அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் ஷேன் வோர்ன் மாரடைப்பு காரணமாக நேற்றைய தினம் (04) தன்னுடைய 52 ஆம் வயதில் காலமானார்.
இந்நிலையில் அவருடைய மரணத்திற்கு பல்வேறு தரப்பினரும் அனுதாபங்களை வெளியிட்டு வருகின்றனர்.
ஷேன் வோர்னின் சாதனைகள்:
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஷேன் வோர்ன் கிரிக்கெட் வரலாற்றிலேயே சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராக கருதப்படுகிறார். 1969-ம் ஆண்டு பிறந்த ஷேன் வோர்ன், 1992ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தான் தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினார்.
சிட்னி மண்ணில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய அவர் அந்த டெஸ்ட் போட்டியில் கைப்பற்றியது ஒரு விக்கெட் தான். ஆனால் தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை நிறைவு செய்யும்போது 708 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக 700 விக்கெட் கைப்பற்றிய வீரர் வார்னே தான். டெஸ்ட் கிரிக்கெட்டில் வார்னேவுக்கு முதல் விக்கெட்டாக வீழ்ந்தவர் ரவி சாஸ்திரி. எந்த மண்ணில் தனது டெஸ்ட் கிரிக்கெட் பயணத்தை தொடங்கினாரோ அதே மண்ணில் 15 ஆண்டுகள் கழித்து தனது டெஸ்ட் கிரிக்கெட்டின் கடைசி போட்டியையும் விளையாடினார்.
அவரது கடைசி விக்கெட் இங்கிலாந்தின் ஆண்ட்ரூ ஃபிளிண்டாப்.
சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை 1000 விக்கெட்டுகளை மேல் கைப்பற்றியது இருவர் தான். ஒருவர் முத்தையா முரளிதரன் மற்றொருவர் ஷேன் வோர்ன். ஒருநாள் போட்டிகளில் 293 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார் ஷேன் வோர்ன்.
சுழற்பந்தின் சொர்க்கபுரியாக ஆசிய மண் விளங்கும் நிலையில், ஆஸ்திரேலிய மண்ணில் இருந்து ஒரு சுழற்பந்து வீச்சாளர் வந்து கிரிக்கெட்டில் அத்தனை அணிகளுக்கும் சிம்மசொப்பனமாக விளங்கியது அசாதாரணமானது.
சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் கொடிகட்டி பறந்த ஷேன் வோர்ன் 2003-ம் ஆண்டில் ஊக்கமருந்து சோதனையில் சிக்கினார். ஒரு ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட அவருக்கு தடை விதிக்கப்பட்டது. இது அவரது கிரிக்கெட் வாழ்வில் கறுப்புப் பக்கமாக அமைந்தது. ஆனால், தடை முடிந்து மீண்டும் களம் கண்டபோதும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்தினார். 2007-ம் ஆண்டு இங்கிலாந்துடனான டெஸ்ட் ஓய்வு பெற்ற போட்டியுடன் ஷேன் வோர்ன் அதன் பின்னர் டி20 லீக் தொடர்களில் விளையாடினார்.
2007 ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வழிநடத்தினார். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இறுதிப்போட்டியில் தோற்கடித்து முதல் ஐபிஎல் கோப்பையை வென்ற கேப்டன் ஆனார் ஷேன் வோர்ன்.
2013-ம் ஆண்டுக்கு பிறகு அனைத்து வடிவ கிரிக்கெட் ஃபார்மெட்டில் இருந்தும் விலகிய ஷேன் வோர்ன் அதன் பின்னர் தொலைக்காட்சியில் வர்ணனையாளராக பணியாற்றி வந்தார்.
வார்னே வெள்ளிக்கிழமை அன்று தாய்லாந்தில் உள்ள அவரது வீட்டில் சுயநினைவின்றி கண்டெடுக்கப்பட்டார். அவரை மாரடைப்பால் இறந்திருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.மருத்துவ குழுவினர் சிறப்பான வகையில் முயன்றும் அவர்களால் காப்பாற்றமுடியவில்லை என ஷேன் வோர்ன் குறித்த விவகாரங்களை கவனித்துக்கொள்ளும் அவரது நிறுவனம் தெரிவித்துள்ளது.
1993-ம் ஆண்டு ஜூன் 4-ம் தேதி ஒரு இளம் ஆஸ்திரேலிய லெக் ஸ்பின்னர் இங்கிலாந்து பேட்ஸ்மேன் மைக் கேட்டிங்குக்கு வீசிய ஒரு பந்து, அவரது லெக் ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் ஆகி காற்றில் திரும்பி பேட்ஸ்மேனின் ஆஃப் ஸ்டம்பை தகர்த்தது.
அதன் பின்னர்தான் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் அந்த இளைஞனை கவனிக்க தொடங்கியது. யாரும் அதுவரை அப்படி பந்து சுழன்று திரும்பியதை அதுவரை பார்த்ததில்லை. அது 20-ம் நூற்றாண்டின் பந்து என அப்போது புகழப்பட்டது.
இப்போதும் கிரிக்கெட் வரலாற்றின் மிகச்சிறந்த பந்தாக அந்த பந்துவீச்சு கருதப்படுகிறது. அந்த பந்தை வீசியவர் ஷேன் வோர்ன். அப்போது அவருக்கு வயது 23.
நன்றி - பிபிசி