என்ஜின் இல்லாத வாகனத்துக்கு டயர் வாங்குவது போன்று பாதீட்டை தயாரித்துள்ளார்கள் , முச்சக்கர வண்டி சாரதிக்கு 62 ரூபாய் நிவாரணமே இந்த பாதீட்டின் மூலம் வழங்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார்.இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வரவு செலவு திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 

இலங்கை மக்களின் குரல் வலைகள் நசுக்கப்பட்டு அவர்கள் சுவாசிக்கவே கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த வேளையில் இந்த பாதீட்டின் மூலம் சுவாசிக்க செயற்கை சுவாசமாவது வழங்குவார்கள் என மக்கள் எதிர்பார்த்திருந்த வேளை உங்களுக்கு செயற்கை சுவாசம் கூட நாங்கள் வழங்க மாட்டோம் என பசில் ராஜபக்ஸ மக்களுக்கு கூறி உள்ளார். 

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ பாராளுமன்றத்துக்கு வரும் முன் அவருக்கு ஏழு அறிவு உள்ளது. அவர் மக்களுக்கு நிவாரணம் வழங்குவார் எரிபொருள் விலை குறைப்பார் என்று பல கதைகள் சொன்னார்கள்.

 எனக்கு தெரிந்து விஞ்ஞான ரீதியில் மனிதர்கள் யாருக்கும் ஏழு அறிவு இல்லை. ஆனால் ஏழு அறிவு உள்ளவர் என சொன்னவர்களுக்கு கணித ரீதியில் ஒன்றை கூறிக்கொள்ள முடியும்.நீங்கள் கூறுவதை வைத்து பார்க்கும் போது உங்களை விட பசில் ராஜபக்சவுக்கு ஒரு அறிவு அதிகம்.ஆறு அறிவுள்ள பசிலை விட ஒரு அறிவு குறைந்த உங்களை நாங்கள் எவ்வாறு அழைப்பது.

இந்த பாதீட்டை எடுத்து நோக்கினால் கிழவி ஒருவரை அலங்கரித்து மணப்பெண்ணாக்கும் கதைதான் நடைபெற்றுள்ளது. 

விவசாயிகளின் பசளை பிரச்சினைக்கு தீர்வு முன்வைக்கப்பட்டுள்ளதா ?இல்லை 

அரிசி மாபியாவை ஒழித்து அரிசியின் விலையை அரசால் தீர்மானிக்க தீர்வு முன்வைக்கப்பட்டுள்ளதா ?இல்லை 

கேஸ் தட்டுப்பாட்டுக்கு தீர்வு முனவைக்கப்பட்டுள்ளதா? இல்லை 

பால்மா தட்டுப்பாட்டுக்கு தீர்வு முன்வைக்கப்பட்டுள்ளதா ?இல்லை 

அடுத்த ஆண்டில் ஏற்படப்போகும் டொலர் தட்டுப்பாட்டுக்கு தீர்வு முன்வைக்கப்பட்டுள்ளதா? இல்லை 

அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு உள்ளதா ?இல்லை 

சமுர்த்தி பெரும் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதா? இல்லை 

மலையக மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதா ?இல்லை

ஆனால் என்ன செய்துள்ளார்கள். 

என்ஜின் இல்லாத வாகனத்துக்கு டயர் வாங்குவது போன்று பாதீட்டை தயாரித்துள்ளார்கள்.முச்சக்கர வண்டி ஓட்டுனர்களுக்கு நிவாரணம் வழங்க 600 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் சுமார் 10 இலட்ச்சம் முச்சக்கர வண்டிகள் உள்ளதாக புள்ளிவிபரம் கூறுகிறது. அதில் சுயபாவனை ,பழுதடைந்தது என 2 இலட்சத்தை கழித்து பார்த்தால் சுமார் 8 இலட்சம் முச்சக்கர வண்டி சாரதிகள் இருப்பர்.அப்படி பார்க்கப்போனால் ஒரு சாரதிக்கு வருடத்துக்கு 750 ரூபாவே நிவாரணமாக வழங்கப்படவுள்ளது.மாதமொன்றுக்கு 62 ரூபாய். 

இதுபோல தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்க 1500 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் சுமார் 19 ஆயிரம்  தனியார் பஸ்கள் உள்ளதாக கூறப்படுகிறது.ஆகவே ஒரு தனியார் பஸ் உரிமையாளருக்கு மாதம் ஒன்றுக்கு கிடைக்கக்கூடிய நிவாரணம் சுமார் ஆறாயிரத்து ஐநூறு ரூபாய்.  

