அரசின் சிறு பங்காளிக் கட்சிகளின் ‘பைலா’! - மன்சூர் மொஹமட்சிங்கள பேச்சுவழக்கில் இப்பொழுது அதிகமும் புழக்கத்தில் உள்ள ஒரு  சொல் ‘பைலா’ என்பது. அதன் நேரடிப் பொருள் பொப்பிசைப் பாடலை குறிப்பதாக இருந்து வந்தாலும் கூட, இப்பொழுது  வேறு ஒரு அர்த்தத்தில் அதனை பயன்படுத்துகிறார்கள். அதாவது, யாராவது ஒருவரின் பேச்சைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது ‘அது வெறும் பைலா’ என்றால் ‘வெட்டிப்  பேச்சு’ அல்லது ‘சொதப்பல்’ என்பது  அர்த்தம். சுருக்கமாகச் சொன்னால் பேசுபவருக்கோ அல்லது கேட்பவருக்கோ துளியும் பிரயோசனமில்லாத பேச்சு.

சொல்லப்போனால், இலங்கை அரசியலில் இது மாதிரியான பைலாக்களை நாங்கள் நிறையப் பார்த்திருக்கிறோம். அதிலும் ஒரு Classic  பைலாவுக்கான உதாரணம் 13ஆவது  அரசியல் யாப்புத் திருத்தம் மற்றும் மாகாண சபைகள் தொடர்பாக கடந்த 32 ஆண்டுகளாக இந்தியா அவ்வப்பொழுது தெரிவித்து வந்திருக்கும் கருத்துக்கள். 

இந்திய ஆளும் தரப்பு அரசியல்வாதிகளோ அல்லது வெளிநாட்டு அமைச்சின் உயர் அதிகாரிகளோ கொழும்புக்கு விஜயம் செய்யும் ஒவ்வொரு தடவையும் சொல்லி வைத்தால் போல ஒரே கருத்தையே கிளிப் பிள்ளைகளைப் போல ஊடகங்களிடம் சொல்லி வருகிறார்கள்: 

“13 ஆவது அரசியல் யாப்புத் திருத்தத்தின் பிரகாரம் இலங்கையில் பயனுள்ள விதத்தில் அதிகாரப் பகிர்வு இடம்பெற  வேண்டும். மாகாண சபைகளுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களையும் உள்ளடக்கிய விதத்தில் அனைத்து அதிகாரங்களும் வழங்கப்பட்டு, அவை மேலும் பலப்படுத்தப்பட வேண்டும்.” 


ஒன்றிரண்டு அல்ல, 32 வருடங்களாக எத்தனையோ தடவைகள் இப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது. இதிலுள்ள ஆச்சரியம் என்னவென்றால், சம்பந்தன் ஐயா போன்ற பழுத்த, அனுபவம் வாய்ந்த அரசியல்வாதிகளும் கூட இந்த ‘பைலாக்களை’ ஆமோதித்து, தலையாட்டிக் கொண்டிருப்பது தான்.

அந்த வரிசையில் இப்பொழுது புதிதாக வந்திருக்கிறது விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணாயக்கார மற்றும் மைத்திரிபால சிறிசேன போன்ற அரசின் சிறு பங்காளிக் கட்சிகளின் தலைவர்களால் முன்னெடுக்கப்படும் அரச எதிர்ப்பு ‘பைலா’. 2013 தொடக்கம் அவ்வப்பொழுது விமல் வீரவன்ச நிதி அமைச்சின் செயலாளர் பி பி ஜயசுந்தரவுக்கு எதிராக தொண்டை கிழிய எதிர்ப்புக் கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்தார். ‘பொருளாதாரத்தை கசாப்புக் கடைக்கு இட்டுச் செல்லும் துரோகி’ என்று ஊடகங்களில் தோன்றி கூக்குரலிட்டார். மஹிந்த ராஜபக்ச அதை அறவே கணக்கில் எடுக்கவில்லை.

