ஒரு குழந்தையைப் பெற்ற பிறகு, சமூகத்தின் பார்வையில் பெண்களால்  சில விடயங்களை 
செய்ய முடியாது .சமூக நியமங்களின் படி செய்யவும் கூடாது 

*எது பற்றியாவது புகார் செய்தல்- (உங்களுக்கு குழந்தை பெறச் சொல்லி  யார் சொன்னது?)
* அழுவது- (ஏன் அழுகிறாய்? குழந்தை வளர்ப்பது எளிது என்று நினைத்தாயா?)
*  சோர்ந்து போவது (நீதான் ஒன்றுமே செய்யவில்லையே.பின் எதற்கு சோர்ந்து போகிறாய்?)
*தூங்குதல் ( சோம்பேறி
.பிள்ளை தூங்கும் போதே வீட்டு வேலைகளை முடித்துக்கொள்.எப்போதும் தூங்குவது நல்லதல்ல)
* ஓய்வாக இருத்தல் (அவர்கள் வளர்ந்த பிறகு உங்களுக்கு நிறைய நேரம் கிடைக்கும்.பிறகு பார்க்கலாம்)
*மீண்டும் கர்ப்பமாதல் ‍(அறிவில்லையா?இப்போது அவசரமாக இன்னொரு பிள்ளை தேவையா?)
* தொழிலை விடுதல்-(பிள்ளைகளுக்கான வசதிகளை எவ்வாறு வழங்குவாய்?ஒருவரின் உழைப்பு இந்த காலத்தில் போதுமா?)
* தொழிலுக்கு செல்லுதல்-(பிள்ளையை யார் பார்ப்பது,பிள்ளை ஏங்கிப் போகும்)
* Day care ல் விடுதல்(பணத்திற்காக அவர்கள் நல்ல முறையில் வளர்ப்பார்களா?அநியாயம் செய்வார்கள்)
* பிள்ளை நோய்வாய்ப்படுதல் -( நீ சரியாக பிள்ளையை குளிப்பாட்டியிருக்க மாட்டாய்.சரியாக பராமரித்திருக்க மாட்டாய்,கண்டதையும் உண்ணக் கொடுத்திருப்பாய்)
* குடும்பத் தலைவியாக இருத்தல்-( பாவம் கணவன் கஷ்டப்பட்டு உழைக்கிறான்.இவள் சப்போர்ட் செய்யலாம் தானே)
* விவகாரத்து செய்ய நாடுதல்(குழந்தையுடன் யாரும் உன்னை ஏற்க 
விரும்பமாட்டார்கள்)
* கணவருடன் வெளியில் செல்லுதல்-( ஊர் சுற்றுவதற்காக வயதான பாட்டியை கொடுமைப்படுத்துகிறாய்)
* உடற்பயிற்சி செய்தல்-(குழந்தை பெற்ற பின் கட்டழகு எதற்கு?)
* புத்தகம் வாசித்தல்/எழுதுதல்-( பிள்ளையை கவனிக்காமல் படித்து எதை கிழிக்கப் போகிறாய்?)
* Facebook,instagram பாவித்தல்-(இதெல்லாம் வீண் வேலை.குழந்தை வளர்ப்பதை சரியாக செய்தால் போதும்)
* பழைய நண்பர்களை சந்தித்தல்,வட்ஸ் அப்பில் chat செய்தல் -(பிள்ளை வளர்க்கும் நேரத்தில் இந்த கூத்துகள் எதற்கு?) 

இந்த விமர்சனங்கள் எல்லாம் பெரும்பாலும் இன்னுமொரு பெண்ணாலேயே செய்யப்படுவது உண்டு. தன் கடந்த காலத்தை மறந்து விட்டு அல்லது மறைத்துக் கொண்டு வியாக்கியானம் செய்வது இன்னுமொரு தாய் தான். 

பிறரின் கருத்துக்களால் உடைந்து போகாத உறுதியான பெண்ணாகவே இருந்தாலும் என்றோ ஒரு நாள் இந்த வாசகங்கள் அவளின் மனதில் எதிரொலிக்கவே செய்யும். அதன் விளைவுகள்  தரத்தில் ,தளத்தில் வேறுபடலாம்.இவ்வாறான நிலைகளில் தான் . தாய்மை எனும் நிலை சாபமாக மாறிப் போகிறது. பெண்மை உருமாறியும் போகிறது.

ஏற்கனவே குழந்தைகளால் பல்வேறு கஷ்டங்கள்,சவால்களை சந்தித்து கடந்து வந்த அனுபவசாலிகள் என்ற வகையில் ஏனைய பெண்கள் இளம் தாய்மாருக்கு தோள் கொடுக்க வேண்டும். அறிவுரை எனும் பெயரில் அறுவைகள் அவசியமில்லை .அவை காயப்படுத்துவதை தவிற எதையும் சாதிக்காது. அனுபவங்கள் வாயிலாக வழிகாட்ட வேண்டும். ஆதரவாய் செவி சாய்க்க வேண்டும்.ஒரு பெண் தாயான பின் அன்றாடம் பல்வேறு அழுத்தங்களுடனேயே வாழ்வை நகர்த்துகிறாள்.அழுத்தம் போக்கும் மருந்தாக முடியாவிட்டாலும் அதில் அமிலம் பாய்ச்சாமலாவது இருக்கலாம்.

Fauzuna Binth Izzadeen 
1/10/21

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.