அரசுக்கும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கும் இடையில் சிறந்த நல்லுறவு இருக்கின்றது. எனவே, அரசில் இருந்து வெளியேறவேண்டிய தேவையில்லை. அரசில் இருந்தபடியே மக்களுக்காக போராடும் தைரியம் காங்கிரசுக்கு இருக்கின்றது என்று இ.தொ.காவின் நிதிச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.

அத்துடன், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை 30 ஆம் திகதி கூடும் எனவும், இதன்போது புதிய தலைவர் பதவி இடம்பெறும் எனவும் அவர் கூறினார்.

இன்று (27) நுவரெலியா - நானுஓயா பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வின் பின் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதி செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரனுக்கு ஒதுக்கப்பட்ட பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து ஒரு தொகை பொருட்கள் இன்று நுவரெலியா பிரதேச சபைகுட்பட்ட பெருந்தோட்ட மக்களுக்கும், கிராமபுற மக்களுக்கும் நானுஓயா பிரதேச சபை மண்டபத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான ஏ.பி.சக்திவேல், நுவரெலியா பிரதேச சபை தலைவர் வேலு யோகராஜ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நுவரெலியா பிரதேச சபை உறுப்பினர்கள், இ.தொ.காவின் இளைஞர் அணி பொது செயலாளர் அர்ஜூன் ஜெயராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து அங்கு கருத்து தெரிவித்த நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரன், அரசின் பங்காளிக்கட்சியாக இருந்தாலும் தனியான கொள்கையுடன் செயற்படும் கட்சியே இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸாகும். சர்வக்கட்சி மாநாட்டில் எமது கட்சி ஏன் பங்கேற்கவில்லை என்பது தொடர்பில் கட்சியின் பொதுச்செயலாளர் விரிவாக விளக்கமளித்துள்ளார். நாம் பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம், அவை நிறைவேற்றப்பட வேண்டும். அதற்கான ஓர் நகர்வாககூட இது இருக்கலாம்.

அரசு மீது இ.தொ.கா. அதிருப்தியில் உள்ளது என எதிரணிதான் பிரச்சாரம் முன்னெடுத்து வருகின்றது. எம்மிடையே சிறந்த நல்லுறவு இருக்கின்றது. எவ்வித பிளவும், பிரச்சினையும் இல்லை. அரசுக்குள் இருந்துகொண்டு, எப்படி போராடி மக்கள் உரிமைகளை பெறவேண்டும் என்பது எமக்கு தெரியும்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை 30 ஆம் திகதி கூடும். இதன்போது தலைவர் பதவிக்கு நியமனம் இடம்பெறும்.

அதேவேளை, கோதுமை மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் 40 ரூபா என்ற மானியம் குறையாது என்றார்.

-கிரிஷாந்தன்-

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.