2022.01.31 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் பின்வருமாறு:

(அரசாங்க தகவல் திணைக்களத்தின் பிரச்சார பிரிவினால் சிங்கள மொழியிலான அமைச்சரவை தீர்மான ஆவணம், தமிழ் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.)

01. பாரம்பரிய மற்றும் கிராமிய கைத்தொழில்களை ஊக்குவிக்கும் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்

பிரம்பு, பித்தளை, உலோகப் பூச்சு, முகமூடி, தேங்காய் சிரட்டை, தங்காபரணம், கல்வெட்டு, சணல் மற்றும் துணியாலான கைவினைகள் போன்ற பாரம்பரிய குடிசைக் கைத்தொழில்களை மேம்படுத்துவதற்காக கிராமிய கைத்தொழில் ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சுக்கு 2022 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் மூலம் 1000 மில்லியன் ரூபாய்கள் மற்றும் வரவு செலவு மதிப்பீட்டின் மூலம் 150 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. 2021ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பிரம்பு, பித்தளை, களிமண், மரத்தளபாடங்கள் மற்றும் கிராமிய கைத்தொழில் ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சின் கீழ் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற கீழ்க்காணும் கருத்திட்டங்களை குறித்த நிதியொதுக்கீட்டைப் பயன்படுத்தி 2022 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்துவதற்காக கைத்தொழில் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

• கிராமிய கைத்தொழில்களுக்குத் தேவையான மூலப்பொருட்களைப் பயிரிடும் வேலைத்திட்டம்

• தேசிய மூலப்பொருட்கள் வங்கியை நிறுவும் வேலைத்திட்டம்

• ஒரு கிராமத்திற்கு ஒரு தொழில் முயற்சியாளரை உருவாக்கும் கருத்திட்டம்

• மர உற்பத்திகளுடன் தொடர்புடைய கைவினைப் பொருட்கள் மற்றும் செயன்முறைக்கான புத்தாக்க நிலையமொன்றை நிறுவும் கருத்திட்டம்

• கிராமியக் கைத்தொழில்களுக்கான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சந்தை ஊக்குவிப்பு வேலைத்திட்டம்

• கிராமிய மற்றும் பாரம்பரிய கைத்தொழில் கிராமங்கள் ஒன்றிணைந்த அபிவிருத்தி வேலைத்திட்டம்

• தேசிய கம்மாலைக் கைத்தொழில் அபிவிருத்தி வேலைத்திட்டம்

02. பசுமை ஹைதரசன் உற்பத்தி தொடர்பான முன்னோடிக் கருத்திட்டம்

2050 ஆம் ஆண்டளவில் காபனற்ற சூழலை உருவாக்குவதற்கு அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானத்தை வகுத்துள்ளது. அந்நோக்கத்தை அடைவதற்காக எரிசக்தி விநியோக வலையமைப்பை மாற்றியமைத்து சுவட்டு ( Fossil) எரிபொருள் பாவனையிலிருந்து தூய எரிசக்தி உற்பத்திகள் மற்றும் பாவனைக்கு படிப்படியாக செல்ல வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, மின்சக்தி மற்றும் போக்குவரத்துத் துறைகளைப் போலவே வெப்ப உலைகளைப் பயன்படுத்தி உற்பத்திகளை மேற்கொள்ளும் தொழிற்சாலைகளில் புகை வெளியேற்றத்தைக் குறைப்பதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. அந்நிலைமையின் கீழ் நோர்வேயின் Greenstat AS ஆல் மிதக்கும் சூரிய மற்றும் காற்றடைப்பைப் பயன்படுத்தி பசுமை ஹைதரசன் உற்பத்தி செய்யும் முன்னோடிக் கருத்திட்டமொன்று பற்றிய சாத்தியவள ஆய்வை நடாத்துவதற்காக இலங்கை பெற்றோலிய அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் Green Hydrogen India (Pvt) Ltd . இற்கிடையில் ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்காக எரிசக்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

03. எம் வீ எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலால் ஏற்பட்ட சமுத்திர அனர்த்தம் தொடர்பான சமகால நிலைமை

சமுத்திர அனர்த்தத்திற்கு உள்ளாகிய எம் வீ எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் கழிவுகள் மற்றும் அழிவடைந்த பகுதிகளை அகற்றும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், 120 நாட்களில் குறித்த பணிகளை நிறைவு செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. அதுதொடர்பாக நீதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த கீழ்வரும் மேலதிக விடயங்கள் அமைச்சரவையால் கருத்தில் எடுக்கப்பட்டது.

