யுக்ரேனின் அதிபராக வொலோடிமிர் ஸெலென்ஸ்கி முதன்முதலில் தொலைக்காட்சித் தொடர் ஒன்றில் தோன்றினார். அது ஒரு பிரபலமான நகைச்சுவைத் தொடர்.


வொலோடிமிர் ஜெலென்ஸ்கி


2019 ஏப்ரலில் அவரது நிஜ வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்பட்டது. அவர் உண்மையிலேயே நாட்டின் அதிபரானார். இப்போது அவர் 4 கோடியே 40 லட்சம் மக்களைக் கொண்ட ஒரு நாட்டை போரில் வழி நடத்துகிறார். தற்போது ரஷ்யப் படைகள் அவரது நாட்டுக்குள் புகுந்து சண்டையில் ஈடுபட்டுள்ளன.

'செர்வெண்ட் ஆஃப் தி பீப்பிள்' தொடரில் அவர் ஒரு சாதாரண வரலாற்று ஆசிரியராக அவர் நடித்தார். ஊழலுக்கு எதிராக அவர் பேசிய வீடியோ ஆன்லைனில் வைரலான பிறகு அவர் அந்தத்தொடரில் அதிபராக நடித்தார். இது ஒரு மாறுபட்ட கதையாக இருந்தது. இது அரசியலில் ஏமாற்றத்தை கண்டிருந்த யுக்ரேனியர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது.

'செர்வெண்ட் ஆஃப் தி பீப்பிள்'அவரது கட்சியின் பெயரானது. வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அரசியலைத் தூய்மைப்படுத்துவதாகவும், கிழக்கில் அமைதியைக் கொண்டுவருவதாகவும் உறுதியளிக்கும் பிரசாரத்தை மேற்கொண்டார்.

இப்போது ரஷ்யாவின் துருப்புக்கள் யுக்ரேனுக்குள் புகுந்து தாக்கிவரும் நிலையில் இந்த தேசியத் தலைவர், சர்வதேச நெருக்கடியின் மையத்தில் இருக்கிறார். இது மேற்கத்திய நாடுகளின் ரஷ்யாவுடனான பனிப்போரின் ஆழமான நெருக்கடியை நினைவுபடுத்துகிறது.

44 வயதான அதிபர் யுக்ரேன் நலனுக்காக ஆதரவைத் திரட்டியும், பீதியை பரப்ப வேண்டாம் என்று மேற்கத்திய நாடுகளிடம் வேண்டுகோள்விடுத்தும், மக்களிடையே அச்சம் பரவாமல் இருக்க தன்னால் இயன்றதை செய்தும் ஒரு கடினமான பாதையில் செல்லவேண்டியுள்ளது.

ஒரு நகைச்சுவை நடிகரின் அழைப்பு

அதிபர் பதவிக்கான அவரது பாதை வழக்கமான ஒன்றல்ல.

மத்திய நகரமான க்ரைவிரியில் யூத பெற்றோருக்கு பிறந்த வொலோடிமிர் ஸெலென்ஸ்கி, கீவ் தேசிய பொருளாதார பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டம் பெற்றார். இருப்பினும், நகைச்சுவைதான் அவரது தொழிலாக மாறியது.

ஒரு இளைஞராக அவர் ரஷ்ய தொலைக்காட்சியில் ஒரு போட்டி குழு நகைச்சுவை நிகழ்ச்சியில் பங்கேற்றார். 2003 ஆம் ஆண்டில், அவர் தனது நகைச்சுவைக் குழுவான 'க்வார்டல் 95' என்ற பெயரில் ஒரு வெற்றிகரமான தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவனத்த்தின் இணை நிறுவனர் ஆனார்.

இந்த நிறுவனம் யுக்ரேனின் 1+1 நெட்வொர்க்கிற்கான நிகழ்ச்சிகளை தயாரித்தது. அதன் சர்ச்சைக்குரிய பில்லியனர் உரிமையாளர் இஹோர் கொலோமோய்ஸ்கி, பின்னர் ஸெலென்ஸ்கியின் அதிபராகும் முயற்சியை ஆதரித்தார்.

2010 களின் நடுப்பகுதி வரை, டிவி மற்றும் லவ் இன் தி பிக் சிட்டி (2009) மற்றும் ர்ஜெவ்ஸ்கி வெர்சஸ் நெப்போலியன் (2012) போன்ற திரைபடங்கள்தான் அவரது வாழ்க்கையின் மையமாக இருந்தன.

செர்வெண்ட் ஆஃப் தி பீப்பிள்

ஸெலென்ஸ்கியின் அரசியல் எழுச்சிக்கான களம் 2014 இல் நடந்த கொந்தளிப்பான நிகழ்வுகளால் அமைக்கப்பட்டது. யுக்ரேனின் ரஷ்ய சார்பு அதிபர் விக்டர் யானுகோவிச் பல மாத எதிர்ப்புகளுக்குப் பிறகு வெளியேற்றப்பட்டார். பின்னர் ரஷ்யா கிரைமியாவைக் கைப்பற்றியது. கிழக்கில் யுக்ரேனுடனான போரில் பிரிவினைவாதிகளை ஆதரித்தது. இன்றுவரை அந்த சண்டை தொடர்கிறது.

