எதிர்வரும் காலங்களில் நாட்டில் 24 மணிநேர மின்வெட்டு ஏற்படக் கூடும் என்று இலங்கை மின்சார சபை ஊழியர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எதிர்வரும் நாட்களில் மின் தட்டுப்பாடு காரணமாக நாட்டின் செயற்பாடுகள் ஸ்தம்பிக்கக் கூடும் என்று, சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்தார். 

மின்சாரத் துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வுகளை வழங்கத் தவறியதன் விளைவாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை நாடு கடும் வரட்சியை எதிர்கொள்வதை இலங்கை மின்சார சபை அறிந்துள்ளதாகத் தெரிவித்த அவர், எவ்வாறாயினும், வரட்சிக்கு முகம் கொடுக்க இலங்கை மின்சார சபை தயாராக இல்லை எனவும் சுட்டிக்காட்டினார்.

கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு மழை வீழ்ச்சி குறைவாக காணப்பட்டதாகத் தெரிவித்த அவர், நீர் மின் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருவதாகவும் கூறினார்.

நாட்டில் அதிக மழை பெய்து இரண்டு வாரங்களுக்கும் குறைவான காலமே கடந்துள்ள போதிலும், தற்போது நீர்த்தேக்கங்களில் சேறு சேர்வதாகவும் நீர் சேரவில்லை என்றும் குறிப்பிட்டார்.

மின்வெட்டு ஏற்பட்டால் மின்சாரத்தை மீட்டெடுக்க போதுமான மின் நிலையங்கள் மின்சார சபையிடம் இல்லை என்றும், இது ஒரு மோசமான சூழ்நிலை என்றும் அவர் கூறினார்.

தற்போது அமுல்படுத்தப்படும் மின்வெட்டு தொடர்பில் அதிகாரிகள் முன்னுக்குப்பின் முரணான கருத்துக்களை வெளியிட்டு வருவதாகத் தெரிவித்த அவர், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி மின்வெட்டு இடம்பெறாது என அறிவித்த விடயத்தையும் சுட்டிக்காட்டினார்.

தமிழ் மிரர் 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.