கடன் மறுசீரமைப்பு என்பது நாட்டை வங்குரோத்துக்கு உள்ளாக்கும் நிலை அல்ல என மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் சீனாவிடம் இருந்து புதிய கடன் ஒன்றை பெற்றுக்கொள்ள கூடிய நிலைமை இருப்பதாகவும் அவர் கூறினார்.

இதுதொடர்பில் மதிப்பீடுகளை மேற்கொள்ள வேண்டும். அதேபோன்று இதுதொடர்பிலான விடயங்களை கண்டறிய வேண்டும் என்று தெரிவித்த அவர் ,இந்தியாவுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக இந்தியாவிடமிருந்து பொருட்களை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.

பொதுவாக பெரும்பாலான நாடுகள் இவ்வாறான நடைமுறையை கையாள்வதாகவும் மத்திய வங்கி ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஆளுநர் மேலும் தெரிவிக்கையில், கடனை முகாமைத்துவம் செய்வதற்கு பல்வேறு வழிகளில் கவனம் செலுத்தப்பட்டிருப்பதுடன் பெறப்பட்ட கடனை செலுத்துவதற்கான முறைக்கு பல்வேறு மூலோபாயங்கள் பயன்படுத்தப்படுவதாகும் அவர் கூறினார்.

2022 ஆம் ஆண்டில் இலங்கை பொருளாதாரம் எதிர்க்கொண்டுள்ள குறுகிய காலம் மற்றும் நீண்ட கால சவால்களுக்கு தீர்வென்ன என்பது குறித்து தெளிவுப்படுத்துவதற்காக அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (12) மத்திய வங்கி ஆளுநர் தலைமையில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது.

கடன் மறுசீரமைப்பு என்பது தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கையில் 2014 ஆம் ஆண்டில் தாம் மத்திய வங்கி ஆளுநர் பதவிவில் இருந்து வெளியேறும் பொழுது சர்வதேச இறையாண்மை பத்திரங்கள் என்ற ரீதியில் 5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இருப்பில் இருந்தது. அப்பொழுது மொத்த உற்பத்தி 79 பில்லியன் டொலர்களாக இருந்ததாகவும் அவர் கூறினார்.

இருப்பினும், அடுத்து வந்த 5 வருடங்களில் இலங்கை சர்வதேச இறையாண்மை பத்திர சந்தையில் பாரிய அளவில் கடனை பெற்றுள்ளது. தேசிய உற்பத்தி 84 பில்லியன் அமெரிக்க டொலர்களாக மாத்திரம் இருந்தது. இதற்கு காரணம் அப்பொழுது இருந்த நிதி கட்டமைப்பு சீர்குழைந்தமேயே ஆகும் என்றும் அவர் கூறினார்.

தற்பொழுது நாம் படிப்படியாக இந்த நிலைமையில் இருந்து மீள்வதற்கு செயற்படுகின்றோம். இந்த பிணைமுறியை ஏனைய நிதி விடயங்களில் மாற்றி அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். இதன் மூலம் கடனுக்காக செலுத்தப்பட வேண்டிய தவணை வட்டியை குறைப்பதற்கு முடிந்துள்ளது என்று தெரிவித்த அவர் தாம் தற்பொழுது 2 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியிலான சர்வதேச இறையாண்மை பத்திரங்களை செலுத்தி உள்ளோம். இதேபோன்று நாம் ஏனைய நாடுகளுடன் வட்டி வீதத்தில் குறைந்த கடன்களை பெற்றுக்கொள்வதில் பேச்சு வார்த்தைகளை நடத்தி வருகின்றோம்.இதன் மூலம் சர்வதேச இறையாண்மை பத்திர கொடுப்பனவை கொடுக்கக்கூடிய ஆற்றலை மேம்படுத்தி கொள்ள முடியும்.

இவ்வாறு அமைந்தால் பொருளாதாரத்தை ஓரளவுக்கு முகாமைத்துவம் செய்ய முடியும். நாட்டு மக்களுக்காக கடன் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படுகின்றது. இருப்பினும் முதலீட்டாளர்களுக்கு கடன் வழங்குவதன் மூலம் சுமையை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. முதலீட்டுக்களுக்கு அழுத்தம் மேற்படாத வகையில் கடன் மறுசீரமைப்பு மூலம் குறுகிய கால ரீதியில் போன்று நீண்டகாலத்திற்கு நாடு பயனடைய முடியும் என்றும் மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்தார்.

தற்பொழுது இலங்கை செலுத்த வேண்டிய கடன் தொகையை செலுத்துவதில் சில சிரமங்கள் உண்டு. இருப்பினும் இதனை திருப்பி செலுத்தக்கூடிய ஆற்றல் இலங்கைக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

-அரசாங்க தகவல் திணைக்களம்-

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.