2019 இல் அதே பி பி ஜயசுந்தரவின் அந்தஸ்தை மேலும் உயர்த்தி, அவரை ஜனாதிபதியின் செயலாளராக நியமனம் செய்து வீரவன்ச போன்றவர்களின் முகத்தில் அறைந்தார்கள் ராஜபக்சகள். அந்த அவமானங்களை எல்லாம் சகித்துக் கொண்டு தான் இவர்கள் ராஜபக்ச முகாமில் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இப்பொழுது இவர்கள் யுகதனவி மின்சார நிலைய விவகாரத்தைப் பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் ஜனாதிபதியின் பெயரை பயன்படுத்துவதனை கவனமாக தவிர்த்து, பசில் ராஜபக்சவின் அயோக்கியத்தனத்தை (‘தக்கடிகம’) சாடுகிறார்கள். இலங்கை மக்கள் இது போன்ற இவர்களுடைய கூத்துக்களை ஏற்கனவே பல தடவைகள் பார்த்து, பெரிதும் சலித்துப் போயிருக்கிறார்கள்.

ஒரு விதத்தில் வீரவன்ச ஆட்கள் தாமே வெட்டிய படுகுழியில் இப்பொழுது விழுந்திருக்கிறார்கள். தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும், சிறுபான்மை சமூகங்களிலிருந்து (சிறுபான்மைக் கட்சிகளிலிருந்து) வரும் ‘அநியாயமான கோரிக்கைகளை’ நிராகரித்து, ஒதுக்குவதற்கும் முழுவதும் சிங்கள மக்களால் தெரிவு செய்யப்படும் வலுவான ஜனாதிபதி ஒருவர் நாட்டிற்குத் தேவை என்று பரப்புரை செய்து வந்தவர்கள் இவர்கள். இப்பொழுது, தமக்கு அயோக்கியனாகத் தோன்றும் பசில் ராஜபக்சவின் பாராளுமன்ற வருகைக்கு வழிகோலிய 20 ஆவது திருத்தத்திற்கு கைதூக்கியவர்கள்.

ஜனாதிபதி தனக்கிருக்கும் முழு அதிகாரங்களையும் பயன்படுத்தி தம்மை அவமானப்படுத்தும் பொழுது, ஒரு சந்திப்புக்குக் கூட நேரம் ஒதுக்கித் தர முடியாது என்று ஆணவத்துடன் சொல்லும்  பொழுது, இப்பொழுது இவர்களுடைய மனச்சாட்சி உறுத்தத் தொடங்கியிருக்கிறது. எந்த ஜனாதிபதிக்கு அபரிமிதமான அதிகாரங்களை பெற்றுக் கொடுப்பதற்காக இவர்கள் இரவும் பகலும் பரப்புரை செய்து வந்தார்களோ அதே ஜனாதிபதி இன்னும் சில நாட்களில் அமைச்சுப் பதவிகளை பறித்து, இவர்களை வெளியில் தூக்கி எறிந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. கொழும்பு அரசியலில் அப்படி ஓர் அதிரடி மாற்றத்திற்கான சூழல் கைகூடி வருவது போல் தெரிகிறது. 

அப்படி நடந்தால் இவர்களுடைய தேசாபிமான வேஷம் மேலும் தீவிரமடைய முடியும். மக்கள் மத்தியில் தமக்கென ஓர் அனுதாப  அலையை உருவாக்கிக் கொள்ளும் பொருட்டு மீண்டும் புதிய புதிய ‘பைலாக்களை’ அவிழ்த்துவிடவும் முடியும். ஆனால், இலங்கை மக்கள் அப்படியான நாடகங்களுக்கு இனியும் ஏமாற மாட்டார்கள் என்றே தெரிகிறது.

