ஆர்எஸ்எஸ் / பிஜேபி சித்தாந்தத்தின் முன்னணிப் பரப்புரையாளர் சுப்பிரமணியம் சுவாமியின் கொழும்பு விஜயம்  இடம்பெற்று ஒரு வார காலத்திற்குள் 'ஒரே நாடு - ஒரே சட்டம்'  ஜனாதிபதி செயலணியை நியமனம் செய்யும் முக்கியமான முடிவை அரசாங்கம் எடுத்திருக்கின்றது. சுவாமி ராஜபக்சகளின் நெருங்கிய நண்பர் மற்றும் ஆலோசகர் என்பது எல்லோருக்கும்  தெரிந்த விஷயம். இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்மத்தை பரப்புவதற்கு இப்பொழுது இலங்கையில் ஓர் உசிதமான  சூழல் நிலவி வருவதும் அவருக்குத் தெரியும்.

ஆகவே, சுவாமியின் கொழும்பு விஜயத்தையும், அரசாங்கம் எடுத்திருக்கும் இந்த முக்கியமான முடிவையும் வெறுமனே தற்செயல் நிகழ்வுகளாக பார்க்க முடியாதுள்ளது. எல்லாவற்றையும் ஒரு பெரிய திட்டத்தின் உள்ளார்ந்த பாகங்களாகவே பார்க்க வேண்டியிருக்கின்றது.  ஆர்எஸ்எஸ்/ விஸ்வ ஹிந்து பரிஷத் / பஜ்ரங் தள் போன்ற (பிஜேபி யின் பினாமி) அமைப்புக்கள் வட இந்தியா நெடுகிலும் முன்னெடுத்து வரும் அதே பாணியிலான முஸ்லிம் எதிர்ப்புப் பிரச்சாரங்களையே இலங்கையில் பொதுபல சேனா கட்டவிழ்த்து விட்டிருக்கின்றது. 

'ஒரே நாடு - ஒரே சட்டம்' என்ற சுலோகம் நேரடியாக முஸ்லிம்களை இலக்கு வைத்து, சிங்கள ஊடகங்களினால் உருவாக்கப்பட்ட ஒரு கோஷம்.  அத்துரலியே ரத்தன தேரர் போன்றவர்களின் பரப்புரைகள் காரணமாக சிங்கள மக்களின் பொதுப்புத்தியில்  ஊன்றச் செய்யப்பட்ட ஒரு கருத்து.

அதாவது,  ' இலங்கையின் சட்டங்கள்  வேறு எந்த மதத்தினருக்கும் இல்லாத  விசேட சலுகைகளையும், உரிமைகளையும்  முஸ்லிம்களுக்கு வழங்கியிருக்கின்றன' என்ற ஒரு தப்பெண்ணத்தை அவர்கள் சாதாரண சிங்கள மக்கள் மத்தியில் உருவாக்கியிருக்கிறார்கள். இந்தச் சுலோகமும் 'தேசிய பாதுகாப்பு' என்ற வார்த்தையும் சிங்கள ஊடகங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான  குறியீடுகளாகவே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 'தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்' என்ற வார்த்தை உச்சரிக்கப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சாதாரண சிங்கள மக்கள் இச்சொல்லுடன் 'இஸ்லாமிய தீவிரவாதம்' என்ற சொல்லையும் சேர்த்தே வாசிக்கின்றார்கள். அப்படித் தான் அவர்களது பொதுப்புத்தி கட்டமைக்கப்பட்டிருக்கின்றது.

'தொல்பொருள்களின் பாதுகாப்பு' என்ற சொல்லையும் கூட மறைமுகமான சிறுபான்மை எதிர்ப்புத் தொனியிலேயே  சிங்கள ஊடகங்கள் பயன்படுத்தி வருகின்றன.

