ரஸீன் ரஸ்மின்


புத்தளம் பகுதிகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகம் செய்கின்ற மதுரங்குளி 10ஆம் கட்டை பகுதியில் உள்ள மொத்த விற்பனை நிலையத்தில்  பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டது.

எனினும், மதுரங்குளி பொலிஸார் அங்கு வருகை தந்து நிலைமைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

குறித்த மொத்த விற்பனை நிலையத்தில் உள்ள களஞ்சியசாலையில் 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்து, அங்கு எரிவாயு கொள்வனவு செய்ய வருகைதந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் தமது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இதனால், புத்தளம் - கொழும்பு பிரதான வீதியின் 10 ஆம் கட்டை பகுதியில் சுமார் 30 நிமிடங்கள் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.

புத்தளம் மாவட்டத்தில் சமையல் எரிவாய்வுக்கு தொடர்ந்தும் தட்டுப்பாடு நிலவி வருவதனால் பொதுமக்கள் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இதனால், பேக்கரி உரிமையாளர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள் உட்பட பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புத்தளம் மாவட்டத்திலுள்ள சமையல் எரிவாயு விற்பனை நிலையங்களில் "சமையல் எரிவாயு இல்லை" என்கின்ற பதாகைகள் தொங்க விடப்பட்டுள்ளதை காண முடிகின்றது.

இதனால், சமையல் எரிவாயு கொள்வனவு செய்வதற்காக, வெற்று சமையல் எரிவாயு சிலிண்டர்களை எடுத்து வரும் மக்கள் ஏமாற்றத்துடனேயே வீடுகளுக்கு திரும்பிச் செல்வதை அவதானிக்க முடிந்தது.

இதேவேளை, புத்தளம் பகுதிகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகம் செய்கின்ற மதுரங்குளி 10 ஆம் கட்டை பகுதியில் உள்ள மொத்த விற்பனை நிலையத்தில்  2.3 கிலோ கிராம் மற்றும் 5.0 கிலோ கிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மாத்திரம் விநியோகிக்கப்படுவதாகவும் நுகர்வோர் தெரிவித்தனர்.

இதனால், புத்தளம் , கற்பிட்டி, கருவலகஸ்வெவ, முந்தல் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள், சமையல் எரிவாயுவை பெறுவதற்காக ஓட்டோ, மோட்டார் சைக்கிள்கள் என்பவற்றில் ஒவ்வொரு நாளும் நேரகாலத்துடன் வருகை தந்து வரிசையில் காத்திருப்பதை அவதானிக்க முடிகின்றது.

இவ்வாறு வருகை தரும் பொதுமக்களுக்கு டோக்கன் விநியோகிக்கப்பட்டு, சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படுகிறது.

அந்த வகையில் சமையல் எரிவாயுவைப் பெறுவதற்காக புத்தளம் மதுரங்குளி 10 ஆம் கட்டைப் பகுதியில் உள்ள லிட்ரோ சமையல் எரிவாயு மொத்த விநியோக நிலையத்திற்கு முன்பாக ஆண்களும், பெண்களும் என மக்கள் நீண்ட வரிசையில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுடன் பெறுவதற்காக காத்திருந்தனர்.

இதன்போது, அங்கு 12.5 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு இல்லை எனத் தெரிவித்து 5.0 மற்றும் 2.5 கிலோ கிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டர்கள் மாத்திரமே உள்ளதென தெரிவித்து, அதற்காக டோகனும் வழங்கப்பட்டன.

இந்நிலையில் களஞ்சிசாலையில் 12.5 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு இருப்பதை அவதானித்த சிலர் அங்கிருந்த ஏனையோருக்கும் தெரியப்படுத்தி, சமையல் எரிவாயு பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறி அங்கிருந்த எரிவாயு மொத்த விற்பனை நிலைய ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, அந்த மக்கள்  புத்தளம்-கொழும்பு பிரதான வீதியின் மதுரங்குளி 10 ஆம் கட்டைப் பகுதியிலுள்ள லிட்ரோ சமையல் எரிவாயு மொத்த விநியோக நிலையத்திற்கு முன்னால் வீதியை மறித்து எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதனால், சில நிமிடங்கள் போக்குவரத்துக்கும் தடை ஏற்பட்டது. இதனையடுத்து, மதுரங்குளி பொலிஸ் நிலைய போக்குவத்து பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு வருகை தந்தனர்.