• கழிவுகளை அகற்றும் செயன்முறையால் தொடர்ந்தும் சமுத்திரம் மாசடையாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்காக குறித்த செயன்முறையை கண்காணிப்பதற்காக வர்த்தகக் கப்பல்கள் செயலகத்தின் பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில் ஏற்புடைய நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கூடிய கண்காணிப்புக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது எனவும்,

• இதுவரை பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களுக்கும் முதற்கட்ட இழப்பீட்டுத் தவணைக் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது எனவும்,

• களுத்துறை மாவட்டத்திற்கான மீன்பிடித் தடையை முற்றாக நீக்குதல் எனவும்,

• கழிவுகளை அகற்றும் செயன்முறை பூர்த்தி செய்யப்பட்ட பின்னர் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் இரண்டிலும் குறித்த தடை நீக்கப்படும் எனவும்,

• மீன்பிடி மற்றும் கடல்சார் சூழல் கண்காணிப்பு அதிகாரசபையின் உரித்தின் ஒருபகுதியான 3.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கை அரசாங்கத்திற்கு வைப்பிலிடப்பட்டுள்ளது எனவும், மற்றும் எஞ்சிய உரித்தின் பங்கைப் பெற்றுக் கொள்வதற்காக பீ அன்ட் ஐ கம்பனியுடன் கலந்துரையாடப்படுவதாகவும்,

• கடல்வாழ் உயிரினங்களின் உடற்கூற்று மாதிரிகள் மற்றும் ஏனைய மாதிரிகளைப் பகுப்பாய்வு செய்வதற்காக வெளிநாட்டு ஆய்வு கூடங்களுக்கு அனுப்புதல் எனவும்,

• அவுஸ்திரேலியாவின் ஹெல்மோர் கம்பனியால் சுற்றாடல் பாதிப்பு தொடர்பாக சட்ட ஆலோசனை வழங்கப்படும் எனவும்,

04. நீதி அமைச்சால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடமாடும் சேவை மற்றும் நல்லிணக்க வேலைத்திட்டம்

வடமாகாணத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி, கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, தென்மாகாணத்தில் மாத்தறை மற்றும் மத்திய மாகாணத்தில் நுவரெலியா போன்ற மாவட்டங்களை மையமாகக் கொண்டு நடமாடும் சேவைகள் மற்றும் நல்லிணக்க வேலைத்திட்டங்கள் 04 இனை இவ்வாண்டில் நடாத்துவதற்கு நீதி அமைச்சு திட்டமிட்டுள்ளது. காணி, உத்தியோகபூர்வ ஆவணங்கள், சட்ட நடவடிக்கைகள் தொடர்பாகக் காணப்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குத் தேவையான ஒத்துழைப்புக்களை வழங்கல், நீதி அமைச்சு மற்றும் அதன் கீழ் இயங்குகின்ற நிறுவனங்களால் வழங்கப்படும் சேவைகள் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் கள உத்தியோகத்தர்களைத் தெளிவூட்டுவதற்கு இந்நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது. அதன் ஆரம்ப நிகழ்ச்சித்திட்டம் வடமாகாணத்தின் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் 2022 ஜனவரி மாதம் 26 ஆம் திகதி தொடக்கம் 2022 ஜனவரி மாதம் 30 ஆம் திகதி வரை நடாத்தப்பட்டுள்ளது. குறித்த நடமாடும் சேவைகள் வேலைத்திட்டம் தொடர்பாக அமைச்சர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட மேற்படி விடங்களை அமைச்சரவையால் கருத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

05. 70 வீட்டு அலகுகளைக் கொண்டமைந்துள்ள தெல்கந்த சொகுசு அடுக்குமாடிக் கருத்திட்டம்

கிராமிய வீடமைப்பு, கட்டுமானம் மற்றும் கட்டிடப் பொருட்கள் ஊக்;குவிப்பு இராஜாங்க அமைச்சின் கீழ் காணப்படும் ஓசன் விவ் டிவலொப்மன்ட் கம்பனிக்குச் சொந்தமான தெல்கந்தவில் அமைந்துள்ள 100 பேர்ச்சர்ஸ் காணியில் 70 சொகுசு வீட்டு அலகுகளுடன் கூடிய அடுக்குமாடிக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்கு செலவுச்; சுமையற்ற வகையில் முதலீட்டாளர்கள் மற்றும் முற்கூட்டிய விற்பனை முறையின் கீழ் இக்கருத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அதற்கமைய குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

