மாத்தளை மாவட்டம், பலாபத்வல பிரதேசத்தில் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவிற்கு சொந்தமான 20 ஏக்கர் நிலம், ஏக்கருக்கு ரூபா 830 என்ற அடிப்படையில் வர்த்தகர் ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மாத்தளை பிரதேச சபை தவிசாளர் கபில பண்டார ஹந்தெனிய தெரிவித்துள்ளார்.
பிரதேச சபையின் மாதாந்த அமர்வில் வைத்தே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
2013 ஆம் வருடத்தில் சுற்றாடல் வேலைத்திட்டம் ஒன்றை நடாத்துவதற்காக 05 ஏக்கரை கேட்ட போதும் அது வழங்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். பல ஆண்டுகளாக அரச வேலை ஒன்றிற்கு நிலமொன்றை கோரும் போது ஒவ்வொரு சட்டங்களை போடுகின்றார்கள்.
எனினும் அடுத்தவர்களுக்கு ஒரு மாதத்திற்குள் தேவையான ஆவணங்களை தயாரித்து வழங்குகின்றனர். எம்மிடம் வருவது வர்த்தக அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கு மட்டுமாகும். அனைத்தையும் கொழும்பில் செய்துள்ளனர். கடந்த ஆட்சியிலும் இது நடந்துள்ளது. இந்த ஆட்சியிலும் நடக்கிறது.
பாரியளவில் காணி விற்பனை மாபியா ஒன்று இடம்பெறுகிறது. இது மாத்தளை பிரதேசத்தில் மட்டுமல்லாமல் முழு மாவட்டத்திலும் இடம்பெறுகிறது. அப்பாவி மக்கள் 10 பேர்ச்சஸ் காணி கேட்டு சென்றால் நாட்டில் இல்லாத சட்டங்களை கூறுகிறார்கள். எனினும் அரசியல் பலம் மற்றும் பண பலம் உள்ளவர்கள் இந்த சட்டங்கள் இல்லை. எம்மிடம் இருக்கும் பெறுமதியான நிலங்களை வழங்குகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் காமினி கொஸ்தா தெரிவிக்கையில், தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் நில அழிவு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். சில நிலங்களை வாங்க நாம் பலமுறை அழைக்கப்பட்டோம். எனினும் அது நடைபெறவில்லை. தற்போது வேறுமுறைகள் மூலம் காணி வழங்கல் நடைபெறுகின்றது. நாம் இவற்றிற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். இவை நடைபெறுவதற்கு அனுமதிக்க கூடாது என்றார். (Siyane News)
நன்றி - லங்காதீப