அந்தப் பின்புலத்திலேயே, 2019 ஜனாதிபதி தேர்தலின் போது கோட்டாபய ராஜபக்ச 'நாட்டு மக்கள் அனைவருக்கும் ஒரு பொதுவான சட்டம்'  என்ற சுலோகத்தை ஒரு தேர்தல் வாக்குறுதியாக முன்வைத்திருந்தார். இப்பொழுது அதற்கான செயலணியை நியமனம் செய்திருக்கின்றார். இந்நகர்வு எதிர்பாராத விதத்தில் தூண்டிவிட்டிருக்கும் கடும் எதிர்ப்பலைகள் ஜனாதிபதியையும், அவருடைய  அரசாங்கத்தையும் ஓரளவுக்கு நிலைகுலையச் செய்துள்ளன.

" ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் 'ஒரே நாடு - ஒரே சட்டம்'  என்ற  விடயம் தொடர்பாக  தொடர்ந்து பேசி வந்திருப்பவர்  கலகொட அத்தே ஞானசார தேரர். எனவே, இந்தச் செயலணிக்கு அவரைத் தலைவராக நியமித்ததில் என்ன தவறு? " என்று கேட்கிறார் ஜனாதிபதி.

நல்ல கேள்வி. அதாவது, ' ஒருவர் அதீத ஆர்வம் காட்டி வரும் ஒரு பிரச்சினையை பரிசீலனை செய்து,  தீர்த்து வைப்பதற்குத் தேவையான பரிந்துரைகளை முன்வைப்பதற்கு பொருத்தமான ஆள் அவரைத் தவிர வேறு யார்? ' என்ற கருத்துப்பட பேசியிருக்கிறார் அவர்.

  இந்தச் செயலணிக்கு தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும்  பரவலாக முன்வைக்கப்பட்டிருக்கும்  எதிர்ப்பு மற்றும் கண்டனங்கள் என்பவற்றின் மையக் கருவாக இருப்பது \Conflict of Interests' என்ற கோட்பாடு. இராணுவத்தில் ஒரு மூத்த அதிகாரியாக பணியாற்றியிருக்கும் ஜனாதிபதி நிச்சயமாக அதனை அறிந்திருப்பார்.

ஒரு பிரச்சினை/ நெருக்கடி தொடர்பாக விரிவாக ஆய்வு செய்து, அப்பிரச்சினையை / நெருக்கடியை தீர்த்து வைப்பதற்கென மேற்கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளுக்கான பரிந்துரைகளை முன்வைக்கும் அதிகாரத்தைக் கொண்டிருக்கும் ஒரு நபர், அந்தப் பிரச்சினை /  நெருக்கடி தொடர்பாக எந்த விதமான விருப்பு வெறுப்புக்களையோ, காழ்ப்புணர்ச்சிகளையோ கொண்டிருக்கக் கூடாது என்பது இக்கோட்பாட்டின் சாராம்சம்.

ஓர் எளிய உதாரணத்தின் மூலம்  இதனை விளக்க முடியும். இலங்கையில் இயங்கி வரும்  மத்ரஸாக்களின் குறைநிறைகளை விரிவாக ஆய்வுக்குட்படுத்தி, அவற்றில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து பரிந்துரைகளை  முன்வைப்பதற்கென ஜனாதிபதி ஒரு செயலணியை நியமனம்  செய்கிறார் என வைத்துக் கொள்வோம். அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. அதனை எல்லோரும் வரவேற்பார்கள் என்பதிலும்  சந்தேகமில்லை. ஆனால், இச்செயலணியின் தலைவராக அத்துரலியே ரத்தன தேரர் நியமனம் செய்யப்பட்டால், ஒரு ஜனநாயக அரசு பின்பற்ற வேண்டியிருக்கும் தார்மீக நெறிமுறைகளை அறிந்து வைத்திருக்கும் எந்த ஒரு தரப்பினரும்  அதனை ஆதரிக்கவோ, ஏற்றுக் கொள்ளவோ மாட்டார்கள்.

