விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தை அடிப்படையாகக் கொண்ட தேர்தல் முறை நாட்டுக்குப் பொருத்தமானது எனவும் தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம் காண்பதற்கும் தேவையான திருத்தங்களை முன்னெடுக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற விசேட குழுவில் பரிந்துரைத்துள்ளதுடன், விகிசாதாரப் பிரதிநிதித்துவமே நாட்டுக்குப் பொருத்தமானது எனவும், விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தின் கோட்பாடுகள் மாற்றப்பட்டு திருத்தங்கள் மேற்கொள்ளப்படுமாயின் நிறைவேற்று ஜனாதிபதி முறையிலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்ற விசேட குழுவில் தமது யோசனைகளை முன்வைத்துள்ளது.

பாராளுமன்ற விசேட குழு சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தலைமையில் நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் கூடியது. புதிய திருத்தத்தின் ஊடாக ஸ்திரமான அரசாங்கமொன்று உருவாக்கப்படுவதும் மற்றும் ஜனநாயகம் நிலைநாட்டப்படுவதும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என அக்கட்சி வலியுறுத்தியது.

நாட்டில் உள்ள சகல பூகோள எல்லைகளையும் அடிப்படையாகக் கொண்ட பிரதிநிதித்துவம் புதிய திருத்தத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட வேண்டும். விருப்பு வாக்கு முறையின் ஊடாக தமக்குத் தேவையான மக்கள் பிரதிநிதிகளை வாக்காளர்களால் தெரிவு செய்ய முடியும்.

வாக்குச் சீட்டுக்கள் மக்களால் இலகுவில் புரிந்துகொள்ளக் கூடிய வகையில் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற விசேட குழு முன்னிலையில் சுட்டிக்காட்டியது.

தேர்தல் முறையின் ஸ்திரத்தன்மை அவசியமானது என்றும், இது வாக்காளர்களின் கோணத்திலிருந்து பார்க்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையை மாற்றியமைக்காது அதில் காணப்படும் குறைபாடுகளைத் தவிர்ப்பதற்குப் புதிய திருத்தங்களின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது தமது நிலைப்பாடு எனப் பாராளுமன்ற விசேட குழு முன்னிலையில் கருத்துத் தெரிவித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி குறிப்பிட்டது.

பாராளுமன்ற விசேட குழு முன்னிலையில் பரிந்துரைகளை முன்வைத்த மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) குறிப்பிடுகையில், விகிசாதாரப் பிரதிநிதித்துவமே நாட்டுக்குப் பொருத்தமானது எனத் தெரிவித்தது.

விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தின் கோட்பாடுகள் மாற்றப்பட்டு திருத்தங்கள் மேற்கொள்ளப்படுமாயின் நிறைவேற்று ஜனாதிபதி முறையிலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் பாராளுமன்ற விசேட குழு முன்னிலையில் தெரிவித்தார்.

பெண்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை பாராளுமன்ற உப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய வலியுறுத்தினார்.

தேசியப்பட்டிலியலில் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் எனவும் அவர் பாராளுமன்ற விசேட குழுவில் சுட்டிக்காட்டினார்.

தீர்மானம் எடுக்கும் மட்டத்தில் சகல சந்தர்ப்பத்திலும் பெண்களின் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும், அரசியல் கலாசாரத்தில் உள்ள வேறுபாடு காரணமாக அரசியலில் பெண்களின் பங்களிப்புக் குறைவடைந்துள்ளது என்றும் அவர் குழுவில் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் அமைச்சர்களான நிமல் சிறிபால.டி.சில்வா, எம்.யு.எம்.அலி சப்ரி ஆகியோரும், பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், ரஞ்சித் மத்தும பண்டார, மனோ கணேசன், எம்.ஏ.சுமந்திரன், மதுர விதானகே, சாகர காரியவசம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

பாராளுமன்ற விசேட குழுவின் அடுத்த கூட்டம் இன்று (08) பிற்பகல் இடம்பெறுவதாக இக்குழுவின் செயலாளரும், பாராளுமன்ற பணியாட்தொகுதியின் பிரதானியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான குஷானி ரோஹனதீர தெரிவித்தார்.

 ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம் - வீரகேசரி 




கருத்துரையிடுக

Blogger இயக்குவது.