மன்சூர் மொஹமட் 

சுதந்திரத்திற்கு பிற்பட்ட வரலாற்றில் ஒரு போதும் இல்லாத விதத்தில் மூன்று முக்கியமான நெருக்கடிகளுக்குள் சிக்குண்ட நிலையில், கொந்தளிப்புக்களும், பதற்றங்களும் தீவிரமடைந்து வரும் ஒரு பின்புலத்தில் இலங்கை 2022 புத்தாண்டை சந்திக்கின்றது.

'வரலாற்றிலிருந்து பாடங்களை படிக்காதவர்கள், அந்தத் தவறுக்கு கடுமையான ஒரு விலையை செலுத்தியே ஆக வேண்டும்'          என்பது நியதி. பல்வேறு இனங்களையும், மதங்களையும் அரவணைத்துச் செல்லும் ஓர் ஐக்கிய தேசமாக இலங்கையை கட்டியெழுப்புவதற்கெனக் கிடைத்த பெருந்தொகையான வாய்ப்புக்களை ஆட்சியாளர்கள் தவற விட்டதன் பலனை இன்று எல்லோரும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். 

1958 இல் பண்டாரநாயக்க அந்த வாய்ப்பை தவற விட்டார். சிங்கள மக்களின் அமோக ஆதரவுடன் மஹிந்த ராஜபக்ச 2010 இல் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பொழுது, இடதுசாரி வேட்பாளர் சிரிதுங்க ஜயசூரிய அவரைப் பார்த்து 'ஒரு வரலாற்று முக்கியத்துவம் மிக்க வாய்ப்பு உங்களுக்கு கிடைத்திருக்கின்றது. அதனைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்' என்ற வேண்டுகோளை விடுத்திருந்தார். ஆனால், அவர் அதனை காது கொடுத்துக் கேட்கவேயில்லை. 

2010 - 2015 ஆட்சி எந்தத் திசையில் பயணிக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்த்தார்களோ அதற்கு மாறான திசையில் அதனைப் பயணிக்கச் செய்து, முழு நாட்டையும் நெருக்கடிக்குள் தள்ளி விட்டு 2015 இல் அவர் வெளியேறினார்.

இதில் பிரேமதாச மட்டும் ஓரளவுக்கு விதிவிலக்கானவர் என்று சொல்லலாம்.  தனது குறுகிய பதவிக் காலத்தின் போது, அவர் எடுத்த ஒரு சில துணிகரமான முடிவுகள் - தமிழ் மொழிக்கு அரச கருமமொழி அந்தஸ்து, வாகனத் தகடுகளில் சிங்கள 'ஸ்ரீ' எழுத்தை  நீக்கி  '___' ஐ அறிமுகம் செய்து வைத்தமை மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களில் சிறு கட்சிகளுக்கு அனுகூலமளிக்கும் விதத்தில் வெட்டுப் புள்ளியை 5% ஆக குறைத்தமை  போன்ற முடிவுகள் - இன்றைய சூழ்நிலையில் நினைத்துப் பார்க்கக் கூட முடியாதவை. மகா சங்கத்தினருடன் மிக நெருக்கமான உறவுகளை  பராமரித்து வந்த அதே வேளையில், அவரால் வரலாற்று மைல்கற்களாக கருதப்படக் கூடிய அத்தகைய முடிவுகளை மேற்கொள்ள முடிந்தது (அப்பாவின் அந்தத் துணிச்சலில் 10%  கூட மகனிடம் இருந்து வரவில்லை என்பதை புறம்பாக சொல்லத் தேவையில்லை.)

மீண்டும் ஒரு முறை நாட்டை கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பு 2019 இல் கோட்டாபய ராஜபக்சவுக்குக் கிடைத்தது. சிங்கள மக்கள் திரண்டெழுந்து, தமது  மாபெரும் தலைவராக அவரைத் தெரிவு செய்திருந்தார்கள். ஆனால், வரலாற்றுப் புகழ்மிக்க ருவன்வெலி சாய வளாகத்தில்  பதவிப் பிரமாணம் செய்து கொண்ட பொழுது, தான் சிங்கள பௌத்த மக்களின் ஜனாதிபதி என்ற விடயத்தை எவ்வித தயக்கமோ, கூச்சமோ இல்லாத விதத்தில் அவர் சொல்லிக் கொண்டார். 