ஏனென்றால், ரத்தன தேரர் மத்ரஸாக்கள் குறித்து கடுமையான காழ்ப்புணர்ச்சிகளை கொண்டிருப்பவர்;  அவை இஸ்லாமிய தீவிரவாதத்தின் விளைநிலங்கள் என்றும்,  அவற்றை உடனடியாக மூடி விட வேண்டும் என்றும் பல ஆண்டுகள் பாரளுமன்றத்துக்கு உள்ளேயும், பாராளுமன்றத்திற்கு வெளியேயும் ஆவேசமாக குரலெழுப்பி வந்திருப்பவர். அதன் காரணமாக, அத்தகைய ஒரு செயலணிக்கு தலைமை தாங்குவதற்கான அடிப்படைத் தகுதிகள் எவற்றையும் அவர்  கொண்டிருக்கவில்லை.

ஞானசார தேரரின் தலைமையிலான செயலணி தொடர்பாகவும் பல தரப்பினரும் இதே வாதத்தைத் தான் முன்வைத்திருக்கின்றார்கள். ஜனாதிபதியின் கடும்  சிங்கள - பௌத்த  நிலைப்பாட்டின்  முக்கியமான ஆதரவாளர்களில் ஒருவரான தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க இந்தச் செயலணிக்கு தனது கண்டனத்தைப் பதிவு  செய்திருப்பதுடன், 'நாட்டின் சட்டங்களை மீறியிருக்கும் ஒருவரிடம் எப்படி புதிய சட்ட வரைவுகளை தயாரிக்கும்  பணியை ஒப்படைக்க முடியும்" எனக் கேள்வியெழுப்பியிருக்கின்றார்.  அவர் வெளிப்படுத்தியிருக்கும்  கரிசனை, ஞானசார தேரரின் தலைமையில் இயங்கும் ஒரு செயலணியின் அறிக்கையை தேசிய ரீதியிலோ அல்லது சர்வதேச ரீதியிலோ 'சந்தைப்படுத்த'  முடியாமல் போகும் என்ற தர்க்கத்தை அடிப்படையாகக் கொண்டதாகும்.  ஏனென்றால்,  அத்தகைய அறிக்கை ஒன்றுக்கு எந்;த ஒரு தரப்பிலிருந்தும் அங்கீகாரம்  (Legitimacy) கிடைக்க மாட்டாது.

இதில் முக்கியமாக கவனத்தில் எடுக்க வேண்டிய மற்றொரு விடயம் ஜனாதிபதியின் இந்த முடிவுக்கு சிங்களத் தரப்பிலிருந்து எதிர்ப்பு தெரிவித்தவர்களில் பெரும்பாலானவர்கள்  'ஒரே நாடு - ஒரே சட்டம்'  என்ற கருத்தை எதிர்க்கவில்லை; அதற்கு மாறாக, இச்செயலணியின் தலைவர் தொடர்பாகவே அவர்கள் தமது எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார்கள் என்பதாகும். (ஒரு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி வைக்கும் பொருட்டு அரசாங்கம் ஓர் அமைப்பை உருவாக்குவதை எவரும்  எதிர்க்க முடியாது.)

இலங்கை அரசியலின் இரண்டு பிரதான அணிகளுக்கு அப்பால் ஒரு மூன்றாவது அணியின் தேவையை வலியுறுத்தி, அதற்கென தொடர்ந்து பரப்புரைகளை மேற்கொண்டு  வரும்   நாகானந்த கொடிதுவக்கு போன்றவர்களும் கூட அதே நிலைப்பாட்டிலேயே இருக்கின்றார்கள்.

'இந்தச் செயலணியை முஸ்லிம்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஒட்டுமொத்த முஸ்லிம்  சமூகமும் இதற்கு தனது கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றது... சமூக ஊடகங்களில்  இதனை மிகத் தெளிவாக பார்க்க முடிகின்றது" என்று சொல்லும் கொடிதுவக்கு முத்தாய்ப்பாக இப்படிச் சொல்கிறார்: 'ஆனால், காதி நீதிமன்றங்கள் போன்ற  முஸ்லிம் சமூகம் சம்பந்தப்பட்;ட சட்ட அமைப்புக்கள் பெரும் ஊழல் கிடங்குகள்.... பெண்களை பெருமளவுக்கு அலைக்கழித்து வருபவை. எனவே, அவை ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் இரு வேறு கருத்துக்கள் இருந்து வர முடியாது."

