அலி சப்ரியின் அறச் சீற்றம்! - மன்சூர் மொஹமட் 



‘Rise to the occasion’ என்று ஆங்கில மொழியில் ஒரு மரபுத் தொடர் உள்ளது. அதாவது, “மிகவும் நெருக்கடியான ஒரு நிலைமையை வெற்றிகரமாக கையாள்வதற்கு எதனைச் செய்ய வேண்டுமோ எவ்வித தயக்கமும் இல்லாமல் அதனைச் செய்வது” என்ற பொருளில் அது உபயோகிக்கப்படுகின்றது.

நவம்பர் 05 ஆம் திகதி ஜனாதிபதிக்கும், அமைச்சர் அலி சப்ரிக்கும் இடையில் இடம்பெற்ற மிக முக்கியமான சந்திப்பில் அலி சப்ரி ‘Rose to the occasion’ என்ற சொன்னால் அதில் எந்தத் தவறும் இருக்க முடியாது. அச்சந்தர்ப்பத்தில் அவருக்கிருந்த முக்கியமான சவால், பொதுவாக கோட்டாபாய ராஜபக்ச எவ்விதத்திலும் காது கொடுத்துக் கேட்க விரும்பாத சில விடயங்களை தெளிவாக, ஆணித்தரமாக, வார்த்தைகளை விழுங்காமல் சொல்ல வேண்டிய சங்கடமான வேலை.

அதனை அவர் மிகவும் வெற்றிகரமான விதத்தில் செய்து முடித்திருக்கிறார் என்றே தோன்றுகின்றது.

அக்டோபர் 26ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஜனாதிபதியினால் நியமனம் செய்யப்பட்ட ‘ஒரே நாடு - ஒரே சட்டம்’ செயலணிக்கு இலங்கையின் சட்டவாக்க வரலாற்றில் முன் உதாரணங்கள் இல்லாத விதத்தில் விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தன. நீதி அமைச்சர் ஏற்கனவே தயாரித்து வைத்திருக்கும் சட்டத் திருத்தங்களை பரிசீலனைக்கு உட்படுத்துவதற்கும், புதிய சட்ட வரைவுகளை முன்வைப்பதற்குமான பணிப்பாணை அதற்கு வழங்கப்பட்டிருந்தது:

1. இலங்கையில் ‘ஒரே நாடு - ஒரே சட்டம்’ எண்ணக்கருவை அமுல் செய்வது தொடர்பான ஒரு விரிவான பரிசீலனையை மேற்கொண்டு, அந்நோக்கத்திற்கென ஒரு வரைவுச் சட்டத்தை தயாரித்தல்;

2. இந்த விடயம் தொடர்பாக ஏற்கனவே நீதி அமைச்சரினால் தயாரிக்கப்பட்டிருக்கும் வரைவுச் சட்டங்கள், திருத்தங்கள் மற்றும் அவற்றின் பொருத்தப்பாடு என்பவற்றை ஆய்வு செய்தல்; அவற்றுக்கு பொருத்தமான திருத்தங்கள் செய்ய வேண்டியிருந்தால் அதற்கென முன்மொழிவுகளை சமர்ப்பித்து, அவற்றை சம்பந்தப்பட்ட வரைவுச் சட்டத்தில் உள்ளடக்குதல். 

ஒரு மூன்றாவது தரப்பு நீதி அமைச்சின் செயற்பாடுகளில் தலையிடுவதையும், அதிலும் முக்கியமாக புதிய சட்டவாக்கங்களை தயாரித்து, முன்வைப்பதனையும் எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள  முடியாது என்பது அலி சப்ரியின் வாதம். இந்த விடயத்தில் எத்தகைய விட்டுக்கொடுப்புக்களுக்கும் இடமில்லை என்பதனை அவர் ஜனாதிபதியிடம் மிகத் தெளிவாக சொல்லியிருக்கிறார் . 

அது மட்டுமன்றி, இலங்கையின் தற்போதைய இனத்துவ, சமய கொந்தளிப்பு நிலைமைகளின் பின்னணியில், இஸ்லாமிய சமூகத்திலிருந்து தன் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் கடுமையான அழுத்தங்களை எவ்விதத்திலும் உதாசீனம் செய்ய முடியாது என்று கூறியிருக்கும் சப்ரி, அமைச்சர் பதவியிலிருந்தும், தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் ராஜினாமா செய்வதற்கான தனது கடிதங்களையும் ஒப்படைத்திருக்கிறார் . 

ஜனபாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்க மற்றும் பீ.பீ ஜயசுந்தர ஆகியோரும் பங்கேற்றிருந்த அச்சந்திப்பில் ஜனாதிபதி அமைச்சர் அலி சப்ரியிடம் ஞானசார தேரரின் செயலணிக்கு அவ்விதமான அதிகாரங்களை வழங்கும் உத்தேசம் தனக்கு இருக்கவில்லை என்றும், ஆகவே அது குறித்து எவரும் அச்சப்படத் தேவையில்லை என்றும் உத்தரவாதமளித்திருந்தார் . 

சொன்ன பிரகாரம், அடுத்த நாள் நவம்பர் 06ஆம் திகதி ‘ஓரே நாடு - ஒரே சட்டம்’ செயலணியின் ‘விஷப் பற்களை பிடுங்கி எறியும்’ வர்த்தமானி அறிவித்தலையும் வெளியிடச் செய்தார். சிறுபான்மைச் சமூகப் பிரதிநிதிகளையும், பெண்களையும் இச்செயலணியில் சேர்த்துக் கொள்ளும் நோக்கத்துடன் இது தொடர்பான முன்னைய வர்த்தமானி அறிவித்தல் திருத்தப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், அதன் கடைசிப் பந்தியில் ‘இச்செயலணியின் பணிகள் பின்வருமாறு திருத்தப்பட்டுள்ளன’ என்ற முக்கியமான வாசகம் உள்ளடக்கப்பட்டிருந்தது:

1. “இலங்கையினுள் ஒரே நாடு - ஒரே சட்டம்” என்னும் கருத்துருவை நடைமுறைப்படுத்துதல் தொடர்பாக பல தரப்புக்கள் கொண்டுள்ள கருத்துக்கள், அபிப்பிராயங்கள் என்பவற்றை கருத்தில் கொண்டு, சொல்லப்பட்ட கருத்துருவை கலந்தாராய்ந்ததன் பின்னர், அதற்கென இலங்கைக்கு தனித்துவமான கருத்துருவச் சட்டகம் (Conceptual Framework) ஒன்றை தயாரித்தல்  தொடர்பாக முன்மொழிவுகளை சமர்ப்பித்தல். 

ஆகவே, புதிய சட்டவாக்கங்களை தயாரிப்பதற்கு தயாராக இருந்த ஞானசார தேரரின் பணி இப்பொழுது வெறுமனே ‘Conceptual Framework’  ஒன்றை தயாரிப்பதற்கான முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதற்கு மட்டும் வரையறுக்கப்பட்டிருக்கிறது.

‘ஒரே நாடு - ஒரே சட்டம்’ செயலணிக்கு வழங்கப்பட்டிருந்த அதி உச்ச அதிகாரங்களை வழங்கிய அதே வேகத்தில் பறித்தெடுத்திருக்கிறார் ஜனாதிபதி. இது ஞானசார தேரர் இலங்கை அரசியல் சமூகத்தில் வகித்து வரும் வகிபாகத்தின் பின்னணியில் நோக்கும் பொழுது, இலங்கையின் அண்மைக் கால அரசியலில் ஏற்பட்ட மிக முக்கியமான ஒரு திருப்பமாக இருந்து வருவதனை பார் க்க முடிகிறது. 

அதாவது, ஞானசார தேரரை பகைத்துக் கொள்வதையும் பார்க்க, அமைச்சரவையிலிருக்கும் ஒரேயொரு முஸ்லிம் உறுப்பினரை இழப்பதன் மூலம் ஏற்படக்கூடிய குறுங்கால, நீண்ட கால இழப்புக்கள் ஏற்கனவே பலவீனமடைந்து கொண்டிருக்கும் அரசாங்கத்தை பொறுத்தவரையில் பாரதூரமானவையாக இருந்து வர முடியும் என்ற விடயத்தை தகுதி வாய்ந்த ஆலோசகர்கள் ஜனாதிபதியின் கவனத்திற்கு எடுத்து வந்திருக்க முடியும் எனத் தோன்றுகிறது.

இந்த நியமனத்தையடுத்து ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு ஞானசார தேரருக்கு விதிவிலக்கான விதத்தில் பெருமளவுக்கு பிரச்சாரங்களை பெற்றுக்கொடுத்ததுடன், தனது செயலணி செய்யப் போகும் அற்புதங்கள் குறித்து - தனக்கு கிடைத்திருக்கும் புதிய அந்தஸ்துக்கு பொருத்தமான உடல் மொழியுடன் - அவர் விரிவாக பேசியிருந்தார் . அந்தப் பின்புலத்தில், தான்  இவ்விதம் சிறுமைப்படுத்தப்பட்டிருப்பதை - அதுவும் அலி சப்ரியின் சொல் கேட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதனை - ஞானசார தேரர் எவ்வாறு எதிர் கொள்ளப் போகிறார் என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்த அதிரடி மாற்றம் அவருடைய ஈகோவை  பெருமளவுக்கு காயப்படுத்தியிருக்க முடியும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.