( மினுவாங்கொடை நிருபர் )

   ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முகவரி தொலைந்து விட்டது. அது இனிமேல் அழிந்து ஒழிந்துபோய் விட்டது என இன்று சிலர் மனப்பால் குடித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அதன் முகவரி இன்னும் தொலையவில்லை. அதே முகவரியில் புதுப் பொலிவுடன் அதன் எதிர்காலத் திட்டங்களை பாரியளவில் முன்னெடுத்துச் செல்லும் என்பதை, கொழும்பு வாழ் மக்களுக்கு ஞாபகமூட்ட விரும்புகிறேன் என, முன்னாள் அமைச்சரும் ஸ்ரீல.சு.க. மத்திய கொழும்பு அமைப்பாளருமான பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.

   ஸ்ரீல.சு.க. மத்திய கொழும்பு கிளைக் காரியாலயம், நேற்று (10) மாலை கொழும்பு மருதானையில் திறந்து வைக்கப்பட்டது.

   முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபா ஆகியோர் இணைந்து இப்புதிய காரியாலயத்தைத் திறந்து வைத்தனர்.

   அமைச்சர்களான நிமல் சிறிபால டி. சில்வா, மஹிந்த அமரவீர, துமிந்த திசாநாயக்க, இராஜாங்க அமைச்சர்களான தயாசிறி ஜயசேகர, லசந்த அழகியவன்ன உள்ளிட்ட கொழும்பு மாநகர சபையின் ஸ்ரீல.சு.க. உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்ட இச்சிறப்பு நிகழ்வில், பைஸர் முஸ்தபா தொடர்ந்தும் உரையாற்றும்போது,

   இன்று மக்கள் சொல்லொன்னா வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்றனர். குறிப்பாக, குடிசைகளில் உள்ள கொழும்பு வாழ் மக்கள், பாரிய வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்குள் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலமையை மாற்றியமைக்கவே ஸ்ரீல.சு.க. களத்தில் இறங்கியுள்ளது.

   எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீல.சு.க. நாடளாவிய ரீதியில்  பாரிய வெற்றியைப் பெறும். கொழும்பு மாநகர சபையையும் கைப்பற்றி, மேயருக்கான இருப்பிடத்தையும் தனதாக்கிக் கொள்ளும்.

   இதற்காக, நாம் தற்போதிருந்தே எமது வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகிறோம்.

   எனவே, நாம் அனைவரும் தற்போதிருந்தே ஆயத்தமாக வேண்டும். ஸ்ரீல.சு.க. எனும் கட்சியின் நிழலில் ஒன்றுபட்டு கை கோர்த்து அணி திரள வேண்டும் என்றார்.

( ஐ. ஏ. காதிர் கான் )
கருத்துரையிடுக

Blogger இயக்குவது.