ஒரு ஆண்டு கழித்து, 2015 அக்டோபரில் 'சர்வண்ட் ஆஃப் தி பீப்பிள்' தொலைக்காட்சி தொடர், 1+1 இல் ஒளிபரப்பானது. அவர் வாசிலி கோலோபோரோட்கோ என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த கதாபாத்திரம் நாட்டின் அதிபரானது போலவே, நடிகரின் நிஜ வாழ்க்கையும் அமைந்தது.

அவர் அப்போதைய அதிபர் பெட்ரோ பொரோஷென்கோவை தோற்கடித்தார். பெட்ரோ தனது போட்டியாளரை 'அரசியலில் புதியவர்' என்று சித்தரிக்க முயன்றார். ஆனால் வாக்காளர்கள் அதை அவருடைய வலுவாக நினைத்தனர்.

அவர் 73.2% அமோக வாக்குகளுடன் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். யுக்ரேனின் ஆறாவது அதிபராக 2019 மே 20 ஆம் தேதி அவர் பதவியேற்றார்.

டான்பாஸில் முட்டுக்கட்டை

கிழக்கு யுக்ரேனில் 14,000 க்கும் மேற்பட்ட மக்களின் உயிரை பலிகொண்ட மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதாக அவர் அளித்த வாக்குறுதியின்படி செயல்பட முயன்றார்.

முதலில், அவர் சமரசத்திற்கு முயற்சித்தார். ரஷ்யாவுடன் பேச்சு வார்த்தைகள், கைதிகளின் பரஸ்பர பரிமாற்றம் மற்றும் மின்ஸ்க் உடன்படிக்கை என அழைக்கப்படும் சமாதான செயல்முறையின் சில பகுதிகளை செயல்படுத்துவதற்கான நகர்வுகள் இதில் அடங்கும். ஆனால் அவை ஒருபோதும் முன்னேற்றத்தைக் கொண்டுவரவில்லை.

ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களுக்கு ரஷ்ய பாஸ்போர்ட்டுகளை வழங்கும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் முடிவால் சமரச மனநிலை பாதிக்கப்பட்டது. 2020 ஜூலையில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. ஆனால் அவ்வப்போது சண்டைகள் தொடர்ந்தன.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ ராணுவ கூட்டணியில் உறுப்பினராகும் யுக்ரேனின் உந்துதலை மிகவும் உறுதியான தொனியில் அவர் பேசியது ரஷ்ய அதிபரை கோபப்படுத்தியது.

சில நேரங்களில் அவர் ஒரு அரசியல்வாதியாக தனது குரலைக் கேட்கச்செய்ய போராடினார், இதற்கு அவரது அரசியல் அனுபவமின்மையை அவரது விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஆனால் உடனடி ரஷ்யப் படையெடுப்பு பற்றிய மேற்கத்திய நாடுகளின் எச்சரிக்கைகளை எதிர்கொண்ட அவர், எட்டு வருட போருக்குப் பிறகு அது ஒன்றும் புதிதல்ல என்று பொறுமையாக சுட்டிக் காட்டினார். "நமது பொறுமை,ஆத்திரமூட்டல்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். நாம் கண்ணியமாக நடந்து ஆத்திரமூட்டல்களுக்கு பதிலடி கொடுக்காதபோது இது நடக்கும்," என்றார் அவர்

பிப்ரவரி 16 அன்று தேசிய ஒற்றுமை தினத்தை உருவாக்கியதன் மூலம் யுக்ரேனியர்களை அணிதிரட்ட முயன்றார். மேலும் முன்னரங்க பகுதிகளில் உள்ள வீரர்களை தொடர்ந்து சந்தித்தார்.

ரஷ்யாவின் ராணுவ அச்சுறுத்தல் நேட்டோவில் சேருவதை கைவிட அவரை வற்புறுத்துகிறதா என்று கேட்டபோது, "நான் அதிபராக இருக்கும்போது நாட்டை இழக்காமல் இருப்பதே எனக்கு முக்கியம்," என்று பிபிசியிடம் அவர் தெரிவித்தார்.

யுக்ரேனின் அதிபராக வொலோடிமிர் ஜெலென்ஸ்கி


"எங்களுக்கு உத்தரவாதங்கள் தேவை. இது வெறும் நான்கு எழுத்துக்கள் மட்டுமல்ல. எங்களுக்கு நேட்டோ ஒரு பாதுகாப்பு உத்தரவாதம்,"என்று அவர் குறிப்பிட்டார்.

