மலர்களின் உலகு தான்
எத்தனை அழகானது !
நிஜமான புன்னகையும்
நிறைவான மகிழ்ச்சியும்
பூக்களின் உலகில் அல்லவா
பூரணமாய்க் கிடைக்கிறது!
ஒரு பட்டாம்பூச்சியின் பரிசமும்..
ஒரு சிறுவண்டின் சீண்டலும்..
ஒரு பனித்துளியின் உறக்கமும்..
பூக்களோடு காணுகையில்
சின்னதாய் ஒரு பொறாமை
சுருக்கென்று ஓடிவரும்
பிடித்துப் போன கார்டூனை
மீண்டும் மீண்டும் பார்த்து ரசிக்கும்
ஒரு சிறுமியாய்...
பூக்களை ரசிப்பதில்
அத்தனை இஷ்டம்
எனக்கு ..
ரசிக்கும் ஒவ்வொரு தருணமும்
தப்பாமல் ஒரு கவிதை
எப்போதும் பரிசளிக்கும்
பூக்களுக்கு
பதிலுக்கு நான்
எதைத்தான் தந்து விட?
ஒரு முத்தத்தைத் தவிர..
மெல்லிய தூறலுடன்
இந்த அதிகாலை
எனக்கு
எவ்வளவு இதமாக இருக்கிறது..
என் வீட்டுப் பூக்களில்
கண் விழிக்கும் போது..
ஒவ்வொரு மலரும்
ஒவ்வொரு நிறத்தால்
என்னோடு பேசுகையில்
என் எண்ணங்களும் அல்லவா
வண்ணங்களாகின்றன
கவிதைகளாக ....
இதயம் முழுவதும்
கவலைகளால் நிரம்பும் தருணங்களில்
ஒரு பூவின் தரிசனம்
அதிகபட்ச நிவாரணமாகி விடுகிறது
எனக்கு ...
வண்டொன்று பூவொன்றில் அமர்வதும்
வன்முறை என எண்ணித் தொலைக்கும் எனக்கு
பூக்களைக் காயம் செய்வதில்
சற்றேனும் உடன்பாடில்லை
எட்டி நின்று ரசிப்பதைத் தவிர.
இப்போதெல்லாம்
காண்கின்ற பூக்களெல்லாம்
பறிக்காமலேயே
சொந்தமாகி விடுகின்றன.
என் கெமராவுக்குள் .
'ஒரே பூவை
ஒன்பது கோணத்தில்
ஒன்றரை மணிநேரம்
எப்படித்தான் ரசிப்பாய்?
எரிச்சல் வருகிறது'
என்கிறாள்
என் தோழி..
பூக்களின் பைத்தியம் இவள் என்று
எப்படிச் சொல்வதென்று
உள்ளுக்குள் சிரித்து
மெளனமாய் கடக்கிறேன்
நான்.
மனிதன் தரா மகிழ்ச்சி தொட்டு
மருத்துவன் தரா மருந்து வரை
அனைத்தும் தரும்
பூக்களைத்தான்
புரியவில்லை அவளுக்கு.
பூத்துக்குலுங்கும் மலர்கள்
கணப்பொழுது வாழ்விலும்
கவலை மறந்து வாழச்
சொல்லித்தருகையில்
பூக்கள் கூட
எனக்கு ஆசானாகிவிடுகிறது...
பல பொழுதுகளில்..
எல்லா மலர்களையும்
விரும்புகிறேன்
சில மலர்களை மட்டும்
காதலிக்கிறேன்!
என் பூக்களின்
சாம்ராஜ்யத்தில்
மூன்று இளவரசிகள்....
சிவப்பு ரோஜாவின்
சுண்டியிழுக்கும் அழகு...
வெள்ளை டெய்ஸியின்
இதமான அமைதி...
ஒரு லெவண்டரின்
இனம் தெரியா ஈர்ப்பு...
அத்தனை அழுத்தத்தோடு
என்னை அணைத்துக்கொள்வதுண்டு.
இந்தப் பொல்லாத பூக்களின்
காதலில் சிக்கி விட்ட
எனக்கு
அத்தனை இலகுவாக
கடந்துவர முடிவதேயில்லை..
இப்போதெல்லாம்
என் வீட்டுத் தோட்டத்தில்
அத்தனை மலர்களும்
சாயம் போய்விட்டன.
இந்தப் பெருந்தொற்று
முடிந்து விட்டதா?
கொஞ்சம் சொல்லுங்கள்...
எனக்கு
பிடித்த இடம் சென்று
பிடித்த பூக்களை எல்லாம்
மீண்டும் ஒரு முறை
ரசித்து வரவேண்டும் போலுள்ளது...
பூக்களின் தோழி இவள்..
Fazmina Razick
2021.10.11