அதுபோல பாடசாலை பஸ் வேண் ஓட்டுனர்களுக்கு 400 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. சுமார் 40 ஆயிரம்   பாடசாலை பஸ் வேண் ஓட்டுனர்கள் உள்ளதாக புள்ளிவிபரம் கூறுகிறது.அப்படி பார்த்தால் ஒருவருக்கு மாதம் ஒன்றுக்கு 833 ரூபாய்  

இதுதான் நிதி அமைச்சர் வழங்கியுள்ள நிவாரணம் அவர்கள் ஒரு நாளைக்கான எரிபொருள் தேவைக்கும் இந்த பணம் போதாது.

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு பற்றி நிதி அமைச்சர் தெரிவித்த கருத்து முழு அரச ஊழியர்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தியுள்ளது.கொவிட் அனர்தத்தின் போது உயிரை பணயம் வைத்து மக்களை காப்பாற்றியது சுகாதார துறை சார் அரச ஊழியர்களே.நாட்டில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு சூறாவளி என ஒவ்வொரு அனர்த்தத்தின் போதும் மக்களை காப்பாற்றியது இந்த அரச ஊழியர்கள்தான்.

ஆனால் நீங்கள் தகுதியில்லாதவர்களுக்கு வழங்கிய அரசியல் நியமனங்களே அதிக செலவீனத்துக்கு காரணம்.அதற்கு சிறந்த உதாரணமே நீங்கள் தற்போது வழங்கிக்கொண்டிருக்கும் ஒரு இலட்சம் வேலைவா ய்ப்புக்கள்.சமுர்த்தி பெற தகுதியானோர்க்கு வேலை தருகிறோம் என பிரதேச செயலகங்கள் தோறும் நேர்முகத்தேர்வு நடாத்தி அந்த மக்களை பல நாட்கள் அங்கும் இங்கும் அலைய விட்டபின் நேர்முகத்தேர்விலேயே கலந்துகொள்ளாதவர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.இதனால்தான் சுமை ஏற்படுகிறது.

 ஆகவே தியங்கங்கள் செய்து அர்ப்பணிப்புடன் பணியாற்றும் அரச ஊழியர்களை சாதாரண தரம் சித்தியடையாத அமைச்சர்கள் விமர்ச்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அரசின் செலவீனங்களை குறைக்க அமைச்சர்களினதும் அரச அதிகாரிகளினதும்  செலவை குறைக்கிறோம் என கூறி மாதம் ஒன்றுக்கு ஐந்து லீடடர் பெற்றோல் கொடுப்பனவை  குறைக்கிறோம் என நிதி அமைச்சர் கூறுகிறார்.யாரை ஏமாற்ற இந்த சிறுபிள்ளைத்தனமான குறைப்பு.

 அமைச்சர்களின் எரிபொருள் கொடுப்பனவை குறைத்தால் மாதம் ஒன்றுக்கு 350 லீற்றர் பெற்றோல் கொடுப்பனவே குறைக்க முடியும் இது வெறும் ஐம்பத்தி ஐயாயிரம் மட்டுமே. ஆனால் உங்கள் அமைச்சர்களின் மாதம் ஒன்றுக்கான தேநீர் செலவு இலட்ச்சங்களை தாண்டுகிறது. 

ஏழு மூளை உள்ளவர்களின் செலவு குறைப்பு இப்படித்தான் இருக்கும் என நினைக்கிறேன். 

அத்துடன் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் என்ற ரீதியில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு அபிவிருத்திகளில் பின்தங்கியிருக்கும் வடக்கு கிழக்கு மாகாண அபிவிருத்திக்கு விசேட திட்டங்கள் எதையும் நான் காணவில்லை. 

நல்லாட்சி அரசின் வரவு செலவு திட்டத்தில் வடக்கு கிழக்கு மாகாண மக்களின் மீள் குடியேற்றத்துக்கென நிதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன.

அரசுக்கு ஆதரவு அளிக்கும் வடக்கு கிழக்கு மாகாண தமிழ் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் நீங்கள் எப்படியும் இந்த வரவு செலவு திட்டத்துக்கு கையை உயர்த்துவார்கள் எனத்தெரியும்.கையை உயர்த்த கடைசி இதையாவது கேட்டுப்பெற்ற பின்னர் கையை உயர்த்தலாமே எனத் தெரிவித்தார். 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.