ஒரு வாரத்தில் காதுகுத்து ,  முதலில் வலித்தது வீரென்ற அழுகையோடு -பின் சகித்துக் கொண்டாள்.
 -அவள் பிறந்த பின் கண்ட முதல் வலி.

 காலங்கள் உருண்டோட
அவள் வளர்ந்தால் பத்திரம் பத்திரம் என்று அன்னையின் ஆயிரம் பாதுகாப்பு வளையில் மீண்டும் அவளுக்கு சுள்ளென்று ஒரு வலி அடிவயிற்றை கத்தியால் வெட்டியது போல் - முதலில் அழுதாள் பின்பு பயந்தாள் பிறகு சகித்துக் கொண்டாள்.

 ஆம் அவள் பெண்மையை முழுமைப்படுத்த அடி எடுத்து வைத்து விட்டாள்;  சந்தோசமாய் வீடே கொண்டாட அவள் இது மாதம் தொடரும் வலி என்பதை அறியாமல் சிரித்துக் கொண்டே வளைய வந்தாள் - மாதங்கள் செல்லச் செல்ல அந்த ஏழு நாட்களையும் முதலில் அழுதும் பிறகு தன் வாழ்வின் ஒரு அங்கம் என சகித்துக் கொண்டாள்.

இருபது வயது தாண்டியதும் விரும்பியோ விரும்பாமலோ மணமேடையில் மணப்பெண்ணாய்  மகுடம் சூட்டி -  சொந்த வீட்டைவிட்டு பிறந்த மண்ணை விட்டு புகுந்த வீட்டிற்குள் வலிகளோடு வளைய வந்தாள். 

 மூன்று மாதம் அசதியிலும் மசக்கை வாந்தியுடனும் புது  வரவுக்காய் பத்துத் திங்கள் வலி பலவும்  சகித்துக் கொண்டாள்.

 பல வலிகள் சுமந்த அவள்;  மறுபிறப்பு எடுக்கும் பிரசவ வலியில் மாண்டு மீண்டும் பிறந்து வலி மிகுதியால் கதறினாள் ஆனாலும் மகவின் முகம் கண்டு வலியெல்லாம் கண்ணீரோடு பொறுத்துக் கொண்டாள்...

கணவன் பிள்ளை பேரப்பிள்ளை என்று இயந்திரமாய் சுழன்று சுழன்று பல வலிகளையும் சகித்துக் கொண்டே அவள் வாழ்கிறாள்



```வாழ்க்கையில் பல கட்டத்தில் வலிகளே வாழ்க்கையாக வாழ்ந்து மடியும்  பெண்ணை போற்றா விட்டாலும் பரவாயில்லை அடிமையாய் தூற்றா தீர்கள்... அவளுக்கான அங்கீகாரத்தை நீங்கள் வழங்கினால் உங்கள் வாழ்க்கைக்கான புது அத்தியாயத்தையே அவள் வழங்குவாள்...```

மகளிர் தின நல்வாழ்த்துக்கள்


*இவள் மாஹிரா சிராஜ்*

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.