'ஜனாதிபதி ருவன்வெலிசாயவில் பதவிப் பிரமாணம் செய்யும் பொழுது, தான் சிங்கள மக்களின் ஜனாதிபதி என்று கூறியதன் மூலம் நாட்டில் வாழ்ந்து வரும் பல்வேறு இனங்களையும் சேர்ந்த மக்களுக்கு மத்தியில் வெறுப்பையும், குரோதத்தையும் விதைத்தார். கலகொட அத்தே ஞானசார தேரர் போன்ற ஒருவரை ஒரே நாடு - ஒரே சட்டம் செயலணியின் தலைவராக நியமனம் செய்ததன் மூலம் மீண்டும் ஒரு முறை சமூகங்களுக்கு மத்தியில் அவநம்பிக்கையையும், அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறார்' என்று கடந்த வாரம் ஒரு கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருந்தார் ஜனாதிபதியின் முன்னைய தீவிர ஆதரவாளர்களில் ஒருவரான விஜயதாச ராஜபக்ச.

தென்னாசியாவின் ஏனைய நாடுகளும், அதே போல உலகின் பல நாடுகளும் கொவிட் பெருந்தொற்றையடுத்து பொதுவாக பொருளாதாரச் சரிவு தொடர்பான பிரச்சினைகளை சந்தித்து வருகின்றன. ஆனால், இப்பொழுது இலங்கை ஒரு பொருளாதார நெருக்கடியையும், அரசியல் நெருக்கடியையும், சமூக நெருக்கடியையும் எதிர்கொண்டு வருகின்றது. இந்த நெருக்கடிகள் ஒன்றையொன்று போஷித்து, ஒன்றுக்கொன்று பக்கபலமாக இருந்து வருபவை. ஆகவே, இவற்றை தீர்த்து வைப்பதற்கு ஒற்றைப் படையான தீர்வுகள் எவையும் இருந்து வரவில்லை. 

இப்பொழுது அரங்கேறி வரும் மற்றொரு கூத்து அரசாங்கமே எதிர்க்கட்சியாக செயற்பட்டு வரும் வினோதம். மக்கள் உண்மையிலேயே பொருளாதாரப் பிரச்சினைகளையும், விலைவாசி உயர்வு தொடர்பான நெருக்கடிகளையும் எதிர்கொண்டு வருகின்றார்கள் என்பதனை அமைச்சர்களே ஏற்றுக் கொள்கிறார்கள். 'இந்த அரசாங்கம் தோல்வி கண்டுள்ளது' என்று ராஜாங்க அமைச்சர்கள்  சொல்கிறார்கள். அமைச்சரவை முடிவுகளுக்கு எதிராக அமைச்சர்களே வழக்குத் தொடுத்திருக்கின்றார்கள். எதையுமே புரிந்து கொள்ள முடியாத நிலையில் தலை மயிரைப் பிய்த்துக் கொண்டிருக்கின்றார்கள் மக்கள்.

அடுத்த முக்கியமான விடயம் 2022 இல் நிச்சயமாக ஓர் ஆட்சி மாற்றம் ஏற்பட முடியும் என்ற விதத்தில் பரவலாக நிலவி வரும் எதிர்பார்ப்புக்கள். குறிப்பாக, சிறுபான்மை மக்களுக்கு மத்தியில் இந்த எதிர்பார்ப்பு உச்ச கட்டத்தில் இருந்து வருவதுடன், அது அவர்களுக்கு ஒரு விதமான புளகாங்கித  உணர்வையும் ஏற்படுத்தியிருக்கின்றது. 

ஆனால், வெகு விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்பட முடியும் என்ற எதிர்பார்ப்பு ஒரு \Wishful Thinking| மட்டும் தான். அதாவது, ஒரு காரியம் நடக்க வேண்டுமென உள்ளூர எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்கள், யதார்த்தத்தில் அது நடந்து விட்டதைப் போல நினைத்து சந்தோசப்படும் நிலையையே \Wishful Thinking| என்று சொல்கிறார்கள்.

