மற்றுமொரு சுதந்திரத்தை வேண்டி நிற்கும் இலங்கை நம் தேசம்

- சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபா

( மினுவாங்கொடை நிருபர் )

   இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினத்தை சிறப்புற வாழ்த்துவதோடு, இலங்கை வாழ் மக்கள் அனைவருக்கும் சுபீட்சம் நிறைந்த சாந்தி, சமாதானம், செளபாக்கியம் நிலவிட வாழ்த்துவதாக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தவிசாளரும், மத்திய கொழும்பு அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான பைஸர் முஸ்தபா, தனது சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

   அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

   ஆங்கிலேயரின் 133 ஆண்டுகால ஆட்சிக்குப் பின்னர் 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இதே திகதியில் இலங்கை விடுதலை பெற்றது.

   இலங்கை சிறிய தீவாக இருந்தாலும் 2500 ஆண்டுகளுக்கு மேற்பட்ட நீண்ட கால வரலாற்றைக் கொண்டது.

   இலங்கையின் வரலாறு கி.மு. 6 ஆம் நூற்றாண்டு அளவில் இந்தியாவின் கலிங்க நாட்டிலிருந்து துரத்தி விடப்பட்ட அந்நாட்டு இளவரசனான விஜயன் என்பவன் தனது தோழர்கள் 700 பேருடன் இலங்கையில் வந்து இறங்கியதுடன் ஆரம்பமாகிறது.

   2500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இலங்கையில் தமிழ் மன்னர்களும், சிங்கள மன்னர்களும் மாறி மாறி ஆட்சி புரிந்ததற்கான சான்றுகள் உள்ளன.

   தமிழ் மன்னர்கள் இலங்கையின் தெற்கில் பல்வேறு பகுதிகளிலும் ஆட்சி புரிந்துள்ளனர்.

   கி.மு. 3 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இலங்கையில் பௌத்தம் அறிமுகப்படுத்தப்பட்டது.

   இலங்கையில் முதன் முதலாக வர்த்தகத் தளத்தை அமைத்தவர்கள் போர்த்துக்கீசியர்கள் தான்.

   அரசியல் உட்பூசல்களைப் பயன்படுத்தி இலங்கையில் தனது பலத்தை அவர்கள் விஸ்தரித்துக் கொண்டனர்.

   இன்று இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.  சுதந்திர இலங்கையில் எம்மை நாமே பூரணமாக ஆளுகின்ற உரிமையை ஆளுகிற ஜனநாயக அரசியலுக்கும் 74 வயதாகிறது என்று சொல்லலாம்.

   இந்த 74 வருடங்களிலும் நாம் எவற்றையெல்லாம் சாதித்திருக்கின்றோம் என்பதனை, எமது சமகால அரசியல் பொருளாதார சமூக சமய, கல்வி கலாசார பல்துறை அபிவிருத்திச் சுட்டிகளின் மூலம் மிகவும் தெளிவாகவே புரிந்து கொள்ள முடியும்.

   சுதந்திரம் கிடைத்ததும் கிடைக்காததுமாக  எமது தென்னிலங்கை தலைமைகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பெருந்தேசியவாத நிகழ்ச்சி நிரலினை முன்னெடுக்க ஆரம்பித்தமை மேற்சொன்ன அனைத்து துறைகளிலும் பாரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளமையை நாம் பார்க்கின்றோம்.

   மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் அவை ஆட்சியைக் கைப்பற்றுவதற்கும் தக்கவைத்துக் கொள்வதற்கும் கைக்கொண்ட பிரதான மூலோபாயம், தென்னிலங்கை பெருந்தேசியவாதமாகும்.

   நீறு பூத்த நெருப்பாக இருந்த தேசிய இனப்பிரச்சினை, குணப்படுத்த முடியாத புற்று நோயாக மாறிப்போனது, மூன்று தசாப்த கால உள்நாட்டுப் போரில் எமக்கு ஏற்பட்ட அரசியல், சமூக, பொருளாதார, உயிர், உடமை இழப்புகளுக்கு மேலதிகமாக பாதுகாப்புச் செலவீனங்களாக மாத்திரம் இந்த நாடு சுமார் 2500 மில்லியன் (250 பில்லியன்) அமெரிக்க டொலர்களை விரயம் செய்துள்ள நிலையில், இன்று பங்களாதேஷ்,  பாகிஸ்தானிடம் 200 மில்லியன்களுக்காக அக்ஷயப் பாத்திரம் ஏந்தி நிற்கிறது.

   ஆக, மொத்தத்தில்  இந்த நாடு இன்னுமொரு சுதந்திரத்தை வேண்டியிருக்கிறது, சகல இனங்களும் சமமான உரிமைகள் பெற்று, சகல பிராந்தியங்களுக்கும் அரசியல்  அதிகாரங்கள்  பகிரப்பட்டு, சமதான சகவாழ்வின்  அடித்தளத்தில்  அரசியல் ஸ்திரத் தன்மையும் பொருளாதார அபிவிருத்தியும் ஏற்படக் கூடிய தேசிய கட்டுமானத் திற்கான சுதந்திரம்  தேவைப்படுகிறது.  சர்வதேச பிராந்திய மேலாதிக்க சக்திகளினதும் அவற்றின் கூலிப்படைகளினதும் நேரடி மறைமுக  ஆக்கிரமிப்புக்கள் கெடுபிடிகளில் இருந்து எமக்கு விடுதலையும்  சுதந்திரமும் தேவைப்படுகிறது.

( ஐ. ஏ. காதிர் கான் )



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.