மறுபுறத்தில், இதே வீரவன்சவும், கம்மன்பிலவும் இன்னும் சில நாட்களில் ஊடகங்களில் தோன்றி, வலிந்து உருவாக்கிக் கொள்ளும் ‘வெற்றி வீரர்’ தோரணையுடன்  “நாங்கள் யுகதனவி விவகாரம் குறித்து ஜனாதிபதியுடன் விரிவாக கலந்துரையாடினோம். அதனையடுத்து, இந்த ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கும் இலங்கைக்கு பாதகமான சரத்துக்களை நீக்கி, அனுகூலமான புதிய சரத்துக்களை சேர்த்துக் கொள்வதாக அவர் எங்களுக்கு உத்தரவாதமளித்தார்” என்று கூறி, திடீர் பல்டி அடிக்கவும் முடியும். அவர்களுடைய பழைய சரித்திரம் அப்படி. 

இந்தக் கோஷ்டியில் அகப்பட்டுக் கொண்டிருக்கும் லங்கா சமசமாஜக் கட்சியின் திஸ்ஸ வித்தாரணவும், இடதுசாரி ஐக்கிய முன்னணியின் வாசுதேவ நாணயக்காரவும் ஒரு வகையில் இந்த அரசாங்கத்தில் அங்கம் வகிப்பது ஒரு மாபெரும் எதிர்முரண். இலங்கையின் 86  வருட கால இடதுசாரி  அரசியல் வரலாற்றில் ஏற்பட்டிருக்கும் அழிக்க முடியாத கரும்புள்ளி. திஸ்ஸ வித்தாரண தலைமை தாங்கும்  LSSP கட்சிக்கு அவரை விட ஒரு வயது குறைவு. சமூக நீதிக்கான போராட்டங்களிலும், தொழிலாளர் உரிமைகளுக்கான போராட்டங்களிலும் களமிறங்கி, சாதனைகள் பல படைத்து, ஒரு காலத்தில் தலை நிமிர்ந்து நின்ற ஆசியாவின் பழைமையான அரசியல் கட்சிகளில் ஒன்று அது. 

1935 தொடக்கம் LSSP எந்தெந்த உயரிய மானிட விழுமியங்களுக்கெல்லாம் உயிரைப் பணயம் வைத்துப் போராடியதோ, அவை அனைத்தையும் (இராணுவ பூட்ஸ்) கால்களின் கீழ் போட்டு மிதிக்கும் ஒரு தீவிர வலதுசாரி அரசாங்கத்தில் கூனிக்குறுகி, சிறுமைப்பட்டு அமர்ந்திருக்கிறார் திஸ்ஸ வித்தாரண. கேவலம் ஒரு தேசியப் பட்டியல் எம் பி பதவிக்காக இந்த விலையைச் செலுத்த  வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது அவருக்கு. அக்கட்சியின் ஸ்தாபகரான (அவருடைய தாய் மாமா) கலாநிதி என் எம் பெரேராவின் ஆவி அவரை ஒரு போதும் மன்னிக்கமாட்டாது. 

அடுத்தவர் தோழர் வாசுதேவ நாணாயக்கார. 1970களிலும், 1980களிலும் இலங்கை அரசியலில் அதிகமும் நேசிக்கப்பட்ட ஓயாத கலகக்காரர்; ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், சிறுபான்மைச் சமூகங்களுக்காகவும் உரத்துக் குரல் எழுப்பி வந்த போராளி. தொடக்கத்தில் கோட்டாபய ராஜபக்சவை ஏற்றுக்கொள்ள மறுத்தவர். அவருடைய இராணுவப் பின்னணி ஜனநாயக அரசியல் விழுமியங்களுக்கு ஒத்து வராது என்று வாதாடியவர். தனது வாதம் நூற்றுக்கு நூறு வீதம் சரியானது என்பது நிரூபிக்கப்பட்டிருக்கும் இன்றைய சூழலில், 82 வயதில் எந்தவொரு அதிகாரமும் இல்லாத ஓர் அமைச்சுப் பதவிக்காக எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு, தனது புரட்சிகர முகத்தை சிதைத்துக் கொண்டிருக்கிறார் அந்தப் போராளி. ‘அடக்குமுறையை ஆயுதமாகக் கொண்டிருக்கும் இந்த அரசாங்கத்தை எதிர்கொள்ளத் தயார்’ என்ற வாய்ச் சவடால் வேறு!