06. சமனல வாவி மின்னுற்பத்தி நிலையத்தில் மின்னியக்க சுழல் இயந்திரங்கள் ( Generator stators ) இரண்டினைப் புதிதாகப் பொருத்துதல்

சமனல வாவி மின்னுற்பத்தி நிலையம், 120 மெகாவாற்று இயலளவுடனும் மற்றும் வருடாந்தம் 276 கிலோவாற்று மணித்தியாலயங்கள் மின்னுற்பத்தியுடனும் 1992 ஆம் ஆண்டு தொடக்கம் வர்த்தக ரீதியாக இயங்கி வருகின்றது. அதிகபட்ச மின்சாரத் தேவையின் கேள்வி நிலவும் மணிநேரங்களில் மின்சாரத்தை விநியோகித்தல் மற்றும் தென்மாகாண மின் இயலளவை பேணிச் செல்வதற்கும் இம்மின்னுற்பத்தி நிலையம் குறிப்பிடத்தக்களவு பங்களிப்பைச் செய்கின்றது. இரண்டு மின்னியக்க இயந்திரங்களுடன் இம்மின்னுற்பத்தி நிலையம் தொழிற்படுவதுடன், அவற்றின் பாவனைக்காலம் 25-35 வருடங்களாகவும் உள்ளது. அதனால், சமனல வாவி மின்னுற்பத்தி நிலையத்தின் இரண்டு இயந்திரங்களின் பாவனைக்காலம் முடிவடைந்து வருவதுடன், அவற்றை துரிதமாக புதுப்பிக்க வேண்டும். அதற்கமைய ஆரம்ப இயந்திர உற்பத்தியாளரான ஐக்கிய இராச்சியத்தின் GEC Large Machines Ltdற்கு மின்னியக்க சுழல் இயந்திரங்கள் ( Generator stators ) இரண்டினைக் கொள்வனவு செய்வதற்கான பெறுகைச் செயன்முறையை மேற்கொள்வதற்காக மின்சக்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

07. மகாவலி நீர்ப் பாதுகாப்பு முதலீட்டு வேலைத்திட்டத்தின் கீழ் ஒப்பந்தம் வழங்கல்

மகாவலி நீர்ப்பாதுகாப்பு முதலீட்டு வேலைத்திட்டத்தை மேலும் வினைத்திறனாகவும், துரிதமாகவும் மேற்கொள்வதற்கு இயலுமான வகையில், இவ்வேலைத்திட்டத்தின் ஒப்பந்தம் 21 பக்கேஜ்களாக திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த 21 பக்கேஜ்களில் தற்போது 06 பக்கேஜ்களின் வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் 06 பக்கேஜ்களின் கட்டுமானப் பணிகள் நடைபெற்ற வண்ணமுள்ளன. சர்வதேச போட்டி விலைமுறிப் பொறிமுறையைப் பின்பற்றி தெரிவு செய்யப்பட்டுள்ள ஒப்பந்தக்காரர்களுக்கு எஞ்சியுள்ள 09 ஒப்பந்தங்களை வழங்குவதற்காக நீர்ப்பாசன அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

08. சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்புக்கு தேவையான மசகு எண்ணெய்யை விநியோகித்தல்

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்புக்கு தேவையான மசகு எண்ணெய் 2022 யூலை மாதம் வரைக்கும் விநியோகிப்பதற்காக தற்போது தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அதன் பின்னர் வருகின்ற காலங்களுக்குத் தேவையான மசகு எண்ணெய்யை விநியோகிப்பதற்குரிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. இச்சுத்திகரிப்புக்குத் தேவையான மசகு எண்ணெய்யை விநியோகிப்பதற்காக சைப்பிரஸ் நாட்டின் Terra Navis Group இனால் கோரப்படாத முன்மொழிவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 180 நாட்கள் கடன் அடிப்படையில் மசகு எண்ணெய்யை விநியோகிப்பதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள முன்மொழிவை அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள விசேட நிரந்தர பெறுகைக் குழுவின் மதிப்பீட்டுக்கு உட்படுத்தி அதன் ஆரம்ப கட்டமாக 450,000 பீப்பாய்கள் கொண்ட கப்பல் தொகையை விநியோகிப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அப்பரிந்துரைகளுக்கமைய குறித்த மசகு எண்ணெய்யை விநியோகிப்பதற்காக எரிசக்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

