவுச் சீட்டைப் பெற்றுக்கொள்வதற்கு வரிசையில் காத்திருக்கின்றார்கள். 

கவலையடைந்து நாட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று இந்த கல்வி கற்ற சமூகத்திடம் வேண்டுகோள் விடுக்கின்றேன். இந்த ஏகாதிபத்திய வாதத்திற்கு எதிராக செயற்பட அவர்களை அழைக்கின்றேன். எமது நாட்டிலே இருந்து கொண்டு நாட்டின் இறையாண்மையையும் உரிமைகளையும் வென்றெடுப்பதற்கு எல்லோரும் ஒன்று சேருமாறு அவர்களிடம் கேட்டுக்கொள்கின்றேன். நாட்டை விட்டு வெளியேறுவது இதற்கு பதிலாக அமையாது. நாட்டில் இருந்துகொண்டு பிரச்சினைகளை எதிர்நோக்கி மக்களுக்காக சிறந்த நிர்வாகமுள்ள ஆட்சியொன்றை உருவாக்க ஒன்றிணைவோம் என்று அவர்களிடம் கேட்டுக் கொள்கின்றேன் என்று தெரிவித்தார்.

වර්තමානයේ ජනතාව මුහුණ දෙන අර්බුදකාරී තත්ත්වයන් පිළිබඳව අද පැවැත්වූ මාධ්‍ය හමුව. #ඉම්තියාස්බාකීර්මාකාර් #ImthiazBakeerMarkar #IBM #SriLanka #Politics

Posted by Imthiaz Bakeer Markar on Friday, October 29, 2021

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.