ஆகவே,  இங்கு இலங்கை முஸ்லிம்  சமூகம் தெளிவாகப் புரிந்து கொண்டு, மிக மிகக் கவனமாக  காய் நகர்த்த வேண்டிய விடயம் ஞானசார தேரரின் செயலணிக்கான எதிர்ப்பு அந்தச் செயலணி பரீசீலனைக்கு எடுத்து, பரிந்துரைகளை முன்வைக்க வேண்டிய பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு தோன்றியிருக்கவில்லை;   மாறாக, பொருத்தமற்ற ஒரு நபர் இதற்குத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என்ற விடயத்தின் அடிப்படையிலேயே இந்த எதிர்ப்புக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன என்பதாகும்.

இந்தச் செயலணியின் இறுதி அறிக்கையை எழுதப் போகிறவர் நிச்சயமாக ஞானசேர தேரர் அல்ல;  பின்னணியில் இருந்து அவரை இயக்கும் இலங்கை - இந்திய இஸ்லாமோபோபியா அணியினராலேயே அநேகமாக இந்த விடயம்; கையாளப்பட முடியும். குறிப்பாக, பொதுபல சேனா இயக்கத்தின் முதன்மை கோட்பாட்டாக்கவாதியான டிலந்த வித்தானகே போன்றவர்களின் கை இதில் ஓங்கியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. 2022 பெப்ரவரி 28 ஆந் திகதி ஒப்படைக்கப்பட வேண்டிய இந்த அறிக்கை, ஒரு வேளை, ஏற்கனவே எழுதப்பட்டிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.    

'ஒரே நாடு - ஒரே சட்டம்' என்ற கோஷம் இலங்கைக்கு புதியதாக இருந்து வந்தாலும்  கூட,  இந்தியாவில்  கிட்டத்தட்ட கடந்த 70 ஆண்டு காலம் (அங்கும் மறைமுகமாக முஸ்லிம்களுக்கு எதிராக) அது முன்வைக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால், அந்த வார்த்தைக்குப் பதிலாக அவர்கள் 'அனைவருக்குமான பொது சிவில் சட்டம்'   (Uniform Civil Code) என்ற சொல்லை பயன்படுத்தி வருகின்றார்கள். 

1950 ஆம் ஆண்டின் இந்திய அரசியல் சாசனத்தின் உறுப்புரை 44 'அரசு, இந்தியப் பிராந்தியங்கள் முழுவதிலும்  பொதுவான ஒரு சிவில் சட்டத்தை அமுல் செய்வதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும்" எனக் கேட்டுக்  கொள்கின்றது. ஆனால், அரசியல் சாசனத்தின் வழிகாட்டல் நெறிமுறைகளின் ஒரு பாகமாக மட்டும் அந்த உறுப்புரை முன்வைக்கப்படுவதுடன், அனைவருக்குமான பொது சிவில் சட்டத்தை அது கட்டாயப்படுத்தவில்லை. அந்தப் பின்னணியில், 1950 களிலிருந்து இந்தியாவில் இந்தப் பிரச்சினை பரவலான விதத்தில் விவாதிக்கப்பட்டு வந்திருக்கின்றது. 

இந்திய அரசியல் சாசனத்தின் கர்த்தாக்களான அம்பேக்கார் போன்றவர்கள் 44 ஆவது உறுப்புரை தொடர்பாக 'அது விரும்பத்தக்கது"; ஆனால், விரும்பாதவர்கள்  மீது அதனை திணிக்கக் கூடாது" என்ற எச்சரிக்கை குறிப்பையும் வெளியிட்டிருந்தார்கள்.

