இரத்த வெள்ளத்தை தடுத்து, மரண பயத்தை ஒழித்து, எமது நாட்டை புகலிடமாக்கிய போர் வீரர்களுக்காக இந்த சந்தஹிரு சேய தூபியை அமைத்து பிரார்த்திப்பது எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதிருக்கட்டும் என்ற பிரார்த்தனையிலாகும் என கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

அனுராதபுரத்தில் நிர்மாணிக்கப்பட்ட சந்தஹிரு சேய தூபியை திறந்துவைக்கும் புண்ணிய நிகழ்வில் நேற்று (18) பிற்பகல் கலந்து கொண்டிருந்த போதே கௌரவ பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

நமது நாட்டின் சுதந்திரத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட இராணுவ வீரர்களின் பாதுகாப்பையும், உயிர் தியாகத்தின் மூலம் போர் வீரர்கள் எமக்கு உரிமையாக்கிய சுதந்திரத்தை பாதுகாப்பதனையும் எமது தலைவர்களும் எதிர்காலத்தில் உருவாகும் தலைவர்களும் பொறுப்பேற்க வேண்டும் என கௌரவ பிரதமர் இதன்போது தெரிவித்தார்.

•இத்தூபியை வணங்கும் ஒவ்வொரு நொடியிலும் சகல போர் வீரர்களுக்கும் யுத்தத்தில் உயிரிழந்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்போம்!

•சுதந்திரம் மற்றும் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்காகவே நாம் எப்போதும் போராடினோம்.

•எமது நாட்டு மக்களின் பிள்ளைகளினால் உருவான பாதுகாப்பு படை மீது எனக்கு முழு நம்பிக்கை இருந்தது.

•ஒரு நாட்டின் பாதுகாப்பு படை மீது நம்பிக்கை இன்றேல் அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு அற்று போகும்.

•எமது இராணுவத்தினரை மறந்துவிட்டு, சர்வதேச தலையீட்டுக்கு இடமளித்தோமாயின் இன்னும் எமது நாட்டில் இரத்த வெள்ளம் பாய்ந்திருக்கும்.

•சுதந்திரத்தை பாதுகாப்பதனை, எமது தலைவர்களும், எதிர்காலத்தில் உருவாகும் தலைவர்களும் பொறுப்பேற்க வேண்டும்.

குறித்த நிகழ்வில் கௌரவ பிரதமர் ஆற்றிய முழுமையான உரை,

போர் வீரர்களின் கரங்களினால் நிர்மாணிக்கப்பட்ட இந்த மஹாசேயவினை இராணுவத்தினருக்காக உலகுக்கு அர்ப்பணிக்கும் இந்நிகழ்வில் கலந்து கொள்ள கிடைத்தமை குறித்து மகிழ்ச்சியடைகிறேன். நாட்டுக்காக மிகத் தீவிரமான முடிவுகளை எடுத்து அவற்றை வெற்றியடையச் செய்ததில் நான் அளவற்ற மகிழ்ச்சியை அனுபவித்துள்ளேன். அந்த சமயங்களில் நான் பெற்ற மகிழ்ச்சியை விட, இந்த மாபெரும் செயலை முடித்த தருணத்தை நான் அதிகம் அனுபவிக்கிறேன் என்றுதான் சொல்ல வேண்டும்.

மேயர் துரையப்பா கொலையுடன் தொடர்புடைய கொலையாளிகளை கைது செய்ய சென்ற பொலிஸ் அதிகாரி பெஸ்தியன் பிள்ளேகே, 1981ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் வைத்து பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட கோப்ரல் ஹேவாவசம் முதல் நந்திக்கடலில் இறுதி யுத்தத்தில் வீரமரணம் அடைந்த சிப்பாய் வரை அனைத்து போர் வீரர்கள் மற்றும் எமது நாட்டிற்கு சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு பாடுபட்ட சகல போர் வீரர்களுக்கும், அதேபோன்று யுத்தத்தில் உயிர்நீத்த சகல தரப்பினருக்கும் இத்தூபியை வணங்கும் ஒவ்வொரு நொடியிலும் நன்றி கலந்த அஞ்சலி செலுத்தப்படும். உயிரிழந்த அனைவரும் எமது நாட்டின் எமது மக்கள்.