மைத்திரிபால சிறிசேன தலைமையிலான SLFP இப்பொழுது காற்றுப் போன பலூன். சிங்கள மக்களுக்கு மத்தியில் ஒரு வலுவான கட்சியாக மீண்டும் தலைதூக்குவதற்கான வாய்ப்பு அதற்கு மிக மிகக்குறைவு. அவர்களும் அரசாங்கத்தின் இனவெறி / மத வெறி அரசியலை மௌனமாக ஆமோதித்துக் கொண்டு, வேறு எதனையோ பிதற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.

‘சிங்கள பௌத்த கொடியை மட்டும் ஏந்திக்கொண்டு இந்தப் பயணத்தை மேற்கொள்ள முடியாது’ என்று சொல்லக்கூடிய துணிச்சல் நிமல் சிறிபால சில்வா போன்ற ஒரு சில தலைவர்களுக்கு மட்டுமே இருக்கிறது. மைத்திரிபாலவின்  பேச்சுக்கள் அனைத்துமே ‘பைலா’ வகையைச் சேர்ந்தவை.

இந்தக் கூட்டத்தார் தீடிரெனத் துணிந்து, களமிறங்கி ‘மக்கள் சபை’, ‘மண்ணாங்கட்டி சபை’ என்று அரசாங்க எதிர்ப்புக் கூச்சல் போடும் - அதுவும் மிகவும் ஜாக்கிரதையாக பசில் ராஜபக்சவை மட்டும் இலக்கு வைத்து கூச்சல் போடும் - காரணம் நிச்சயம் அவர்களுடைய மனச்சாட்சி அல்ல. நாடெங்கிலும் - குறிப்பாக, ராஜபக்சகளின் வலுவான ஆதரவுத் தளமான சிங்களப் பெருநிலம் நெடுகிலும் - மெதுவாக, ஆனால் வலுவாக எழுச்சியடைந்து கொண்டிருக்கும் அரச எதிர்ப்பு அலை  அவர்களை கதிகலங்கச் செய்திருக்கிறது.. 

அரசாங்கத்திலிருந்து கிடைக்கும் அனைத்து விதமான சலுகைகளையும், வசதிகளையும் அனுபவித்துக் கொண்டே ‘நாங்கள் இவர்களுக்கு துணை போகும் ஆட்கள் அல்ல’ என்று படம் காட்டுகிறார்கள். அடுத்த அபத்தம் ஒரு பிரச்சினையை மட்டும் தனிமைப்படுத்தி, எடுத்து அவர்கள் முன்வைக்கும் அரச எதிர்ப்புக் கோஷம். அதாவது, யுகதனவி மின்சார நிலையப் பிரச்சினைக்கு ‘திருப்திகரமான ஒரு தீர்வு’ கிடைத்திருப்பதாகச் சொல்லி மீண்டும் அவர்கள் எந்த நேரத்திலும் அரசாங்கத்துடன் ஒட்டிக் கொள்ள முடியும். விவசாயிகள் பிரச்சினைகளையோ, ஆசிரியர்களின் போராட்டங்களையோ, ஊடகங்கள் பரவலாக அம்பலப்படுத்தி வரும் மெகா ஊழல்களையோ அல்லது ராஜபக்ச அரசாங்கம் முன்னெடுத்து வரும் தீவிர வலதுசாரி நிலைப்பாட்டுன் கூடிய சிறுபான்மை எதிர்ப்பு அரசியலையோ அவர்கள் கண்டு கொள்ளவே மாட்டார்கள். 

ஆகவே, இந்த ஆட்கள் அரசாங்கத்திற்கு உள்ளே இருந்தாலும் சரி, அரசாங்கத்திலிருந்து வெளியில் வீசியெறியப்பட்டாலும் சரி, அவர்களை எவரும் பொருட்படுத்த வேண்டிய அவசியமில்லை. 

ஏனென்றால், அவர்கள் எதை விதைத்தார்களோ அதை இப்பொழுது அறுவடை செய்து கொண்டிருக்கிறார்கள்!

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.