ராஜபக்சக்களின் வரலாற்றையும், கடுமையான நெருக்கடிகளை அவர்கள் கையாளும் விதத்தையும் உன்னிப்பாக நோக்கும் பொழுது, இந்த ஆண்டில் அப்படியான ஓர் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு அறவே வாய்ப்பில்லை என்றே கூற வேண்டும். ஆட்சியை யாரோ ஒருவரிடம் ஒப்படைத்து விட்டுச் செல்லும் அளவுக்கு அரசியல் நுணுக்கம் அறியாதவர்கள் அல்ல அவர்கள். அரசியல் யாப்பின் பிரகாரம் கோட்டாபய ராஜபக்ச 2024 நவம்பர் மாதம் வரையில் ஜனாதிபதி பதவியை வகிக்க முடியும். அதே போல, மஹிந்த ராஜபக்ச மற்றும் அவருடைய அமைச்சரவை 2025 ஆகஸ்ட் மாதம்          வரையில் செயற்பட முடியும். அதற்கான பணிப்பாணை அவர்களிடம் இருக்கின்றது.

2022 இல் நிச்சயமாக ஓர் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று சொல்பவர்கள் முன்வைக்கும் ஒரு வாதம் 'அரசாங்கத்தை எல்லோரும் எதிர்க்கத்  தொடங்கியிருக்கின்றார்கள். கோட்டாபயவை தீவிரமாக ஆதரித்த பிக்குகளே இப்பொழுது கடுமையாக அவரை விமர்சித்து வருகிறார்கள்' என்பது. மேலோட்டமாக பார்த்தால் இது செல்லுபடியாகும் ஒரு வாதம் போல் தான் தெரிகிறது.

முதலில், இந்த அரசாங்கத்தை எதிர்த்து வரும் முக்கிய தரப்புக்கள் யார் என்று பார்ப்போம்:

- பிரதான எதிர்க்கட்சியான SJB யின் அரசாங்க எதிர்ப்பு முழுக்க முழுக்க ஒரு சந்தர்ப்பவாத எதிர்ப்பாகவே உள்ளது. அதாவது, அரசாங்க கட்சி - எதிர்க்கட்சி என்ற விதத்திலான மாமூல் எதிர்ப்பு. சஜித் பிரமேதாச அரசாங்கத்தின் பலவீனங்களையும், தோல்விகளையும் பட்டியலிட்டுக் கொண்டே போகிறார். ஆனால், இன்றைய நெருக்கடியை தீர்த்து வைப்பதற்கு தன்னிடம் இருக்கும் மாற்று வழிகள் எவை என்பது குறித்து அவருக்கே தெளிவில்லை. பிடி கொடுக்காத பூடகமான மொழிப் பாவனை அவருடைய தனித் திறன்.

ஒரு விதத்தில் இன்றைய நெருக்கடியின் வேர்கள் 1977 இல் ஜே ஆர் ஜயவர்தன அதிரடியாக பொருளாதாரத்தை திறந்து விட்ட நிகழ்ச்சிநிரல் வரையில் பின்னோக்கிச் செல்பவை. தென்னாசியாவில் முதன் முதலாக பொருளாதாரத்தை வெளியுலகிற்கு திறந்து விட்ட நாடு இலங்கை. அதற்கு 17 ஆண்டுகளுக்குப் பின்னரேயே 1991 இல் இந்தியா திறந்த பொருளாதாரக் கொள்கையை அமுல் செய்தது. 

1977 க்குப் பின்னர் நிகழ்ந்த இந்த முக்கியமான மாற்றத்தையடுத்து கடந்த 40 ஆண்டு காலமாக கிட்டத்தட்ட இரண்டு தலைமுறையினர் திறந்த பொருளாதார கொள்கை அமுல் செய்யப்பட்ட ஒரு சூழ்நிலையில் வாழ்ந்து வந்திருக்கின்றார்கள். அந்தக் கட்டமைப்புக்கு தம்மை பரிச்சயப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். இலங்கையில் தீவிரமாக அதிகரித்து வரும் மிகை நுகர்வுக் கலாசாரத்தில் முற்று முழுதாக தம்மை அமிழ்த்திக் கொண்டிருக்கின்றார்கள். 

வளைகுடா நாடுகளிலிருந்து எரிபொருள், ஜப்பானிலிருந்து பாவித்த வாகனங்கள், நியூசிலாந்திலிருந்து பால் மா, இந்தியாவிலிருந்து முச்சக்கர வண்டிகள், பருப்பு மற்றும் இன்னபிற சாமான்கள், பாகிஸ்தானிலிருந்து வெங்காயம் என்ற ஒரு நடைமுறைக்கு 40 ஆண்டு காலமாக பழகிப் போயிருக்கிறது இலங்கைச் சமூகம். அதற்கு வெளியில் நின்று அவர்களால் சிந்தித்துப் பார்க்கவே முடியாது. தேசிய பொருளாதாரமொன்றை வலுவாகக் கட்டியெழுப்பி, இந்த நச்சுச் சூழலிருந்து படிப்படியாக நாங்கள் வெளியேற வேண்டுமென்ற கோரிக்கையை 1980 களுக்குப் பிறகு எந்தவொரு தலைவரும் முன்வைத்திருக்கவில்லை. 

