2022 ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் இன்று (12) சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இது சுதந்திர இலங்கையின் 76வது வரவு செலவுத் திட்டம்.

திரு பசில் ராஜபக்ஷ நிதி அமைச்சராக பதவியேற்ற பின் சமர்ப்பிக்கும் முதலாவது வரவு செலவுத் திட்டம் இதுவாகும்.

அத்தோடு இன்று சமர்ப்பிக்கப்படும் வரவு செலவுத் திட்டம், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது நிறைவேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையிலான சமகால அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவுத் திட்டம்.

வரவு செலவுத் திட்ட உரையை நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பிப்பார் என பாராளுமன்றப் பொதுச் செயலாளர் தம்மிக தஸநாயக்க தெரிவித்தார்.

இந்தச் சட்டமூலம் கடந்த செப்ரெம்பர் மாதம் 29ம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்டது. இதன் மூலம் 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து டிசம்பர் மாதம் 31ம் திகதிக்கான சேவைக்காக மதிப்பிடப்பட்டிருக்கும் 2505 பில்லியன் 346 மில்லியன் 558 ஆயிரம் ரூபாய் அரசாங்கத்தின் செலவினத்திற்குப் அனுமதி பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.

அரசியலமைப்பின் ஒஎii பிரிவுக்கமைய அரசாங்கத்தின் நிதி தொடர்பான முழுமையான கட்டுப்பாடு பாராளுமன்றத்துக்கு வழங்கப்பட்டிருப்பதுடன் வரிவிதிப்பு, திரட்டு நிதியத்திலிருந்து அல்லது அரசாங்கத்துக்குரிய அல்லது அதன் கையாளுகையில் உள்ள ஏனைய நிதியத்திலிருந்து பெற்றுக் கொள்வது உள்ளிட்ட விடயங்களுக்குப் பாராளுமன்றத்தின் அனுமதி பெற்றுக் கொள்ளப்பட வேண்டும்.

வரவுசெலவுத்திட்ட விவாதத்தை முதல்முறையாக சைகை மொழியிலும் ஒளிபரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுகாதார பாதுகாப்பு ஒழுங்குவிதிகளுக்கமைய பாராளுமன்ற அமர்வுகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.

வரவுசெலவுத்திட்ட விவாதம் நடைபெறும் காலப்பகுதியில் பொதுமக்கள் கலரி மக்களுக்காக திறக்கப்படாது என்றும், வரையறுக்கப்பட்ட அரசாங்க அதிகாரிகள் வரவுசெலவுத்திட்ட குழுநிலை விவாதத்தின் போது அனுமதிக்கப்படவுள்ளனர்.

நாளை முதல் எதிர்வரும் 22ம் திகதி வரை வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் நடைபெறும். நவம்பர் மாதம் 22ம் திகதி மாலை 5.00 மணிக்கு இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இடம்பெறும். 23ம் திகதி ஆரம்பமாகும் குழுநிலை விவாதம் டிசம்பர் மாதம் 10ம் திகதி வரை இடம்பெறும். அன்று மாலை 5 மணிக்கு 3வது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இடம் பெறும்.

பாராளுமன்றத்தில் வரவு செலவுத்திட்ட உரையின் பின்னர் நிதியமைச்சினால் ஏற்பாடு செய்யப்படும் சம்பிரதாயபூர்வ தேநீர் விருந்துபசாரமும் இடம்பெறும்.

இதில் பாராளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள் உட்பட விசேட விருந்தினர்கள் மாத்திரம் கலந்து கொள்வார்கள்.



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.