வரலாறு முழுவதும் நாம் போர்க்களத்தில் வென்றது திறமை மற்றும் துணிச்சலால் மட்டுமல்ல. இந்த நாட்டை ஒன்றிணைத்த துட்டகைமுனு மன்னர் வரலாற்று ரீதியாக எமக்கு அறிமுகப்படுத்திய உன்னதமான மனிதாபிமான மரபுகளை நாம் இன்றும் வரலாறு முழுவதிலும் பின்பற்றுவதே இதற்குக் காரணமாகும்.

போர் முடிந்ததும் கோட்டைகளை கட்டவில்லை. பாரிய குளங்களும், பாரிய தாதுகோபுரங்களுமே கட்டப்பட்டன. நாங்களும் அப்படியே செய்தோம்.

யுத்தம் நிறைவடைந்தவுடன் போர்வீரர்களுக்கான மஹாசேய தூபி ஒன்றை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினோம்.

இந்த தூபியினை திறந்து வைக்கும் இச்சந்தர்ப்பத்தில் அன்று காணப்பட்ட மரண அச்சம் குறித்து நினைவுபடுத்த வேண்டும். 1984 டொலர் ஃபாம், கென்ட் ஃபாம், கொக்கிலாய் மீது தாக்குதல் நடத்தி 91 பேரை கொன்று எமது வரலாற்று இராசதானிகளின் கிராமங்களுக்கு மரண அச்சத்தை ஏற்படுத்தினர். அதன் பிறகு இலங்கை வரைபடத்தில் 'எல்லை கிராமங்கள்' என்ற தேசம் சேர்க்கப்பட்டது. நீண்ட காலம் செல்வதற்கு முன்னர் ஜய ஸ்ரீ மஹா போதிக்கும் மரண பயம் ஏற்படுத்தப்பட்டது. . ஸ்ரீ மஹா போதிக்கு அருகில் சில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த 81 பேரை பயங்கரவாதிகள் கொன்றதுடன் வில்பத்து கிராமங்களில் 81 பேரை கொன்றனர். அடுத்து திருகோணமலை, மொரவௌ, மஹதிவுல்வௌ, மெதிரிகிரிய, பள்ளிய கொடல்ல, ஹொரவ்பத்தானை, ஜனகபுர, ஜயந்திபுர, வெலிஓயா, அம்பாறை, உஹன, கல்முனை, சியம்பலாண்டுவ, மொரவௌ மற்றும் மொனராகலை எல்லையில் உள்ள அத்திமலே வரையில் கிராம மக்கள் வெட்டிக் கொல்லப்பட்டனர்.

கொழும்பு பேருந்து நிலையத்தில் இருந்து ஆரம்பமாகி மத்திய வங்கி, தெஹிவளை புகையிரத நிலையத்தில் குண்டுவெடிப்புடன் ஆரம்பமான பயணம் 2009 ஆம் ஆண்டு தெற்கில் மாத்தறை அக்குரஸ்ஸவில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் ஒரு குழுவினர் கொல்லப்பட்டது நினைவிருக்கலாம்.

ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவை போன்று ஒவ்வொரு ஜனாதிபதியும் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முயற்சித்துள்ளனர்.

ஜே.ஆர். ஜெயவர்த்தன திம்புவில் வட்டமேசை விவாதங்களை நடத்தியது எனக்கு நினைவிருக்கிறது. அது பலனலிக்காதமையால், ஜே.ஆர். இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை மேற்கொண்டு இந்திய இராணுவம் வரவழைக்கப்பட்டு வடக்கு ஒப்படைக்கப்பட்டது. எங்கள் படையினர் முகாம்களில் மட்டுப்படுத்தப்பட்டனர். இராணுவம் முகாமை விட்டு வெளியேறுவதாயின் இந்திய இராணுவத்திடம் அனுமதி கோர வேண்டியிருந்தது. இவர்களில் எவரும் அன்றைய நமது முப்படை மீதும் அவர்களின் பலம் மீதும் நம்பிக்கை கொள்ளவில்லை.

