ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை தடுக்கத் தவறியதன் மூலம், முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும்  முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரால் தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையில் இருந்து விலகுவதாக உயர் நீதிமன்ற நீதியரசர்கள் இருவர், நேற்று (16) அறிவித்தனர்.

தாக்குதலில் இரண்டு குழந்தைகளை இழந்த தம்பதி, ஹோட்டல் உரிமையாளர் உட்பட 12 பேர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுக்கள் 12 உம், எழு நீதியரசர்கள் கொண்ட அமர்வு முன்னிலையில் நேற்று (16) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, நீதியரசர்களான பிரியந்த ஜயவர்தன மற்றும் காமினி அமரசேகர ஆகியோர் தனிப்பட்ட காரணங்களுக்காக  விசாரணை செய்வதிலிருந்து விலகினர்.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்களான புவனேக அலுவிஹார, பிரியந்த ஜயவர்தன, முர்து பெர்னாண்டோ, எல்.டி.பி.தெஹிதெனிய, எஸ்.துரைராஜா மற்றும் காமினி அமரசேகர ஆகியோர் முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

அதன்படி, இந்த 12 மனுக்களையும் 2022 மார்ச் 14, 15, 16 மற்றும் 18 ஆகிய திகதிகளில் விசாரிக்க உயர் நீதிமன்றம் கட்டளையிட்டது. முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கடந்த அரசாங்கத்தின் அமைச்சரவை மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

தமிழ் மிரர்


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.