ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் ஸ்தாபகத் தலைவரும் முன்னாள் பிரதமருமான எஸ்.டபிள்யு.ஆர்.டீ.பண்டாரநாயக்கவின் 123 ஆவது ஜனன தின நிகழ்வுகள் இன்று (08) காலை கொழும்பு, காலி முகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள எஸ்.டபிள்யு.ஆர்.டீ.பண்டாரநாயக்கவின் உருவச்சிலைக்கு முன்னால் அனுஷ்டிக்கப்பட்டது.

இந்நிகழ்வு காலை 8 மணி முதல் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் ஆரம்பமானது. இதன் போது அவரால் எஸ்.டபிள்யு.ஆர்.டீ.பண்டாரநாயக்கவின் உருவச்சிலைக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

 இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த, பாராளுமன்ற உறுப்பினர்களான சந்திம வீரக்கொடி, குமாரவெல்கம மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான அர்ஜூண ரணதுங்க ஆகியோருடன் ஜீவன் குமாரதுங்க, முன்னாள் மாகாண சபை அமைச்சர்கள், கடுவலை மாநகர மேயர் மற்றும் புதிய லங்கா சுதந்திர கட்சியின் கஹட்டோவிட்ட வட்டார அமைப்பாளர் அல்ஹாஜ் ருஸ்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஆளும் கட்சியின் தலைவர்கள் நிகழ்வை அனுஷ்டிக்காத போதும் இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட ஆளும்கட்சி உறுப்பினர்கள் முன்னாள் ஜனாதிபதி தலைமையிலான நிகழ்வில் கலந்து கொண்டமை முக்கிய அம்சமாக அமைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

நிகழ்வில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க , 'பண்டாரநாயக்கவின் வழிகாட்டலிலிருந்து விலகியுள்ள இன்றைய கட்சி தலைவர்கள் அவரது ஜனன தினத்தைக் கூட அனுஷ்டிக்காமையால் நாம் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தோம்.' என்றார்.

பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம கருத்து வெளியிடுகையில் , 'நாமே உண்மையான சுதந்திர கட்சியினர். தற்போதுள்ளவர்கள் சுதந்திர கட்சியினரா? இல்லையல்லவா?' என்றார்.

இந்நிகழ்வையடுத்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வு முற்பகல் 10.30 மணியளவில் சுதந்திர கட்சி உறுப்பினர்களின் பங்கேற்புடன் வேறாக இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Siyane News, Virakesari)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.