09. மிகைவரி சட்ட மூலத்தினை அங்கீகாரத்திற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்

2020/2021 விலைமதிப்பு ஆண்டுக்கான 2,000 மில்லியன் ரூபாய்களுக்கும் அதிகமாக வரி அறவிடக்கூடிய வருமானத்தை ஈட்டும் நபர்கள் அல்லது கம்பனிகளுக்கு ஒரு தடவை மாத்திரம் அறிவிடப்படும் 25% வீதமான மிகைவரியை விதிப்பதற்கு 2022 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது. அதற்கமைய, சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள மிகைவரிச் சட்ட மூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பாராளுமன்ற அங்கீகாரத்திற்குச் சமர்ப்பிப்பதற்கும் நிதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. 1979 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க குற்றவியல் வழக்குக் கோவை சட்டத்திற்கான திருத்தம்

வழக்கொன்றில் முறைப்பாட்டாளர் மற்றும் ஒவ்வொரு குற்றஞ்சுமத்தப்பட்டவருக்கும் வழக்கு அறிக்கையில் தொடரப்பட்டுள்ள வழக்குகளின் தீர்ப்போ அல்லது இறுதிக் கட்டளையின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதியை கட்டணமின்றி வழங்குவதற்காக ஏற்பாடுகளைத் தயாரிப்பதற்கு இயலுமான வகையில் குற்றவியல் வழக்குக் கோவை சட்டத்தில் 442 மற்றும் 443 உறுப்புரைகளின் திருத்தங்களுக்காக 2021 மே மாதம் 31 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்ட மூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்பதல் கிடைத்துள்ளது. குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பாராளுமன்ற அங்கீகாரத்திற்குச் சமர்ப்பிப்பதற்கும் நீதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. இந்தியன் ஒயில் கம்பனியிடமிருந்து 40,000 மெற்றிக்தொன் டீசல் தொகையைக் கொள்வனவு செய்தல்

இந்தியன் ஒயில் கம்பனியிடமிருந்து 40,000 மெற்றிக்தொன் டீசல் மற்றும் 40,000 மெற்றிக்தொன் பெற்றோல் தொகைளை கொள்வனவு செய்வது தொடர்பாக எரிசக்தி அமைச்சு குறித்த கம்பனியுடன் கலந்துரையாடலை நடத்தியுள்ளது. அதற்கமைய, 40,000 மெற்றிக்தொன் டீசல் தொகையை விநியோகிப்பதற்கு இந்தியன் ஒயில் கம்பனி உடன்பாடு தெரிவித்துள்ளது. அதற்கமைய, குறித்த தொகையை கொள்வனவு செய்வதற்கான வருங்கால நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக எரிசக்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

12. 'கிராமத்துடனான உரையாடல் – வரவு செலவுத் திட்டத்திலிருந்து ஒரு இலட்சம் வேலைகள்' கிராமிய அபிவிருத்தி வேலைத்திட்டம்

உற்பத்திப் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் 2022 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் மூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள முன்மொழிவுக்கமைய 'கிராமத்துடனான உரையாடல் – வரவு செலவுத் திட்டத்தில் இருந்து ஒரு இட்சம் வேலைகள்' கிராமிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தை நாடளாவிய ரீதியில் 336 பிரதேச செயலகப் பிரிவுகளை உள்ளடக்கியதாக 14,021 கிராம அலுவலர் பிரிவுகளில் நடைமுறைப்படுத்துவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வேலைத்திட்டத்தின் கீழ் பொதுமக்களின் தேவைகள் பொதுமக்களாலேயே அடையாளங் காணக்கூடிய செயன்முறையை முழுமையாகப் பன்முகப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய, திட்டமிடப்பட்டுள்ள வேலைத்திட்டத்தை 2022 பெப்ரவரி மாதம் 03 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு தேவையான தயார்படுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளமையை தெரிவித்து நிதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த விடயங்கள் அமைச்சரவையால் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.