நாட்டுக்குள் ஏற்படவிருந்த பெரும் அழிவு நிலைமையை, கொவிட் தடுப்பூசி வேலைத்திட்டத்தின் மூலமே கட்டுப்படுத்த முடிந்ததென்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். 

நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தை மையப்படுத்தி, நேற்றைய தினம் (25) வீடியோ தொழில்நுட்பத்தில் இடம்பெற்ற உலகளாவிய தடுப்பூசி ஏற்றலை விரைவுபடுத்துவதற்கான உயர்மட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, ஜனாதிபதி அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

உலகளாவிய ரீதியில் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதில் காணப்படும் சமத்துவமின்மை மற்றும் ஆபத்துமிக்க புதிய திரிபுகள் ஏற்படுவதற்குள்ள நிகழ்தகவு போன்றவற்றைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், அனைத்து இடங்களிலுமுள்ள அனைவருக்கும் தடுப்பூசி ஏற்றுவதே, இந்தத் தொற்றுப் பரவலில் இருந்து மீள்வதற்குள்ள ஒரே வழியென்றும் அரச தலைவர்கள் முன்னிலையில் எடுத்துரைத்தார். 

இந்த விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தலைவர் அப்துல்லா ஷாஹிட் (Abdulla Shahid) மற்றும் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் (Antonio Guterres) ஆகியோர், கொவிட் தடுப்பூசி ஏற்றலிலுள்ள முக்கியத்துவம் மற்றும் இது விடயத்தில் பல்வேறு நாடுகள் செயற்பட்ட விதம் தொடர்பில் குறிப்பிட்டனர். 

இந்த விவாதத்தின் முதல் சுற்றின் போது, தடுப்பூசி உற்பத்தி மற்றும் விநியோகத்தில் எதிர்கொள்ளப்படும் சவால்கள், தரம், குறைந்தளவு தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்த நாடுகளுக்கு அதிகளவில் விநியோகித்தல், விநியோக விகிதத்தை மேம்படுத்துதல் மற்றும் விநியோக முன்னறிவிப்பை உறுதி செய்தல் போன்ற விடயங்கள் குறித்து ஆராயப்பட்டன. 

விவாதத்தின் இரண்டாம் சுற்றின் போது, தற்போதைய சவால்களை வெற்றிகொள்வதற்குத் தேவையான புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தீர்வுகளைக் கண்டறிவதோடு, உலகளாவிய தடுப்பூசி ஏற்றலை விரைவுபடுத்துவதற்கும் எதிர்பார்க்கப்பட்டது. 

உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம், மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம், தடுப்பூசிக் கூட்டமைப்பான “கவி” (GAVI)இன் நிறைவேற்று அதிகாரி டொக்டர் செத் பர்க்லி மற்றும் அரச தலைவர்களும் இதன்போது உரை நிகழ்த்தினர். 

26.02.2022


 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.