ஐ.எஸ் கொள்கையைக் கொண்டவர்கள் நாட்டில் இருக்கும்வரை எவ்வேளையிலும், எவ்வாறானதொரு தாக்குதலும் நடத்தப்படலாம் என கலகொட அத்தே ஞானசார தேரர் கூறியதே உண்மை. அதன்படி நாட்டில் எவ்வேளையிலும், எவ்வாறானதொரு தாக்குதலும் நடத்தப்படலாம் என்பதால் அதுகுறித்து தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் விரசேகர ‘தமிழன்’ வார இதழுக்குத் தெரிவித்தார்.

இன்றைய வார இதழுக்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒவ்வொரு நாளும் இதுதொடர்பாக ஆராய்கிறோம். நாட்டில் யாரிடம் ஐ.எஸ் கொள்கை இருக்கின்றது என்பது எங்களுக்குத் தெரியாது. இஸ்லாமிய இராச்சியம் உருவாக்கும் பயணத்தில் சாதாரண தமிழ் மக்கள் மற்றும்; சிங்களவர்களை ஐ.எஸ் கொள்கைக்குள் இணைக்க முடியாது.

முஸ்லிம் மக்களை மாத்திரமே இலகுவாக ஐ.எஸ் கொள்கைக்குள் இணைக்க முடியும். ஆகவே, புலனாய்வுத்துறையைப் பயன்படுத்தி, தாக்குதல்கள் நடத்தப்படலாமா, போதனைகள் முன்னெடுக்கப்படுகின்றவா என்பது குறித்து நாங்கள் தொடர்ந்து ஆராய்கிறோம்.

இது தேசிய பாதுகாப்புக்காகவே முன்னெடுக்கப்படுகின்றது. இதனை, முஸ்லிம் மக்களுக்கு எதிரான செயற்பாடுகள் என்ற எண்ணுவது தவறானது. எனினும், ஐ.எஸ் கொள்கையை இல்லாதொழிக்க முஸ்லிம் மக்களின் ஒத்துழைப்பு தேவை. ஒரு நபரால் முழு நாட்டையும் சீர்குலைக்க முடியும் என்பதை முஸ்லிம் மக்கள் சிந்திக்க வேண்டும் என்றும் இதன்போது குறிப்பிட்டார்.

(யோ.தர்மராஜ்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.