கம்பஹா மாவட்டத்தில் இடம்பெறும் திருமண நிகழ்வு மற்றும் இசைக் கச்சேரி நிகழ்வுகளுக்கு கலந்துகொள்பவர்களுக்கு பூரண கொவிட் தடுப்பூசி அட்டை கட்டயாப்படுத்த கம்பஹா மாவட்ட கொவிட் தடுப்பு குழு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

மினுவங்கொட கொவிட் தடுப்பு குழுவின் ஒன்றுகூடல் நேற்று (27) மினுவங்கொட பிரதேச செயலாளர் காரியலயத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டில் கொவிட் தொற்று மீண்டும் தீவிரமாக பரவ ஆரம்பித்திருக்கின்றது. புதிதாக இனம் காணப்பட்டிருக்கும் தொற்றாளர்களில் அதிகமான தொற்றாளர்கள் கம்பஹா மாவட்டத்தில் இருந்தே கண்டறியப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தெரிவித்திருக்கின்றது. அதனால் இது தொடர்பாக கம்பஹா மாவட்ட கொவிட் தடுப்பு குழுவில் கலந்துரையாடப்பட்டு பல தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

குறிப்பாக கம்பஹா மாவட்டத்தில் இடம்பெறும் திருமண நிகழ்வு மற்றும் இசைக் கச்சேரி நிகழ்வுகளுக்கு கலந்துகொள்பவர்களுக்கு பூரண கொவிட் தடுப்பூசி அட்டை கட்டயாப்படுத்த தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.

கொவிட் தடுப்பூசியின் 3 டோஸ்களையும் பெற்றுக் கொண்டவர்களே பூரண கொவிட் தடுப்பூசி பெற்றவர்களாக கருதப்படுகின்றது. இதனை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக சுகாதார பிரிவு மற்றும் பாதுகாப்பு பிரிவுகளுக்கு ஆலாேசனை வழங்கி இருக்கின்றோம்.

ஏனெனில் கொவிட் தொற்று மீண்டும் தீவிரமாக பரவி நாடு மூடப்படும் நிலை ஏற்பட்டால், பாரியதொரு பிரச்சினைக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்படும். அதனால் கொவிட் பரவலை கட்டுப்பத்துவதற்காக ஒரு சில தீர்மானங்களை அரசாங்கத்துக்கு எடுக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது.

அரசாங்கம் எந்த தீர்மானத்தை எடுத்தாலும் அது சுகாதார பிரிவினரின் பரிந்துரைக்கமையவே மேற்கொள்ளப்படும். அதனால் நிலைமை பாதூரமான நிலைக்கு செல்வதற்கு முன்னர் கொவிட் பரவலை கட்டுப்படுத்திக் கொள்ள மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும். மக்கள் ஒத்துழைக்காவிட்டால் இதனை கட்டுப்படுத்த முடியாது.

அதனால் கம்பஹா மாவட்டத்தில் கொவிட் பரவலை கட்டுப்படுத்த சில தீர்மானங்களை கம்பஹா மாவட்ட கொவிட் தடுப்புக்குழு மேற்கொண்டிருக்கின்றது. எதிர்வரும் தினங்களில் இது தொடர்பாக மக்களுக்கு தெளிவூட்டும் நிகழ்வுகளை முன்னெடுக்க இருக்கின்றோம் என்றார்.

 (எம்.ஆர்.எம்.வசீம் - வீரகேசரி)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.