திருமணம், விவாக ரத்து, வாரிசுரிமை மற்றும் தத்தெடுத்தல்  என்பன தொடர்பாக எல்லா சமூகத்தினருக்கும், எல்லா மதத்தினருக்கும் பொதுவான ஒரு சிவில் சட்டம் இருந்து வர வேண்டும் என்பதே இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்களின் அடிப்படை அபிலாஷை. ஆனால், நடைமுறையில் அதனை அமுல்படுத்துவதில் இந்தியா கடந்த 70 ஆண்டுகளாக பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வந்திருக்கின்றது. இந்தச் சிக்கல் குறித்து தொடக்கத்திலேயே அம்பேத்கார் இப்படிக் குறிப்பிட்டிருந்தார்: 

'இந்திய அரசுக்கு இந்த அதிகாரம் இருந்து வருவதனால், அது உடனடியாக அதனைப் பயன்படுத்திக் கொள்ளும் என்று யாரும் பயப்படத் தேவையில்லை....... முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் அல்லது வேறு எவரேனும் சமூகத்தினர் இதனை விரும்பாவிட்டால்,  ஒரு பைத்தியக்கார   அரசாங்கம் மட்டுமே அந்த நிலையில் அந்த அதிகாரத்தை பயன்படுத்திக் கொள்ள முன்வரும்".

2018 ஆம் ஆண்டில் இந்திய சட்ட ஆணைக்குழு வெளியிட்ட அதன் அறிக்கையில் இது குறித்து பின்வருமாறு குறிப்பிட்டிருந்தது: 

'எல்லோருக்கும் பொதுவான ஒரு சிவில் சட்டம் இந்தியாவை பொறுத்தவரையில் இந்தத் தருணத்தில் தேவையானதாகவோ அல்லது விரும்பத்தக்க ஒரு மாற்றமாகவோ இருந்து வரவில்லை.... இந்தியாவைப் போன்ற பன்முக இயல்புகளைக் கொண்டிருக்கும் ஒரு நாடு, அதன் அனைத்து மக்கள் பிரிவினரதும் தேவைகளுக்கு மதிப்பளிக்கும் புறம்பான சட்டங்களை கொண்டிருப்பது  அவசியமாகும்".

இந்தியாவில் 2019 ஆம் ஆண்டில் இடம்பெற்ற லோக் சபா தேர்தலின் போது பிஜேபி யின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் (இலங்கையில்  போலவே) 'ஒரே நாடு - ஒரே சட்டம்'  என்ற வாக்குறுதி உள்ளடக்கப்பட்டிருந்தது. ஆனால், ஜனநாயகத்திற்கான வெளி எல்லா தரப்புக்களுக்கும் பரவலாக திறந்து வைக்கப்பட்டிருக்கும். இந்தியா போன்ற ஒரு நாட்டில் அதனை (இலங்கையில் போல) அடாவடித்தனமாக அமுல் செய்வது என்பது இன்றைய சூழ்நிலையில் நினைத்துப் பார்க்க  முடியாத ஒரு காரியம்.

(இலங்கையின் ஜம்மியத்துல் உலமா சபைக்கு இணையான) அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் (All India Muslim Personal Law Board) கடுமையான விமர்சனங்களுக்கு மத்தியிலும், இந்தப் பிரச்சினையில் முக்கியமான ஒரு வகிபாகத்தை வகித்து வருகின்றது. இலங்கையில் போல் அன்றி, அந்தச் சபையில் உலமாக்கள் தவிர கல்விமான்கள், அரசியல்வாதிகள், சட்டத்தரணிகள், தொழில்வாண்மையாளர்கள் மற்றும் பெண்கள் ஆகிய தரப்பினரும் உள்ளடக்கப்பட்டிருக்கின்றார்கள்.

இந்தியாவில் அமுல் செய்ய முடியாதிருக்கும்  ஒரு சட்ட ஏற்பாட்டை இலங்கையில் எளிதில் அமுல் செய்ய முடியுமென சுப்பிரமணியம் சுவாமி போன்றவர்கள் நினைக்கிறார்கள் போலும். இந்தச் செயலணியின் தன்னிச்சையான பரிந்துரைகள் சிறுபான்மை சமயக் குழுவினரின் ஒப்புதலை பெறாத விதத்தில் அமுல் செய்யப்பட்டால், அது அபரிமிதமான அதிகாரங்களை கொண்டிருக்கும் நிறைவேற்று ஜனாதிபதி முறைக்கு இலங்கை செலுத்த வேண்டிய ஒரு விலையாகவே இருந்து வரும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அநேகமாக அப்படியொரு  நிலைமை உருவாக மாட்டாது என்றே தோன்றுகிறது. 