ஆடம்பரப் பொருட்களையும் உள்ளடக்கிய விதத்தில் கட்டற்ற          நுகர் பொருள் இறக்குமதிகள், 24 மணிநேர மின்சாரம் மற்றும்          ஏனைய சௌகரியங்கள் என்பவற்றை வாழ்க்கையின் ஆதார அம்சங்களாக ஆக்கிக் கொண்டிருக்கும் ஒரு ஸ்மார்ட் போன் தலைமுறையினருக்கு தான் ஒரு  சுயசார்பு பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டுமென்ற வேண்டுகோளை இப்பொழுது சந்தைப்படுத்த வேண்டியிருக்கின்றது. அது ஒரு லேசான காரியமல்ல. 

விமல் வீரவங்சவை உள்ளிட்ட சிங்கள தேசியவாதிகள் எதிர்கொண்டிருக்கும் திரிசங்கு நிலை இந்தப் பின்புலத்திலிருந்தே தோன்றுகின்றது. அவர்கள் சிங்கள தேசியவாதம் என்ற          பெருமித உணர்வை புதிய தலைமுறையினருக்கு ஊட்டும்              அதே வேளையில், நுகர்வு கலாசாரத்திலிருந்தும், மித மிஞ்சிய அளவிலான இறக்குமதிகளில் தங்கியிருக்கும் நிலையிலிருந்தும் அவர்களை வெளியில் கொண்டு வர வேண்டிய சவாலை எதிர்கொண்டிருக்கின்றார்கள். 

இங்குள்ள முரண்பாடு இது தான் - ஒரு புறத்தில் கட்டற்ற வர்த்தகத்தை ஊக்குவிக்கும் நவ லிபரல்வாத பொருளாதாரத்திற்கு முழுமையான ஆதரவு. மறுபுறம், தேசிய பொருளாதாரத்தில் முஸ்லிம் மற்றும் தமிழ் வணிகர்களின் வியாபாரங்களை முடக்க வேண்டுமென்ற மறைமுக அஜென்டா. துறவறத்தை  உச்ச மட்டத்தில் போதிக்கும் சமயம் 'ஆசைகளை ஒழி' என்கிறது. மறுபுறத்தில், தம்மை துறவிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் மூன்றரைக் கோடி ரூபா பெறுமதியான சொகுசு வாகனங்களில் பவனி வரும் எதிர்முரண்.

ஜேவிபி யினாலும் கூட பாரியளவில் மக்கள் ஆதரவை அணிதிரட்ட முடியாதிருப்பதற்கான இடையூறு இதுவாகவே உள்ளது. நாட்டு மக்களில் 80% க்கு மேற்பட்டவர்கள் நவ லிபரல்வாத பொருளாதாரத்திற்கு தம்மை ஒப்புக் கொடுத்திருக்கின்றார்கள். அந்தப் பின்னணியில் தான் இறக்குமதிகள் தொடர்பாக வரையறைகள் அறிமுகம் செய்து வைக்கப்படும் பொழுது, சந்தையில் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் பொழுது அரசாங்கம் இந்த அளவுக்கு எதிர்ப்பலைகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது.

ஆகவே, SLFP/UNP/SJB/SLPP ஆகிய கட்சிகள் அனைத்தும் முக்கிய ஆதரவுத் தரப்புக்களாக  இருந்து வந்திருக்கும் இந்தப் பொருளாதார முறை எடுத்து வந்திருக்கும் திரிபு நிலைகளை விமர்சிப்பதற்கோ, குறை கூறுவதற்கோ இரு பிரதான அணிகளுக்கும் எந்த விதமான தார்மீக உரிமையும் கிடையாது.

- ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அடுத்த ஆண்டில் சஜித் பிரேமதாசவின் கையில் இலங்கையை ஒப்படைத்தாலும் கூட, அவரால் பெரிதாக எதனையும் செய்ய முடியாது. நிலைமை இருப்பதிலும் பார்க்க மோசமடையக் கூடிய வாய்ப்பும் உள்ளது. ஏனென்றால், தற்போது அரசாங்க கட்சிக்குள் இருக்கும் காரணத்தினால் ஓரளவுக்கு அடக்கி வாசித்து கொண்டிருக்கும் ஒரு சில தீவிரவாத, இனவாத  / மதவாத கோஷ்டிகள் எதிர்க்கட்சித் தரப்புக்கு போகும் போது தமது செயற்பாடுகளை மேலும் துரிதப்படுத்த முடியும். அப்பொழுது பிக்குகளின் உண்ணாவிரதங்கள், போராட்டங்கள் போன்றவையும் புதிதாக முளைக்க  முடியும். எந்த விதத்திலும் சஜித் பிரேமதாசவால் அத்தகைய நிலைமைகளை கையாள முடியாது. அடாவடித்தனம் செய்யும் பிக்குகளை கையாளும் விடயத்தில் அவர் கொண்டிருக்கும் பலவீனம் நாடறிந்தது.

- இரண்டாவதாக, அரசாங்கத்தை கடுமையாக எதிர்த்து வரும் மற்றொரு தரப்பு ஜேவிபி - முன்னணி சோசலிச கட்சி மற்றும் அவற்றுடன் சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்கள். அவர்களுடைய எதிர்ப்பு ஒரு விதத்தில் யதார்த்தமான நாட்டு நிலைமையை கருத்தில் கொண்ட ஓர் எதிர்ப்பாக இருந்து வந்தாலும் கூட, உடனடி எதிர்காலத்தில் மக்களுக்கு மத்தியில் ஜேவிபி போன்ற ஒரு கட்சிக்கு பாரியளவிலான ஒரு வாக்கு வங்கி தோன்றும் என்று சொல்ல முடியாது. ஆகக் கூடினால் 3 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக தமது வாக்கு வங்கியை அடுத்த ஆண்டுகளில் அவர்களால் அதிகரித்துக் கொள்ள முடியும். அதற்கு அப்பால் போக முடியாது. 

அநுர குமார திசாநாயக்க அபிமானிகளில் பெரும்பாலானவர்கள் SJB ஆதரவாளர்கள். ஜேவிபி யின் தீவிர ராஜபக்ச எதிர்ப்பை தமக்குச் சாதகமான விதத்தில் பயன்படுத்திக் கொள்வதற்கு எதிர்பார்ப்பவர்கள்.

- அரசாங்கத்தை எதிர்த்து வரும் ஒரு மூன்றாவது தரப்பு, அரசாங்கத்தின் குறிப்பாக, கோட்டாபய ராஜபக்சவின் தீவிர ஆதரவாளர்களை - சிறுபான்மை சமூகங்களை புறமொதுக்க வேண்டும் என்ற கருத்தியலின் ஆதரவாளர்களை - பிரதிநிதித்துவம் செய்கின்றது என்பது அடுத்த சுவாரஸ்யம். இவர்களில் சிங்கள தேசியவாதிகள், அதே போல இனவாத நிலைப்பாட்டில் செயற்பட்டு வரும் முதன்மையான ஒரு சில பிக்குகள் மற்றும் சில பௌத்த அமைப்புக்கள் ஆகிய தரப்புக்கள் உள்ளடக்கம். இவர்கள் அரசாங்கத்திற்கு தெரிவித்து வரும் எதிர்ப்பை பலர் பிழையாக புரிந்து கொண்டிருக்கின்றார்கள். அது ஒரு விதத்தில் அவர்களுக்கிடையில் இடம்பெற்று வருவது ஒரு 'பங்கு பிரித்துக் கொள்ளும் சண்டை;'  அதற்கப்பால் எதுவுமில்லை.  தங்களுக்குச் சேர வேண்டிய பங்கு கிடைத்ததும் மீண்டும் அவர்கள் கோட்டாபயவுடன் சேர்ந்து கொள்வார்கள். 

- இதற்கான நல்ல உதாரணம் விமல் வீரவங்ச, கம்மன்பில வாசுதேவ கூட்டு. அவர்களை பொறுத்தவரையில் அரசியலில் வேறு போக்கிடமில்லை. ராஜபக்ச அரசாங்கத்திற்குள் இருந்து தான் அவர்களுடைய எல்லா பிரச்சினைகளையும் தீர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கான நகர்வுகளையே இப்பொழுது அம்மூவரும் முன்னெடுத்து வருகின்றார்கள். எந்தவொரு கட்டத்திலும் அரசாங்கத்திலிருந்து அவர்கள் வெளியேறுவார்கள் என்று கருத முடியாது. ஏனெனில், வீரவங்ச, கம்மன்பில போன்றவர்கள் இப்பொழுது தமது ஐம்பதுக்களின் ஆரம்ப வருடங்களில் இருப்பவர்கள். அவர்களுக்கு அரசியலில் ஒரு நீண்ட பயணம் இருக்கிறது. அதனை குலைத்துக் கொள்ள அவர்கள் விரும்ப மாட்டார்கள். 

