விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் சட்ட மூலத்தை உடனடியாக பாராளுமன்றத்தில் கொண்டு வர வேண்டும் 

சொற்ப இழப்பீடுகளையும் வழங்க முடியாது.  விவசாயிகளை ஏமாற்றவும் முடியாது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பொலன்னறுவையில் தெரிவிப்பு.

உரத்தை தடை செய்து விவசாயிகளை பேரழிவில் ஆழ்த்திய அரசாங்கம்,குறித்த  விவசாயிகள் சிரமப்பட்டு நெற்செய்கை மேற்கொண்டு அறுவடை செய்ய தயாராகும் போது,சீனா மற்றும் இந்தியாவிலிருந்து அரிசியை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

விவசாயத்தின் எதிர்காலம் குறித்த ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைநோக்கு, கொள்கை மற்றும் வேலைத்திட்டம் ஆகியவை  உள்ளடங்கும் முகமாக "ஐக்கிய கமத்தொழிலாளர் பிரகடணம்” நாட்டிற்கு கையளிக்கும் நிகழ்வு இன்று (29) பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்திற்கு முன்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இடம் பெற்றது.இந் நிகழ்வில் பங்கேற்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கற்பனை ரீதியாக உரத்தை தடை செய்து இந்நாட்டின் விளை நிலங்களை தரிசு நிலங்களாக மாற்றும் சதித்திட்டத்தை கையில் எடுத்துள்ள அரசாங்கம், தனது கூட்டாளிகளுக்கும், தனது எடுபிடிகளுக்கும் கோடிக்கணக்கில் சம்பாதிக்க வாய்ப்பளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

தானிய களஞ்சிய தளமாக இருந்த இலங்கைக்கு சீனா மற்றும் இந்தியாவிடமிருந்து அரிசி!

பொலன்னறுவை உட்பட ரஜரட்ட பகுதிகளை மையமாக கொண்டே தானிய களஞ்சிய தளமாக இலங்கை உருவானது என தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், அப்படியான வரலாற்று சிறப்புமிக்க பிரதேச விவசாய மக்களுக்கு சீனா மற்றும் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசியை ஊட்டும் அளவிற்கு தேசப்பற்றுமிக்க அரசாங்கம் கீழ்தரமான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

2010 ஆம் ஆண்டு ஆகும் போது அரிசி உற்பத்தியில் தன்னிறைவு அடைந்திருந்த நம் நாட்டை தற்போது சீன அரிசிகளினால் நிரப்பும் நிலைக்கு இந்த அரசாங்கம் தள்ளியுள்ளது என்று கூறிய எதிர்க்கட்சி தலைவர், 'துர்ப்பாக்கிய நோக்கு' அமுலுக்கு வந்ததும் முழு நாட்டிலும் காண கிடைப்பது பஞ்சத்திற்கான அறிகுறிகளாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 சிறிய தொகை நட்டஈடு போதாது. நட்டத்திற்கு ஏற்ற நட்டஈடு வழங்கு!

இந்த சந்தர்ப்பத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்காக உடனடியாக நட்டஈடு வழங்க வேண்டும் என்பதோடு அதற்கான பிரேரணைகளை அரசாங்கம் உடனடியாக பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்குவதற்கு தேவையான அனைத்து ஒதுக்கீடுகளுக்கும் பாராளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தி நிபந்தனையின்றி ஆதரவு வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

குறித்த நட்டஈட்டு சிறியளவிலான தொகை அன்றி ஏற்பட்ட பாதிப்புகளுக்கு ஏற்ற வகையில் உரிய நட்டஈட்டு தொகையை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

விளை நிலங்களை கிராமிய அபிவிருத்தியின் கேந்திர நிலையமாக மாற்றுவதோடு விவசாயிகளை பலப்படுத்தி  அவர்களது வாழ்க்கை தரத்தை கட்டியெழுப்புவதற்கான பொறுப்பை  ஐக்கிய மக்கள் சக்தி பொறுப்பேற்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது ஒரு சிலர் அமைச்சு பதவி மற்றும் இராஜாங்க அமைச்சு பதவிகளை பகிர்ந்து கொள்வதற்கான ஒப்பந்தங்களை கைச்சாத்திட்டு புதிய அரசாங்கமொன்றை உருவாக்க முனைவதாக தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், ஐக்கிய மக்கள் சக்தி சந்தர்ப்பவாத முறைமையை முற்றாக மாற்றி அமைப்பதாகவும் குறிப்பிட்டார்.

ஐக்கிய கமத்தொழில் கொள்கை பிரகடணத்தை  நாள் மற்றும் கால படிமுறைமையின் பிரகாரம் நடைமுறைப்படுத்தும் பொறுப்பு தனக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர்,விவசாயிகளின் வாழ்க்கையுடன் விளையாடும் யுகத்திற்கு முற்றிப்புள்ளி வைப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.









கருத்துரையிடுக

Blogger இயக்குவது.