யுக்ரேனின் பெரும் பணக்காரப்புள்ளிகளின் விரிவான அரசியல் மற்றும் பொருளாதார செல்வாக்கைக் கட்டுப்படுத்துவதான அவரது வாக்குறுதி நிறைவேற்ற முடியாதது என நிரூபிக்கப்பட்டுள்ளது.

இஹோர் கொலோமொய்ஸ்கியின் தொடர்புகளை விமர்சகர்கள் சந்தேகப்பட்டனர். அவரது ஊடக நிறுவனம் ஸெலென்க்ஸியின் தேர்தல் பிரச்சாரத்திற்கு ஆதரவு அளித்தது.

ஆனால் தான் அளித்த இந்த வாக்குறுதியை நிறைவேற்ற ஓரளவு முயற்சிகளை அவர் மேற்கொண்டார்.

அவரது அரசு யுக்ரேனின் மிக முக்கிய செல்வந்தர்களில் சிலரை குறிவைத்தது. ரஷ்ய ஆதரவு எதிர்க்கட்சித் தலைவர் விக்டர் மெட்வெட்சுக் இதில் ஒருவர். தேச துரோகம் உள்ளிட்ட குற்றங்களுக்காக அவர்வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். இது ஒரு "அரசியல் அடக்குமுறை" என்று மெட்வெட்சுக் கண்டனம் செய்தார்.

பின்னர் 'பணக்கார புள்ளிகளை' சட்டப்பூர்வமாக கட்டுப்படுத்தும் சட்டம் வந்தது. அரசியல் கட்சிகளுக்கு நிதியுதவி செய்யத்தடை உட்பட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

ஆனால் அவரது ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் பெரும்பாலும் மேலோட்டமானது என்றும் ரஷ்யாவிற்கு எதிரான ஒரு முக்கியமான முகாமான அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நிர்வாகத்திற்கு ஆதரவாக வடிவமைக்கப்பட்டது என்றும் சில விமர்சகர்கள் கருதினர்

பரஸ்பரம் உதவி அல்ல

வொலோடிமிர் ஜெலென்ஸ்கி


பைடனின் ஆதரவிற்கான உத்தரவாதம் பெறுவதற்கு ஸெலென்ஸ்கி தர்மசங்கடமான தருணங்களை எதிர்கொண்டார்.

2019 ஜூலையில் குடியரசுக் கட்சியை சேர்ந்த ன் அதிபர் டொனால்ட் டிரம்ப் தொலைபேசி அழைப்பின் போது ஸெலென்ஸ்கியிடம் "ஒரு உதவி" கேட்டார். தேர்தலில் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் பைடனுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை ஸெலென்ஸ்கி விசாரிக்க வேண்டும் என்று டிரம்ப் விரும்பினார்.

அமெரிக்கா

இதற்கு கைமாறாக ஸெலென்ஸ்கி அமெரிக்க பயணத்தையும், ராணுவ உதவியையும் பெறுவார் என்று கூறப்பட்டது.

அழைப்பின் விவரங்கள் பரவலாக அறியப்பட்டபோது, தனது அரசியல் போட்டியாளர் தொடர்பான சேதம் விளைவிக்கும் தகவல்களை தோண்டி எடுக்க யுக்ரேன் தலைவருக்கு சட்டவிரோதமாக அழுத்தம் கொடுத்ததாக ட்ரம்ப் குற்றம் சாட்டப்பட்டார்.

தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று ட்ரம்ப் உறுதியாகக் கூறினார். அதே சமயம் ஸெலென்ஸ்கி 'பரஸ்பர உதவியை' மறுத்தார். ஜனநாயகக் கட்சியினர் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்யும் நடவடிக்கைகளை துவக்கினர். பின்னர் அவர் அரசியல் விசாரணையில் விடுவிக்கப்பட்டார்.

ஊழல் குற்றச்சாட்டுகள்

ஸெலென்ஸ்கி மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன.

2021 அக்டோபரில் கசிந்த பண்டோரா ஆவணங்களில் அவர் பெயர் இடம் பெற்றிருந்தது. இது உலகின் பணக்காரர்கள் மற்றும் சக்திவாய்ந்தவர்களின் மறைத்து வைக்கப்பட்ட செல்வத்தை அம்பலப்படுத்தும் ஆவணங்களாகும்.

ஸெலென்ஸ்கியும் அவரது நெருங்கிய வட்டமும் வெளிநாட்டு நிறுவன வலையமைப்பின் பயனாளிகள் என்பதை ஆவணங்கள் வெளிப்படுத்தின.

ஆவணங்களில் புதிய விவரங்கள் ஏதும் இல்லை என்றும் தானும், தனது நிறுவனமான Kvartal 95 ஐச் சேர்ந்த எவரும் பணமோசடியில் ஈடுபட்டவில்லை என்றும் ஸெலென்ஸ்கி தெரிவித்தார். 

நன்றி : பிபிசி தமிழ் 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.