ஆகவே, பலரும் நினைத்துக் கொண்டிருப்பதை போல அரசாங்கத்தை 2022 இல் வீட்டுக்கு அனுப்புவது சாத்தியமில்லை என்றே தெரிகிறது. அப்படி ஒரு கட்டம் வந்தால், அதனைக் கையாள்வது  எப்படி என்பது குறித்தும் அவர்கள் இப்பொழுதே வியூகங்களை வகுத்துக் கொண்டிருப்பார்கள். தெரண, ஹிரு போன்ற காட்சி ஊடகங்களும், சிங்கள மக்களால் பரவலான விதத்தில் வாசிக்கப்பட்டு வரும் 'திவயின', 'அருண' மற்றும் 'மவ்பிம' போன்ற நாளிதழ்களும் இப்பொழுது ஓரளவுக்கு அரசாங்க எதிர்ப்புச் செய்திகளை மக்களுக்கு வழங்கினாலும் கூட, அது ஒரு சந்தைப் போட்டி  தந்திரமாக           மட்டுமே இருக்கின்றது. ஆனால், அந்த ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்களான பெரு முதலாளிகளின் வணிக நலன்கள்           ராஜபக்ச அரசாங்கத்துடன் பின்னிப் பிணைந்திருப்பவை.          ஏற்கனவே அரசாங்கத்திலிருந்து பலவிதமான அனுசரணைகளையும், சலுகைகளையும் அனுபவித்து வரும் கம்பனிகள் இவை. அரசாங்கத்திற்கு பெரும் நெருக்கடி என்ற ஒரு நிலை வரும் பொழுது, நிச்சயமாக அவர்கள் தமது எஜமானர்களுக்கு பக்கபலமாக  இருந்து வருவார்கள் என்பதில் துளியும் சந்தேகமில்லை. அதற்கென ஊடக நெறிமுறைகளை எந்த அளவுக்கு தரம் தாழ்த்த முடியுமோ அந்த அளவுக்கு தரம் தாழ்த்தவும் தயங்க மாட்டார்கள். 

ஆக மகா சங்கத்தினர், இராணுவம், ஊடகங்கள் மற்றும் சிங்கள பெரு வணிகர்களின் குழுமம் ஆகிய நான்கு அரண்களும் ராஜபக்ச அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் பக்கபலமாக இருந்து வரும்.           வீதி ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வேலை நிறுத்தங்கள் போன்ற எதிர்ப்புச் செயற்பாடுகள் 2022 இல் சகித்துக் கொள்ளப்பட மாட்டாது என்பதற்கான அடையாளங்கள் இப்பொழுதே தென்படத் தொடங்கியிருக்கின்றன. 'இலங்கைக்கு ஒரு இராணுவ ஆட்சி தேவை' என்ற விதத்தில் அண்மையில் ஞானசார தேரர் முன்வைத்த கோஷம், கள நிலவரம் தொடர்பான ஓர் ஆழமான அலசலின் பின்னர் முக்கியமான  ஒரு சிறு சபையில் மேற்கொள்ளப்பட்டிருக்கக் கூடிய  ஒரு முடிவின் பிரதிபலிப்பு என்றே எண்ணத் தோன்றுகின்றது.

எப்படி பார்த்தாலும், கடந்த இரண்டு வருட காலத்தின் போது           ராஜபக்ச அரசாங்கம் மிகவும் ஜாக்கிரதையான விதத்தில் மறைத்துக் கொண்டிருந்த அதன் தீவிர வலதுசாரி, இராணுவவாத முகத்தை இந்தப் புதிய ஆண்டில் நிச்சயமாக வெளியில் காட்ட முடியும். இலங்கையின் சிவில் சமூகம், தொழிற்சங்கங்கள் மற்றும் ஜனநாயக சக்திகள் என்பனவும், சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கென செயற்பட்டு வருபவர்களும் இந்த ஆண்டில் எதிர்கொள்ளப் போகும் மிகப் பெரிய சவாலாக இதுவே இருந்து வரும். 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.