அக்கரைப்பற்றில் நீதவான் ஒருவரின் வீட்டின் ஜன்னலை உடைத்து வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள், நீதவானை தாக்கிவிட்டு அவரின் மனைவியின் 11 பவுண் தாலிக்கொடியை அறுத்து எடுத்துக் கொண்டு தப்பி ஓடிய சம்பவம் இன்று சனிக்கிழமை (18) அதிகாலை 3 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த வீட்டில் நீதவான் மற்றும் மனைவி பிள்ளைகள் உறக்கத்தில் இருந்த அதிகாலை நேரம் வீட்டின் மேல்தட்டு ஐன்னல் கிறில்லை உடைத்து அதன் வழியாக உள்நுழைந்த கொள்ளையன், படுக்கை அறையில் தூக்கத்தில் இருந்த நீதவானின் மனைவியின் தாலியை அறுத்து எடுத்துள்ளான்.

இந்நிலையில் தாலி அறுக்கப்படுவதை சடுதியாக உணர்ந்த மனைவி சத்தம்போடவே கண்விழித்துக்கொண்ட நீதவான், கொள்ளையனை மடக்கிப்பிடிக்க போராடியுள்ளார்.  

ஆயினும் கொள்ளையிட்டவன், நீதவானின் காலில் கம்பி ஒன்றால் தாக்கியதுடன் கையிலும் பலமாக அடித்துள்ளான். இதனால் நீதவான் காலிலும் கையிலும் காயம் ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் சுமார் 10 நிமிடங்கள் வரை இடம்பெற்ற நிலையில் கணவன் தாக்கப்படுவதை உணர்ந்த மனைவி கொள்ளையனோடு சண்டையிட்டு அவரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட சந்தர்ப்பத்தில் தாலியுடன் ஏற்கனவே திறந்து வைத்திருந்த கதவின் ஊடாக தப்பித்து சென்றுள்ளான்.

இந்நிலையில் உடன் விரைந்த அக்கரைப்பற்று பொலிஸார் தகவல்களை உயர் மட்டங்களுக்கு அறியக்கொடுத்த நிலையில், உயர் மட்ட பொலிஸ் அரச அதிகாரிகள் மற்றும் விசேட தடயவியல் பொலிஸார் இணைந்து மோப்ப நாய்களின் உதவியுடன் கொள்ளையுடன் தொடர்புடையோரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதேநேரம் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் கடந்த இரு வெள்ளிக்கிழமைகளில் குறித்த நேரத்தில் இதுபோன்ற இரு சம்பவங்கள் நடைபெற்ற நிலையில் இச்சம்பவம் மூன்றாவதாக நடைபெற்றுள்ளமை மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கனகராசா சரவணன், வி.சுகிர்தகுமார் - தமிழ் மிரர் 





கருத்துரையிடுக

Blogger இயக்குவது.