ஸ்ரீலங்கா நிதஹஸ் பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் அச்சாணிகள் என்ற எண்ணப்பாட்டுக்குள்ளிருந்து தேசிய சுதந்திர முன்னணியும், பிவிதுரு ஹெலஉறுமயவும் நீக்கப்பட்டிருக்கிறது. மொத்தம் 11 பங்காளிக் கட்சிகள் உள்ள இந்த அரசாங்கத்தில், இந்த இரண்டு கட்சிகளும்தான் பிரகாசத்திலும், பிரச்சாரத்திலும் பிரதானம் பெறுகின்றன. ஒரு தாய்க்கு அல்லது குடும்பத்துக்கு சில பிள்ளைகள் பெருமையாக அல்லது பொறுப்பாக இருப்பதில்லையா? அவ்வாறுதான். எப்படி இருப்பினும் தோள்வரைக்குத்தான் வளர்ந்தாலும், எந்தப் பிள்ளையும் தாய், தந்தையரின் ஸ்தானத்துக்கு ஈடாகாது. அதற்காக, இவ்விருவரும் அரசாங்கத்தின் ஸ்தானத்துக்கு முயற்சித்ததாக சொல்லவில்லை. குடும்பத்தின் குலவிளக்கையே அணைக்கப் புறப்பட்டு குப்புற விழுந்து விட்டனர். 

இதிலிருந்து "தம்பியுடையான் படைக் கு அஞ்சான்" என்பது தெரிகிறது. அரசாங்கத்தை ஆட்டிப்பார்க்க ஆசையுடையோர், அடிக்கடி அவிழ்க்கும் ஆரூடங்களுக்கும் பதிலளித்திருக்கிறது ஜனாதிபதியின் இந்தப் பதிலடி. பதவி நீக்கப்பட்ட இவ்விருவரும் அரசாங்கத்தை பெரிதாக விமர்சிக்க இல்லையே! குத்துவிளக்கைத்தானே குறிவைத்து விமர்சித்தனர். எனவே, அண்ணன், தம்பிகளுக்குள் உட்பூசல், ஆயுளை இழக்கப்போகிறது அரசாங்கம் என்று வந்த ஆரூடங்கள் எல்லாம், ஏதிலிகளுக்கு தற்செயலாக எழும்பிய நிராசைகள் என்றே இப்போது பொருள்படுகின்றன. 

பங்காளிக்கட்சிகள் கடந்த (02) இல் நடாத்திய "முழு நாட்டுக்கும் சரியான பாதை" என்ற மாநாடு, அரசாங்கம் பிழையான பாதையில் என்ற பார்வையைத் திணிக்கும் போக்கு என்பதுதான், இந்த அரசாங்கத்தின் ஆணிவேரான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிலைப்பாடு. பங்காளிகளின் பலநாள் போக்குகளில் கண்வைத்திருந்த இந்த அரசு, இப்போது காரியமாற்றியுள்ளது. இன்னும் சில காரண, காரியங்களும் நடக்காது என்பதற்கும் இல்லை. அரசியல் அனுபவமுள்ளோருக்கு இது ஆச்சர்யமும் இல்லை. ஆனால், இனியென்ன நிகழும் என்பதில் ஆர்வத்தை அதிகரித்திருக்கும். இந்த அரசாங்கத்தில் யார் பிரதானமானவர்கள்? என்ற வினாவுக்கு விடை இப்போதில்லை. இன்னொரு தேர்தலில்தான் இது வெளிப்படும். ஆனாலும், இதன் அடையாளம் அல்லது முகவரி மெதமுலானைதான். கடந்த நல்லாட்சியும் 52 நாள் பிரதமராக்கி இதை நிரூபித்தும் இருக்கிறது. 

நல்லாட்சியை வீட்டுக்கு அனுப்ப இவ்விருவரும் விதைத்தவைகள், தென்னிலங்கையைச் செழிப்பாக்கியது உண்மைதான். இதற்கு அவசரமாகத் தேவைப்பட்ட பிரச்சார யுக்திகளும் இவ்விருவருடையதுதான். இதிலும், மாற்றுக் கருத்துக்கள் இல்லை. சிறுபான்மையைச் சீண்டி, பெரும்பான்மையைத் தூண்டிய இவர்களின் போக்குகள், ஆட்சிபீடம் ஏறும்வரைக்கும் ஏணியாக உதவியது. இருந்தும் என்ன பலன்? ஏற்றிவிட்ட ஏணியை உதைக்கப் புறப்பட்டுவிட்டனரே! 

இனி, இன்னுமொரு ஏணியை இவர்கள் தேடும் வழிகள் திறக்கப்படலாம். இந்த வழிகளில்தான், சிறுபான்மை சமூகங்களின் தலைமைகள் விழிவைக்க வேண்டும். சமூகங்களுக்கிடையில், இவ்விருவராலும் ஏற்பட்டிருந்த கசப்பான அனுபவங்கள், ஆறாத காயங்களை எல்லாம், வருங்கால வியூகங்களாக இந்தத் தலைமைகள் வகுப்பது அவசியம். "அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைமையை அரசாங்கத்தில் இணைத்தால், அன்றே பதவி விலகுவேன்" என்றவர்கள், இன்று பதவி விலக்கப்பட்டுள்ளனர். எனவே, இவர்கள் சிறுபான்மை தலைமைகள் உள்ள கூட்டுக்குள் வருவார்களா? அல்லது ஏற்கனவே கடைப்பிடித்த கடும்போக்கை கைவிடுவார்களா? இதுதான், சிறுபான்மை தலைமைகள் எதிர்கொள்ளவுள்ள சத்திய சோதனை. 

ஒருவகையில், இவர்களை நீக்கியதில் அரசுக்கு இன்னுமொரு அறுவடை இருப்பதாகவே ஆய்வாளர்கள் அங்கலாய்க்கின்றனர். சர்வதேசத்தில் பூசப்பட முயற்சிக்கப்படும் ஆபத்தான சாயத்திலிருந்து (இனவாதம்) விலகி நிற்பதற்கும் இவர்களது பதவி விலக்கல்கள் பயனளிக்கலாம். இதற்காகவே இவ்விருவரும் விலக்கப்பட்டனர் என்பதுமில்லை. காலநகர்ச்சிக்குள் நடப்பவற்றை மனிதன், தனது கருதுகோளாகக்கொள்வதில்லையா? அதுதானிது. இதைத்தான், 'காகங்குந்த பனம்பழம் விழுந்த கதை' என்று "காகதாலிகள்" சொல்கின்றன.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.