இதன்போது, வீதியின் நடுவில் இருந்துகொண்டு எதிர்ப்புக்களை தெரிவித்த பொதிமக்களுடன் கலந்துரையாடி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டதை அடுத்து, அவ்வீதியுடனான போக்குவரத்து வழமைக்கு கொண்டு வரப்பட்டது.

இதனையடுத்து, அங்கு வருகை தந்த மதுரங்குளி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொதுமக்களுடன் கலந்துரையாடினார்.

மொத்த விற்பனை நிலைய பொறுப்பாளர்களுடன் பேசி தமக்கு 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டர்களை பெற்றுத் தருமாறு மக்கள் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் வேண்டிக்கொண்டனர்.

இந்த நிலையில், மொத்த விற்பனை நிலைய வளாகத்திற்குள் சென்ற மதுரங்குளி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, மொத்த விற்பனை நிலைய பொறுப்பாளர்களுடன் 12.5 சமையல் எரிவாயு களஞ்சியசாலையில்  சேகரித்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பொதுமக்கள் தெரிவித்த குற்றச்சாட்டுக்களின் உண்மை நிலைகளை கேட்டறிந்துள்ளார்.

களஞ்சியசாலையில் 12.5 கிலோ கிராம் எடையுடைய சமையல் எரிவாயு இருப்பது உண்மை எனவும், அது அத்தியாவசிய தேவைக்கு மட்டும் விநியோகம் செய்யவே வைக்கப்பட்டுள்ளது என்றும்  5 கிலோ கிராம் மற்றும் 2.3 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு இருப்பதாகவும் அதனை வழங்க முடியும் எனவும் மொத்த விற்பனை நிலைய பொறுப்பாளர்கள் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து, எரிவாயு மொத்த விற்பனை நிலையை பொறுப்பாளர்களுடன் நடந்த கலந்துரையாடல் பற்றி, மக்களுக்கு தெரியப்படுத்திய பொறிப்பதிகாரி இதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொண்டார். 

இதனையடுத்து , டோகன் வழங்கப்பட்டவர்களுக்கு 5.0 மற்றும் 2.5 கிலோ கிராம் எடையுடைய சமையல் எரிவாயு மாத்திரம் விநியோகிகப்பட்டதுடன் , 12.5 சமையல் எரிவாயு சிலிண்டர்களை எடுத்து வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றமையை அவதானிக்க முடிந்தது.

இந்நிலையில், " இந்த நிலையம் கேஸ் விநியோகிக்கும் நிலையமாகும். இங்கு கேஸ் விற்கப்படாது என்பதனை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். கேஸ் மொத்தமாக பெற்றுக் கொண்ட முகவர்கள்  உடனடியாக இங்கிருந்து செல்வதுடன் உங்களது நிலையத்தில் வைத்து விநியோகிக்கவும்" என்று தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் நேற்று மாலை முதல் 10 ம் கட்டை மொத்த விற்பனை நிலையத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும், இன்றும் பெரும் எண்ணிக்கையிலானோர் 10 ம் கட்டை சமையல் எரிவாயு மொத்த விற்பனை நிலையத்திற்கு முன்பாக சமையல் எரிவாயு சிலிண்டர்களுடன் குழுமியிருந்தனர்.

இதன்போது இங்கு சமையல் எரிவாயு விற்பனை செய்யப்படாது என மொத்த விற்பனை நிலைய ஊழியர்கள் தெரிவித்ததை அடுத்து, பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றமையை அவதானிக்க முடிந்தது.



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.