மகேஸ்வரி விஜயனந்தன்

நாட்டில் இதுவரை எவ்வித எரிபொருள் தட்டுப்பாடும் ஏற்படவில்லை என தெரிவித்த
அமைச்சரும் அமைச்சரவை இணைப்பேச்சாளருமான உதய கம்மன்பில, அவ்வாறு எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுமாயின் அது குறித்து மக்களுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆனால், இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் செயற்படுவது தனது
முதற்கடமை என்றார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (16) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலே, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், கடந்த ஐந்து மாதங்களில் 4ஆவது தடவையாகவும் ஒரு நபர் பொதுமக்களை பொய் சொல்லி ஏமாற்றியுள்ளார். பெற்றோலிய கூட்டுத்தாபனத்திலிருந்து ஓய்வுப்பெற்ற அவர் சொல்லும் பொய்யை நம்பி மக்கள் ஏமாந்துள்ளனர்.

நேற்றும் அதேப்போன்றதொரு சம்பவம்தான் நடந்தது. ஆனால், மக்கள் மின்சக்தி அமைச்சரின் கருத்தை செவிமடுத்திருந்தால் நீண்ட வரிசையில் நிற்கேவேண்டிய அவசியம் இல்லை என்றார்.

இவ்வாறு மக்களை குழப்பமடையச் செய்வதன் மூலம் மக்கள் வீணாக குழப்பமடைந்து
தேவையற்ற விதத்தில் எரிபொருளை சேமிக்கத் தொடங்கியதன் காரணமாக, எரிபொருள்
விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருக்கலாம் என்றார்.

கச்சாய் எண்ணைய் கொள்வனவு தொடர்பான அசௌகரியத்தால் சபுகஸ்கந்த எரிபொருள்
சுத்திகரிப்பு விடயம் தொடர்பில்தான் முன்னதாகவே ஊடகங்களுக்கு அறிவுறுத்தியதாகவும் இதன் பாதிப்பு எரிபொருள் கூட்டுதாபனத்துக்கு மாத்திரம் ஒழிய இதன் மூலம் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என்றார்.

மேலும் சபுகஸ்கந்த எரிபொருள் சுத்தகரிப்பு நிலையத்தை தனியார் மயப்படுத்தப்படுவதாக வெளிவரும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என்றார்.
சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையமானது 51 வருடங்கள் பழமையானது என்பதுடன், இதன் கொள்ளளவில் 80 சதவீதம் மாத்திரமே பயன்படுத்த முடியும்.

ஆனால், இந்த சுத்திகரிப்பு நிலையம் ஊடாக இந்த நாட்டின் மொத்த பெட்ரோல் தேவையில் 14 சதவீதமும் 29 சதவீத டீசலுமே பெற்றுக்கொள்ளப்படுகின்றது. எனவே, இதனை மூடுவதால் இலங்கையில் எவ்வித எரிபொருள் பற்றாக்குறையும் ஏற்படவில்லை என்றார்.

அதேப்போல் அரசாங்கத்தால் கொள்வனவு செய்யப்படும் எரிபொருளை விட குறைந்த விலைக்கு கொள்வனவு செய்யக்கூடிய விநியோகஸ்தர்கள் இருப்பார்களாயின் அவர்களை
முன்னிறுத்துமாறு எதிர்க்கட்சி தலைவருக்கு சவால் விடுப்பதாகவும் அவ்வாறு இல்லை என்றால் இவ்வாறு போலி தகவல்களை கூறுவது தொடர்பில் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்றார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.