அதன் பின்னர் ஜனாதிபதி ஆர்.பிரேமதாசவின் காலத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர்கள் விமானம் மூலம் கொழும்புக்கு அழைத்துச் வரப்பட்டு கலந்துரையாடியமை நினைவிருக்கலாம். 800 பொலிஸாரை அடிமையாக்கி காட்டிக்கொடுத்தனர். அது மாத்திரமன்றி விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களையும் கொடுத்தார்கள். அந்த ஆயுதங்கள் இறுதியாக நமது வீரர்களுக்கு எதிராகவே ஓங்கப்பட்டன. திரு.கமல் குணரத்ன அவர்கள் இதனை அறிந்திருப்பார். இறுதியில் அவரும் கொல்லப்பட்டார்.

அடுத்ததாக திருமதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் ஆட்சிக் காலத்தில் இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக ஒஸ்லோவில் 'சுது நெலும', 'தவலம' போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு கலந்துரையாடல்களும் இடம்பெற்றன. போர்வீரர்கள் என்ற வார்த்தை அப்போது கைவிடப்பட்டிருந்ததாக எனக்கு ஞாபகம். போர் வீரர்களுக்கு 'அரசாங்க பாதுகாப்புப் படைகள்' என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது. போர் வீரர்களுக்கு மரியாதை கொடுப்பது அமைதிக்குத் தடையாகக் கருதப்பட்டது. ஆனால் அவர் மீதும் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

அதன்பிறகு ரணில் விக்கிரமசிங்க அவர்களின் காலப்பகுதியில் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்தினார். புலிகளின் கட்டுப்பாட்டிற்கு தனியான பகுதிகள் ஒதுக்கப்பட்டன.

போர் நிறுத்த உடன்படிக்கைக்கு நோர்வே அரசாங்கம் கண்காணிப்பாளர்களை நியமித்தது. எங்கள் இராணுவம் முகாம்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டது. இவர்கள் யாருக்கும் நமது பாதுகாப்புப் படை மீது நம்பிக்கை இல்லை.

நான் பிரதமர் என்ற ரீதியில் வடக்கிற்குச் செல்லவிருந்தபோது, வடக்கிற்குச் செல்வதற்கு விடுதலைப் புலிகளிடம் அனுமதி பெற வேண்டும் என்று நோர்வேயின் போர் நிறுத்தக் கண்காணிப்பாளர்கள் என்னிடம் கூறியது எனக்கு நினைவிருக்கிறது. பிரதமரும் ஒரு நாட்டை சுற்றி வர அனுமதி பெற வேண்டும் என்றால் அது ஒரு தனியான நாடு.

எனது நாட்டிற்கு செல்ல நான் யாரிடமும் அனுமதி பெற தேவையில்லை என்று நினைத்தேன், நான் சுதந்திரமாக எப்போதாவது வடக்கிற்கு செல்வேன் என்று கூறினேன்.

நமது நாட்டு மக்களின் பிள்ளைகளினால் உருவாக்கப்பட்ட பாதுகாப்புப் படை மீது நாங்கள் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தோம். அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அப்போது பாதுகாப்புச் செயலாளராக இருந்தார்.

அவர், பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரிகளின் உதவியுடன், நாட்டிற்கு அமைதியை உரிமையாக்கும் பொறுப்பை நிறைவேற்ற பாதுகாப்புப் படைகளை வழிநடத்தினார்.

ஒரு நாட்டின் பாதுகாப்புப் படை மீது நம்பிக்கை இன்றேல், அந்நாட்டின் தேசிய பாதுகாப்பை இழக்க நேரிடும் என்றே அனைவரும் நம்புகிறார்கள். அதேபோன்று, எமது இராணுவத்தை மறந்துவிட்டு, வெளிநாட்டுப் படைகளையும், வெளிநாட்டுத் தலையீடுகளையும் அனுமதித்தால், எமது நாட்டில் இரத்த வெள்ளமே பாயும்.