இந்தச் செயலணி தொடர்பான தனது நிலைப்பாட்டை ஜனாதிபதி இப்பொழுது பெருமளவுக்கு தளர்த்திக் கொண்டுள்ளார் என்பது இங்கு மிக முக்கியமாக கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய விடயம். கடந்த வெள்ளிக்கிழமை அவருக்கும், அமைச்சர் அலி சப்ரிக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது அவர்களுக்கிடையில் நிகழ்ந்த கருத்துப் பரிமாற்றம் தொடர்பாக ஊடகங்களுக்கு கசியவிடப்பட்டிருக்கும்  செய்திகளின் பிரகாரம் , ஞானசார தேரர் தலைமையிலான செயலணி தொடர்பாக சிறுபான்மை - குறிப்பாக முஸ்லிம் - மக்களுக்கு மத்தியில் ஏற்பட்டிருக்கும் பீதியை பெருமளவுக்கு தணிக்கும் விதத்தில் ஜனாதிபதி பேசியிருக்கின்றார். ஜனாதிபதியுடன் அவருடைய செயலாளர் பி.பி. ஜயசுந்தர மற்றும் ஆலோசகரான மூத்த சிவில் சேவை அதிகாரி லலித் வீரதுங்க ஆகியோர் மட்டுமே இச்சந்திப்பில் பங்கேற்றிருக்கின்றார்கள். அச்சந்தர்ப்பத்தில் அலி சப்ரி முன்வைத்த ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொள்வதற்கு கடுமையாக மறுப்புத் தெரிவித்த ஜனாதிபதி, அவரிடம் இப்படிக் கூறியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன: 

'நான் ஜனாதிபதி செயலணியை நியமனம் செய்தமை தொடர்பாக தவறான புரிதலே உங்களுக்கும், பலருக்கும் ஏற்பட்டுள்ளது. நான் அச்செயலணியை நியமித்தது 'ஒரே நாடு - ஒரே சட்டம்'  என்ற விடயம் தொடர்பான தெளிவை எனக்குப் பெற்றுக் கொள்வதற்காக. அந்தச் செயலணியானது சட்டவாக்கத் துறைக்கு பரிந்துரைகளை செய்யாது. அது தனது அவதானங்களை எனக்கு பரிந்துரைக்கும். அதன் பின்னர், சட்டவாக்கத் துறை விரும்பினால் புதிய அரசியலமைப்பில்  அவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம். ஆகவே, செயலணி சட்டவாக்கத்தின் சுயாதீனத்தில் தலையீடு செய்ய மாட்டாது." 

இவை அனைத்தையும் தொகுத்து நோக்கும் பொழுது, எம்மால் ஒரேயொரு முடிவுக்கே வர முடியும். அதாவது, உள்நாட்டு கள நிலவரங்களை கருத்தில் கொண்டு சில கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் ஜனாதிபதி இருந்து வருகிறார் என்பது தெரிகிறது. அதே வேளையில், அத்தகைய முடிவுகள் எடுத்து வரக் கூடிய பாரதூரமான பின்விளைவுகள் மற்றும் சர்வதேச மட்டத்திலான எதிர்வினைகள் என்பவற்றை கவனத்தில் எடுத்து, ஞானசார தேரர் மற்றும் ரத்தன தேரர் போன்றவர்கள் எடுத்து வர விரும்பும் அதிரடி மாற்றங்களை தள்ளி வைக்க வேண்டிய நிர்ப்பந்தமும் அவருக்கு ஏற்படும். 

எப்படிப் பார்த்தாலும், 2022 ஆம் ஆண்டு இலங்கை அரசியலில் எதிர்பாராத திருப்பங்களும், அணி மாற்றங்களும், பாரிய கொந்தளிப்புக்களும் இடம்பெறக் கூடிய ஒரு ஆண்டாக இருந்து வரும் என்பதனையே இன்றைய போக்குகள் துல்லியமாக எடுத்துக் காட்டுகின்றன.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.