இந்த சந்தஹிரு சேயாவின் மூலம் நினைவுகூரப்படும் போர்வீரர்களின் மனிதாபிமானப் பணியானது எமது வரலாற்றில் சுதந்திரத்திற்காக நடத்தப்பட்ட மிகக் கடினமான போர்களில் ஒன்றாக நான் கருதுகிறேன். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் தொடங்கும் முன் அப்போதைய இங்கிலாந்து பிரதமரை சந்தித்தது எனக்கு நினைவிருக்கிறது.

விடுதலைப் புலிகளை நிராயுதபாணியாக்கி நாட்டில் அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்று நான் கூறியபோது, அது சாத்தியம் என்று நான் நினைக்கவில்லை என்று கூறினார். அதைப் பற்றி சில விடயங்களைச் கூறினார். இந்த விவகாரம் ஏற்கனவே சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அப்போது அவர் கூறினார்.

சர்வதேச அளவில் பல நாடுகளின் பங்களிப்புடன் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இப்போது அதிலிருந்து விடுபட முடியாது என்று கூறினார். இரண்டாவது விடயம் புலிகளுக்கு ஏற்கனவே தனியான கட்டுப்பாட்டு பகுதிகள், தனி வங்கிகள் மற்றும் தனியான நிதிகள் உள்ளன. தனியான நிர்வாக அமைப்பு இருக்கிறது, அதுவரை நம் அரசாங்கங்கள் பார்த்துக் கொண்டிருந்துள்ளன. தற்போது எதுவும் செய்வதற்கில்லை என்று தெரிவித்தார்.

மேலும் புலிகளுக்கு தற்கொலை குண்டுதாரிகளும் உள்ளனர். ஏவுகணைகள், பீரங்கிகள் உள்ளன. கப்பல்கள், போர் விமானங்கள் மற்றும் விமானங்கள் உள்ளன. உங்களால் அவர்களை எதிர்கொள்ள முடியுமா என்று இங்கிலாந்து பிரதமர் அன்று என்னிடம் கேட்டார்.

உலகமே அவ்வாறு கூறிய போதும் எமது சொந்த மக்களின் பிள்ளைகளான எமது போர்வீரர்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்தி ருந்தோம்.எமது போர்வீரர்கள் ஈடு இணையற்ற தியாகத்தை செய்தனர். உலக வல்லரசுகள் கையெழுத்திட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தையும் கிழித்தெறிந்தோம். எமது போர்வீரர்களுக்கு எதிரான ஐ.நா தீர்மானத்தின் இணை அனுசரணையிலிருந்து நாம் தற்போது விலகியுள்ளோம். இவற்றின் தாக்கம் இப்போது நமக்கு எதிராக வருவதை நாம் அறிவோம். ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக நமது சுதந்திரத்தை நமக்கு முக்கியம்.

இரத்த வெள்ளத்தை தடுத்து, மரண பயத்தை ஒழித்து, எமது நாட்டை புகலிடமாக்கிய போர் வீரர்களுக்காக இந்த சந்தஹிரு சேய தூபியை அமைத்து பிரார்த்திப்பது எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதிருக்கட்டும் என்ற பிரார்த்தனையிலாகும்.

நம் நாடு எவ்வளவு சிறியதாக இருந்தாலும், நமக்கு நம் நாட்டில் வாழ சுதந்திரம் இருக்க வேண்டும். நமது நாட்டின் சுதந்திரத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட இராணுவ வீரர்களின் பாதுகாப்பையும், உயிர் தியாகத்தின் மூலம் இராணுவ வீரர்கள் எமக்கு உரிமையாக்கிய சுதந்திரத்தை பாதுகாப்பதனையும் எமது தலைவர்களும் எதிர்காலத்தில் உருவாகும் தலைவர்களும் பொறுப்பேற்க வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன் என கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

பிரதமர் ஊடகப்பிரிவு 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.